தமிழ் எண்கள் எழுத்துகள் ஆகா!

தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இல்லை. திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அனைத்தும் எண்களுக்கான வரிவடிவங்களைக் தனித்தனியே கொண்டிருந்தாலும், இந்தியாவில் இருந்து போய் உருமாற்றம் கண்ட உரோமன் எண்களையே இந்த மொழிகள் இன்று பயன்பாட்டில் கொண்டுள்ளன.  இன்று, தமிழ் எண்களின் பயன்பாட்டைப் பழைய நூல்களிலும், தமிழ் நாட்டில் உள்ள சில வண்டிகளின் பதிவு அட்டைகளிலும் காணலாம்.


தமிழ் எண்கள்நன்றி: Thamizhpparithi Maari (Own work) via Wikimedia Commons

யூனிகோடில் தமிழ் எண்கள்

இன்று புழக்கத்தில் இல்லாவிட்டாலும் தமிழ் எண்கள் சில காலத்திற்குமுன் பயன்பாட்டில் இருந்தன. பயன்பாட்டில் இருந்த, இருக்கின்ற உலகத்தில் உள்ள அனைத்து வரிவடிவங்களுக்கும் குறியீட்டு எண்கள் வழங்கப்படவேண்டும் என்பது யூனிகோடு அமைப்பின் கொள்கை. இதன் அடிப்படையில் 2000களின் தொடக்கத்தில் உத்தமம் அமைப்பின் பரிந்துரைக்கேற்ப தமிழ் எண்களுக்கும் குறியீடுகள் வழங்கப்பட்டன. இன்று கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் இயல்பாக உள்ள தமிழ் எழுத்துருகளில் தமிழ் எண்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ் 99 விசைமுக அமைப்பில் தமிழ் எண்கள்

கணினி பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட மூலத் தமிழ் 99 விசைமுகத்தில் தமிழ் எண்களை எப்படித் தட்டெழுதுவது என்பதற்கான விளக்கங்கள் தெளிவாக இல்லை. இந்த எண்களின் பயன்பாடு வழக்கில் இல்லை என்பதால் இதனை யாரும் விரும்பிக் கேட்கவும் இல்லை.

கையடக்கக் கருவிகளில் விசைமுகங்கள் மென்பொருள் வழியாகவே வடிவமைக்கப் படுகின்றன. இவற்றை மென்விசைமுகங்கள் (soft-keypads) எனவும் அழைக்கலாம். எனவே, விசைமுக அமைப்பை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம். இந்த வசதியைக் கொண்டே செல்லினத்தில் தமிழ் 99 விசைமுகத்தின் மேல்நிலை வரிகளில் தமிழ் எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எச்.டி.சி. நிறுவனம் 2011ஆம் ஆண்டு வெளியிட்ட எக்சுபுளோரர் கருவியில்தான் இதன் முதல் வெளியீடு தோன்றியது. இந்தக் கருவியில் உள்ள தமிழ் எழுத்துருவும் விசைமுகமும் செல்லினமே. தமிழ் 99 விசைமுகம் கையடக்கக் கருவிகளுக்கென சிறிதளவு மாற்றி அமைக்கப்பட்டதும் இங்குதான்.  அதன்பின் ஆப்பிளின் ஐ.ஓ.எசின் ஏழாம் பதிப்பிலும் (iOS 7) இதே தமிழ் 99 விசைமுக அமைப்பு சேர்க்கப்பட்டதால் அதிலும் நமது எண்கள் தோன்றின.

ஏன் இந்தப் பதிவு?

புழக்கத்தில் இல்லாத தமிழ் எண்களுக்கும் செல்லினத்திற்கும் என்ன தொடர்பு? ஏன் இதைப்பற்றி இவ்வளவு பேசவேண்டும்? காரணம் உண்டு. இது அவசியம் கவணிக்கப்படவேண்டிய ஒன்று.

ஒரு மொழியின் எல்லா எழுத்துகளுக்கும் குறியீடுகளுக்கும், வரிவடிவ அமைப்பில் ஒரு சீர்மை இருக்கும். எனவே எண்களும் சில வேளைகளில் எழுத்துகளைப் போலத் தோற்றம் அளிக்கும். அதுபோலவே தமிழில் உள்ள சில எண்களும், எழுத்துகள் போலவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக:

எண் எழுத்து
௧ (ஒன்று) க (ககரம்)
௨ (இரண்டு) உ (உகரம்)
௫ (ஐந்து) ரு (ரு-கரம்)
௭ (ஏழு) எ (எகரம்)
௮ (எட்டு) அ (அகரம்)

இவற்றைத் தவிர பழைய தமிழ் உரூபாய் சின்னமும் தமிழ் 99 விசைமுகத்தின் மேல்நிலை வரிசை ஒன்றில் உள்ளது. இந்த ஒன்று, இரண்டு, ஐந்து, ஏழு, எட்டு, உரூபாய் ஆகியவை தமிழ் எழுத்துகளைபோலே இருப்பதால், எழுத்துகளுக்கு பதிலாக இவற்றைத் தட்டும் பயன்பாட்டை பல இடங்களில் கண்டுள்ளோம். குறிப்பாக ௫ (ஐந்து), ௹ (உரூபாய்) விசைகளை ரு-கரத்திற்கும் ரூ-காரத்திற்கும் உள்ள சிறப்பு விசைகள் என சிலர் கருதுகின்றனர்.

இது தவறான பயன்பாடு. காரணம், இந்த எண்களுக்கும் அவற்றைப் போல் தோற்றமளிக்கும் எழுத்துகளுக்கும் தனித்தனி குறியீடுகள் உள்ளன. ஆங்கிலத்தில் ‘0’ (சுழியம்), ‘O’ (upper case O) இரண்டும் ஒரே வடிவத்தைக் கொண்டுள்ளதைப் போல. இவ்விரண்டும் ஒரே வடிவத்தைக் கொண்டிருந்தாலும் இரண்டிற்கும் இருவேறு குறியீடுகள் உள்ளன.

எண்களை எழுத்துகளாகப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றுள் மூன்றை இங்குக் காண்போம்:

1. தேடுபொறிகளின் கட்டமைப்புகள்

தேடுபொறிகள் (search engines) எழுத்துகளின் பின் உள்ள குறியீடுகளைக் கொண்டே சொற்களைத் தேடுகின்றன. எனவே உருவம் எனும் சொல்லில் ‘ரு’-வுக்கு பதில் ‘௫’ (ஐந்து) எழுதிப் பதிவு செய்தால், அந்தப் பதிவில் வேறொருவர்  ‘உருவம்’ என்று சரியாக எழுதித் தேடும்போது, தேடுபொறியால் தேடி எடுக்க முடியாது.  ‘ரு’-வுக்கு பதில் ‘ஐந்தை’ தவறாக எழுதித் தேடினால்தான் கிடைக்கும். இந்த இரண்டு வடிவங்களையும் கண்களால் வேறுபடுத்த இயலாவிட்டாலும் கணினியால் கண்டிப்பாக வேறுபடுத்த முடியும் – வேறுபடுத்தியே காட்டும்!

2. எழுத்துருகளில் எண்களுக்கான உருவங்கள் இல்லாமை

மேலுள்ள எடுத்துகாட்டைப்போல் ‘உருவம்’ எனும் சொல்லில் ‘ஐந்தை’ வைத்து எழுதி வேறொவருக்குச் செய்தியாக அனுப்பினால், பெறுபவரின் கருவியில் உள்ள தமிழ் எழுத்துருவில் ‘ஐந்துக்கான’ உருவம் இல்லையெனில், ‘உருவம்’ எனும் சொல் சரியான உருவத்தோடு தோன்றாது. இடையில் (5-க்கு பதில்) கட்டங்கள் தோன்றும்.

3. பரிந்துரைகள்

தேடுபொறிகள் போன்றே பரிந்துரைகளும் இயங்குகின்றன. எனவே சரியான எழுத்துகளைப் பயன்படுத்தினால்தான் பரிந்துரைகளும் சரிவர வந்தமையும்.  ‘உ5வம்’ என்னும் ஒரு சொல் தமிழில் இல்லை – எனவே பரிந்துரைகளும் இருக்காது.

நீங்கள் தமிழ் 99 விசைமுகத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், இவற்றை கவனத்தில் கொள்வது நலம். அஞ்சல் விசைமுகத்தில் தமிழ் எண்களுக்கான விசைகள் இல்லை. எனவே இந்தக் குழப்பம் எழ வாய்ப்பில்லை. இருந்தாலும் இந்தப் பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

Did you like this? Share it: