4.0.8 – மின்னூல் பதிவிறக்கம் சரிசெய்யப்பட்டது!

செல்லினத்தின் 4.0.8 ஆம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் பதிப்பினைத் தேர்வுமுறையில் பயன்படுத்திய பயனர்கள் கூறிய கருத்துகளில், தீர்க்க முற்பட்ட சிற்சிலச் சிக்கல்கள் இதில் தீர்ந்துள்ளன.

அதில் முதன்மையானது, “இலவச மின்னூல் வடிவில் செல்லினத்தின் பதிவுகள்!” என்னும் தலைப்பில் வெளிவந்தக் கட்டுரையில் சேர்க்கப்பட்டிருந்த மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என்று பலர் கூறியிருந்தனர். இதற்குக் காரணம் செல்லினத்தின் கட்டுரைப் பகுதியில் உள்ள ஒரு வழு (bug). கட்டுரைகளில் உள்ள எல்லா இணைப்புகளையும் செல்லினத்தின் உள்ளேயே திறக்கும்படி இருந்ததால் நூல்களைப் பதிவிறக்கம் செய்ய இயலாமல் இருந்தது. இது 4.0.8 ஆம் பாதிப்பு முதல் தீர்க்கப்பட்டுள்ளது.

முந்தையப் பதிப்பில் மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்ய இயலாத பயனர்கள், முதலில் 4.0.8 ஆம் பதிப்பிற்கு செல்லினத்தை மேம்படுத்தி அதன் பின் கீழ்க்காணும் இணைப்பைத் திறந்து நூகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செல்லினத்தில் தமிழ் மின்னூல்கள்

மின்னூல்களை எப்படித் திறப்பது?

ஆப்பிள் கருவிகளில் ‘ஐ-புக்ஸ்‘ எனப்படும் இலவச செயலி, மின்னூல்களையும் பிடிஎப் ஆவணங்களையும் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உதவுகிறது. அதேபோல் ஆண்டிராய்டு கருவிகளில் ‘கூகுள் பிளே புக்ஸ்‘ என்னும் செயலியும் உண்டு. இதுபோன்ற செயலிகள் பல இருந்தாலும், இவ்விரண்டு செயலிகளும் முறையே ஆப்பிள், கூகுள் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. அந்தந்தக் கருவிகளில் சரிவர இயங்குவதை இவை உறுதி செய்யும்.

மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்யுமுன் நூல்களை வாசிப்பதற்கு தகுந்த செயலியை முதலில் பதிவிறக்கம் செய்துகொள்வது நல்லது. அதன்பிறகு நூல்களைப் பதிவிறக்கம் செய்தால் அவை தானாகவே வாசிக்கும் செயலிகளுக்குள் சென்றுவிடும்.

‘கூகுள் பிளே புக்ஸ்’ செயலியில் செல்லினப் பதிவுகளைக் கொண்ட மின்னூலைக் கீழ்க்காணும் படங்களில் காணலாம்.

Sellinam-Ebook-Screencaps-1

Sellinam-Ebook-Screencaps-2

முந்தையக் கட்டுரை:

இலவச மின்னூல் வடிவில் செல்லினத்தின் பதிவுகள்!

Did you like this? Share it: