வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் போன்ற செயலிகளைத் தொடங்கும் போது நம்மிடம் முதலில் கேட்கப் படுவது நம்முடைய கடவுச்சொல் (password). இந்தக் கடவுச்சொல்லைச் செலுத்துவதற்கு பெரும்பாலும் ஆங்கில விசைமுகத்தைத்தான் பயன்படுத்துகிறோம். செல்லினத்தில் உள்ள ஆங்கில விசைமுகத்தைப் பயன்படுத்தி கடவுச்சொல்லைச் செலுத்தினால், சில வேளைகளில் ‘தவறான சொல்’ எனும் செய்தி கிடைப்பதாகச் சிலர் கூறியுள்ளனர். இந்தச் செய்தியைப் பார்த்த மற்றும் சிலர் செல்லினத்தின் வழி கடவுச்சொல் செலுத்துவது பாதுகாப்பானதுதானா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது பாதுகாப்பு தொடர்பான கேள்வி. கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனவே சில விளக்கங்களை இங்கு தருகின்றோம்.
கடவுச்சொல் சிக்கல்
நாங்கள் இதுவரை முயன்று பார்த்த செயலிகளில் மேற்குறிப்பிட்ட சிக்கல் எதிலுமே எழவில்லை. அனைத்துச் செயலிகளிலும் ஆங்கிலத்தில் தான் கடவுச்சொற்களைச் சேர்த்தோம். எல்லாவற்றிலுமே சொற்கள் சரியாக ஏற்கப்பட்டன. சில பயனர்கள் பரிந்துரைத்த செயலிகளையும் பதிவிறக்கம் செய்து பார்த்தோம். அந்தந்த வங்கிகளில் கணக்கு இல்லாததால் குறிப்பிட்ட சில வங்கிகளின் செயலிகளை எங்களால் முழுமையாகப் பயன்படுத்தி ஆய்வுகளைச் செய்ய இயலவில்லை. எங்களுக்குத் தோன்றிய சில சிந்தனைகளைக் கொண்டு ஒருசில மேம்பாடுகளைச் செய்து, தேர்வுநிலைப் பதிப்பாக பதிகை 3.0.8ஐ கூகுள் பிளேயில் பதிப்பித்துள்ளோம். இந்தப் பதிப்பைப் பெற்று கருத்துகளைக் கூற விரும்புவோர் இந்த இணைப்பின் வழி பெற்றுக்கொள்ளலாம். இதில் முழுமையான தீர்வு இருக்கிறதா இல்லையா என்பது பயனரின் கருத்துகளைக் கொண்டே முடிவு செய்ய இயலும்.
தனிப்பட்டத் தரவுகள் பாதுகாப்பு
உள்ளிடு முறைகளை வழங்கும் செயலிகள் (input method apps) பயனரின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். கடவுச் சொற்கள் போன்றத் தரவுகளை சேமித்துக் கொள்ளும் உரிமையை ஆண்டிராய்டு, ஐ.ஓ.எஸ், விண்டோஸ் போன்ற இயங்குதளங்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு வழங்குவதில்லை. இதுபோன்ற தரவுகளைப் பெறாமலும் பாராமலும் இருப்பதை செல்லினம் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. பயனர் உள்ளிடும் எந்தத் தனிப்பட்ட விவரங்களையும் செல்லினம் சேகரிப்பதில்லை. தனிப்பட்ட சொற்பட்டியலில் சேர்க்கப்படும் சொற்களும் கூட செல்லினத்தின் உள் சேமிக்கப்படுவதில்லை. அவை அனைதும் பயனரின் தனிப்பட்ட சொற்பட்டியலில் சேர்ந்துவிடும். எனவேதான் செல்லினத்தை நீக்கினாலும் அந்தச் சொற்கள் நீக்கப்பட மாட்டாது. செல்லினத்தின் இந்தத் தனிப்பட்டத் தரவுகள் பாதுகாப்புக் கொள்கையை இங்கே காணலாம்: Sellinam Privacy Policy
தற்காலிகத் தீர்வு
செல்லினத்தின் ஆங்கில விசைமுகங்களின் வழி கடவுச்சொல் செலுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லையெனில் எங்களைப் போலவே நீங்களும் தொடர்ந்து அவ்வாறே செய்து வரலாம். சிக்கல் இருப்பின், உங்கள் கருவியில் உள்ள இயல்பான ஆங்கில விசைமுகத்தை இப்போதைக்குப் பயன்படுத்தி வாருங்கள். அதே வேளையில், எல்லோராலும் பதிவிறக்கம் செய்து பயன்படுதக்கூடிய செயலியில் இந்தக் கடவுச்சொல் சிக்கல் இருந்தால், அன்பு கூர்ந்து எங்களுக்குச் சொல்லுங்கள். தீர்வுகளைக் கொண்டுவர அது பேருதவியாக இருக்கும்.