64பிட் செயலிகளில் முரசு அஞ்சல்

Anjal-Icon-2016-100

முரசு அஞ்சல் முதன் முதலில் வெளிவந்த ஆண்டு 1985. அப்போது விண்டோசின் புழக்கம் பரவலாக இல்லை. மைக்குரோசாப்டின் எம்.எஸ்.டாஸ் இயக்கத்தைக் கொண்டிருந்த ‘மவுசு’ இல்லாத கருப்புத் திரையில் பச்சை எழுத்துகளைக் காட்டும் கணினிகளே எங்கும் இருந்தன.  இந்தக் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட முரசு அஞ்சல்தான் இன்று விண்டோசிலும், மெக்கிலும், ஐபோன் ஐபேட் கருவிகளிலும், ஆண்டிராய்டிலும் தமிழில் உள்ளிடுவதற்கான வசதியை சேர்த்து வருகிறது!

எம்.எஸ்.டாஸ் இயங்குதளம் 8பிட் இயக்கத்தையே கொண்டிருந்தது. 1990ஆம் ஆண்டு வெளிவந்த விண்டோசின் 3.0ஆம் பதிப்பும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த 3.1ஆம் பதிப்புமே, அப்போதைய பயன்பாட்டில் இருந்த கொமோடோர் கணிகளுக்கும், இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஆப்பிள் கணினிகளுக்கும் சவாலாக அமைந்து, மிகப் பெரிய வெற்றியையும் அடைந்தன. இவற்றின் இயக்கம் 16பிட் ஆக உயர்த்தது. இவற்றைத் தொடர்ந்து வந்த விண்டோசின் பதிப்புகள் படிப்படியாக மேம்பட்டு இன்று 32பிட் இயக்கங்களாகவும் 64பிட் இயக்கங்களாகவும் வெளிவந்துள்ளன.

பிட் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் என்ன நண்மை? எளிதான விளக்கம் இதுதான்: பிட் அளவு சிறிதாக இருந்தால் கணினியின் நினைவகத்தில் (memory) ஏற்றப்படும் கோப்பின் அளவு சிறிதாகவே இருக்க முடியும். இன்று நமது ஆவணங்களில் படங்களையும் பல்லூடக (multimedia) இணைப்புகளையும் சேர்க்கின்றோம். இவை ஆவணங்கள் அளவை பெரிதாக்குகின்றன. எனவே இந்த ஆவணங்களை முழுமையாகக் கணினியில் ஏற்ற, பெரிய பிட் அளவு தேவைப்படுகிறது. இன்று வெளிவரும் கணினிகள், ஏன் கையடக்கக் கருவிகள் கூட, 64பிட் இயக்கத்தைக் கொண்டே வெளிவருகின்றன!

முரசு அஞ்சல் – மார்ச்சு 2016

செல்லினத்தின் முன்னோடியாக இருந்த முரசு அஞ்சல், ஏற்கனவே 64பிட் கணினிகளில் இயங்கினாலும், எல்லா 64பிட் செயலிகளிலும் தமிழில் உள்ளிட இயலாமல் இருந்தது. இந்தக் குறை அன்மையில் நீக்கப்பட்டது. மார்ச்சு மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட முரசு அஞ்சலின் பதிப்பு அனைத்து 64பிட் செயலிகளிலும் தமிழில் உள்ளிட வழிவகுத்துள்ளது. இலவசப் பதிப்பான முதல் நிலைப் பதிப்பும் இந்த வசதியைத் தருகின்றது!

மைக்குரோசாப்ட் ஆபீசின் 64பிட் பதிப்புகளிலும் இனி முரசு அஞ்சல் வழங்கும் எல்லா உள்ளிடு முறைகளிலும் தமிழில் உள்ளிடலாம். பெரிய அளவிலான ஆவணைங்களை, முழுமையாகக் கணினியில் ஏற்றி, விரைவாகவும் எளிதாகவும் தமிழில் தொகுக்கலாம்.

முரசு அஞ்சல் உள்ளிடுமுறைகளைக் கொண்டு 64பிட் செயலிகளிலும் தமிழில் எழுதலாம்.64பிட் இயக்கம் தேவையெனில், ஏற்கனவே உள்ள பதிப்பை உங்கள் கணினியிலிருந்து நீக்கிவிட்டு, இந்தப் பதிப்பைப் பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். முதல் நிலைப் பதிப்பு இலவசம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். முழுநிலைப் பதிப்பை ஏற்கனவே வைத்திருப்பவர்கள் இந்தப் பதிப்பை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம். வரிசை எண்ணில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தப் பதிப்பின் வெளியீடோடு அஞ்சல் இணைய தளமும் மறுசீரமைப்பைப் பெற்றுள்ளது. இந்தப் பதிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் http:/anjal.net -இல் பெற்றுக்கொள்ளலாம்.

கையடக்கத்தில் செல்லினம் – கணினியில் முரசு அஞ்சல்!

Did you like this? Share it: