ஏன் செல்லினத்தை நான் பயன்படுத்துகிறேன்?

தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘இயற்கை மொழியாய்வுப் பயிலரங்கில்’ நண்பர் தினகரனைச் சந்தித்தேன். செல்லினத்தை அவர் எப்படியெல்லாம் பயன் படுத்துகிறார் என்பதை அவர் கூறக் கேட்டபோது, ஈன்ற பொழுதில் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் பெற்ற இன்பம் உலகமும் பெறவேண்டுமே என்று கேட்டபோது, அவர் கூறிய கருத்துகளை கட்டுரையாகத் தர முன்வந்தார். அவர் வரிகளை, உங்களுக்கும் பயனளிக்கும் என்னும் நம்பிக்கையில், அப்படியே இங்கு வெளியிட்டு மகிழ்கிறோம். அன்புடன், முத்து நெடுமாறன்.


செல்லினத்தை ஏன் பயன்படுத்துகிறேன்?

திறன் பேசிகளில் தமிழ்

திறன் பேசிகளில் இப்போது பல தகவல்களைப் பரிமாறுகிறோம். நமது மொழியில் செய்தியை பகிர்வது என்பதற்கு இணையான இன்பம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி தமிழ் உள்ளீடு செய்ய விசைப்பலகை தேடிய போது ஆன்ராய்டில் இலவசமாக சில செயலிகள் கிடைத்தன. Tamil visai, Ezuthani, Swarachakra, Easy Type Tamil, Google Indic Keyboard, Simple Tamil, Swype + Dragon என இன்னும் பல விசைப்பலகைகளையும் பயன்படுத்தியற்கு பிறகு நமக்கு ஏற்ற விசைப்பலகை செயலி செல்லினம் என்பதை உணர்ந்தேன்.

செல்லினத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

எல்லாவற்றிலும் தமிழ் உள்ளீடுதான் இருக்கிறது. இருக்க வேண்டும் என்றாலும், செல்லினத்தின் ஒரு நேர்த்தி (Perfection) இருக்கிறது. தமிழில் மிக நல்ல விசைப்பலகை வழி தமிழ்99 என்பதும், இவ்விசைப்பலகையே உலக தமிழ் இணையத்தால் அங்கிகரிகப்பட்ட விசைப்பலகை என்பதும் நாம் அறிந்ததே. என்னுடைய விருப்பத் தேர்வு தட்டச்சு முறையான தமிழ்99 இதில் உள்ளது.
 இவர்கள் தமிழ்99 விசைப்பலகையில் ஏற்படுத்திய மாற்றம்தான் மற்ற செயலியில் இருந்து தனித்து நிற்கிறார்கள். ஆம். பொதுவாக தமிழ் 99 விசைப்பலகையில் எழுத்தின் மீதான தலைப்புள்ளி வைக்கும் போது Keybaord – ல் ‘F’ விசையினை தட்டுவோம். இந்த தலை மேற்புள்ளியினை இடைவெளி விசைக்கு (space Bar) க்கு அடுத்த நிலையில் வைத்துள்ளனர். இந்த மாற்றத்தினால் எழுத்து வரிசைக்கு இடையிலான நல்ல இடைவெளி கிடைக்கிறது. விரைவுத் தட்டச்சு கைகூடுகிறது. கூகுள் இன்டிக் போர்டுகளில் F விசையில் மேற்புள்ளி இருப்பதால் தட்டச்சு செய்யும் போது ஒரு விசையோடு ஒரு விசை மோதி நெருக்கடி ஏற்படுவதை உணர்ந்தேன். மிகச்சாதுரியமாக இந்த நெருக்கடியினை கலைந்திருக்கிறார்கள் செல்லினம் குழுவினர். விபத்தை குறைக்க இடைவெளி தாவையல்லவா? அந்த இடைவெளிதான் அது.

சொற்பட்டியல்

இரண்டு அல்லது மூன்று எழுத்தினை தட்டச்சியவுடன் அதற்குறிய சொல் தேர்வு வந்து விடுகிறது. சொற்களை முழுமையாக தட்டச்சு செய்யவேண்டிய அவசியமே இல்லை. சொற்தேர்வு மூலம் நீங்கள் அடுத்த சொல்லிற்கு தாவுதல் எளிமையாக இருக்கிறது. இது தமிழ் எழுத்து தெரிந்த விசைப்பலகை மட்டுமல்ல தமிழ் தெரிந்த விசைப்பலகை செயலி என்பதை அறிந்தேன். இதில் மொத்தம் 1,00,000 (ஒரு லட்சம்) சொற்கள் இருப்பது நிறைவான நம்பிக்கையினை அளிக்கிறது.

குறைந்த முயற்சியே போதுமானது

‘கட்டிடம், வந்தான், அடுத்த…..’ போன்ற சொற்களை தட்டச்சு செய்யும் போது இரண்டு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வரும் போது மேற்புள்ளியினையும் ‘ந’ பிறகு ‘த’ வரும்போது ந-விற்கு மேற்புள்ளியையும் அதுவாக வைத்துக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. எனவே இது தட்டச்சு நேரத்தை குறைப்பதுடன் விசையை சொடுக்கும் முயற்சியும் குறைவாக இருக்கிறது. கூகுள், எழுத்தாணி உள்ளிட்ட மற்ற செயலிகளில் தமிழ் 99 விசைப்பலகை அளித்திருப்பினும் இந்த வசதி இல்லை. எனவே அதிகமான விசையினை பயன்படுத்தி தட்டச்சு செய்வேண்டியுள்ளது. செல்லினம் முழுமையான இலக்கண விதிப்படியான எழுத்துணர் கருவியாக உள்ளது. Less tension more work என்பார்களே அதைப்போல இதை ஒரு Brilliant Keyboard ஆக உணர்ந்தேன்.

சுருக்கு வழி உள்ளீடு

அவசர உலகத்தில் எதற்கும் நேரமில்லை, பட்டனைத்தட்டினால் ரெண்டு இட்டிலியும் தொட்டுக்க சட்டினியும் வரவேண்டும் என்ற கலைவாணரின் பாடலுக்கேற்ப செல்லினத்தில் இரண்டு தட்டெழுத்தில் சொற்றொடர்களை உருவாக்க முடிகிறது. ஆம் நமக்கு Personal Dictionary என்ற சொல் வங்கியை அளிக்கிறார்கள். இதன்மூலம்,  ‘தமிழ் இணையக் கல்விக் கழகம்’ என்ற 26 விசைகளில் தட்டச்சிட வேண்டியதை மூன்றே உள்ளீட்டில் என்னால் எழுத முடிகிறது. அதுமட்டுமல்ல உங்கள் முகவரி, மின்னஞ்சல் என நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல்லினை குறியீடு முறையில் சேர்க்க முடியும். ‘Short Hand’ கேள்விப் பட்டிருப்பீர்கள், இது Short Type என வைத்துக் கொள்ளுங்களேன். இதனால் செல்லினத்தின் பயன்பாடு வானூர்தி வேகமெடுக்கிறது.

நல்ல ஆரம்பமே நல்ல முடிவு

ஆமாம், திருக்குறள் ஒப்புவிக்கும் போதும் ஆரம்பம் சொன்னால் போதும் சிலர் மள மளவென சொல்லிவிடுவார்கள். அதுபோல ‘சொல்லுக’ என தட்டச்சினால் போதும் அடுத்த பகுதியில் ‘சொல்லை’ என்றும், அதன் தொடர்ச்சியாக ‘பிரிதோர்ச்சொல்’ எனவும் திருக்குறளை அழகாக எந்த எழுத்தையும் தட்டச்சு செய்யாமல் சொல் தேர்வு மூலமே உங்களால் நிறைவு செய்ய இயலும். கொன்றை வேந்தன் நம் கைக்குள்ளே குடி வந்துவிடுவார். ஊக்கமது என தட்டெழுத்து செய்த அடுத்த சொல்லே…. ‘கைவிடேல்’ என்ற சொல் வந்து விடுகிறது. இது நமக்கு ஊக்கமாக இருக்கிறது.

தகராறுக்கு எந்த ‘று’

‘சின்னத் தகராறுக்கு சின்ன ரு –ம் பெரிய தகராறுக்கு பெரிய று –ம் போடு’ என வேடிக்கையாக சொல்லுவார்கள். செல்லினம் உங்கள் கையில் இருப்பின் இந்த தகராறே இல்லை. ஏனெனில் திறன் பேசியில் தட்டச்சு செய்யும் போதே சொல் தேர்வு இருப்பதால் தவறின்றி தமிழ் எழுதுவது சாத்தியமாகிறது. தவறாக நீங்கள் தட்டச்சு செய்வீரானால் அதனை அதுவாகவே திருத்தும் வசதி இதில் உள்ளது.

ஆங்கில வழியிலும் தமிழ்

ஆங்கிலதில் தட்டெழுதி தமிழில் வரவழிக்கும் பொனிடிக் முறையும் உண்டு. தமிழ் 99 பழகாத ஆரம்ப நிலை பயனர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல ஒரே விசையில் ஆங்கிலம் தட்டச்சு செய்யலாம். Play storeல் கிடைக்கும் மற்ற செயலிகளின் விசைப்பலகையில் இந்த இருமொழி மாற்றும் சிக்கல் அதிகமாக இருக்கிறது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்ற கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கிறது. இதில் மிக எளிது அதுமட்டுமல்ல ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போதும் சொற்தேர்வு இருக்கிறது. இரண்டிலும் உத்வேகமாக தட்டச்சலாம். ஆம் ஆங்கில வழியிலும் சொற்பட்டியல் இருப்பதால் இரு வேறு விசைப்பலகையினை நாம் கைக்கொள்ளத் தேவையில்லை.

நெடுந்தொடர்

நிறைய தட்டச்சு செய்ய வேண்டும் என நினைக்கும் போது அது திறன் பேசி மற்றும் டேப்லட் எனப்படும் பலகை கணினியிலும் இயலுவதில்லை. செல்லினம் இதற்கு தீர்வு கண்டுள்ளது. External Keyboard கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது. பல முன்னணி செயலியினை முயற்சி செய்து தோற்றுவிட்டேன். மற்ற தமிழ் உள்ளீட்டு முறையில் இது இயலவில்லை என்பது உண்மை. உங்கள் மொபைல் OTG support செய்யுமானால் wireless அல்லது External Keyboard ஐ இணைத்து பயன்படுத்தி வேகமாக தட்டச்சு செய்ய இயலும்.
OTG support செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, இருக்கவே இருக்கிறது. ப்ளூடூத் விசைப்பலகை. டாங்களோ அல்லது கேபிளோ இல்லாமல் மிக எளிதாக தமிழ் தட்டச்சு செய்ய இயலும். அது மட்டுமல்ல External Key board ல் பழகும் போது அதுவாகவே F விசையினை மேற்புள்ளியாக எடுத்துக்கொள்ளும். எந்த குழப்பமும் இன்றி வேகமாக உள்ளீடு செய்யலாம். நானறிந்த வரையில் வேறெந்த செயலியிலும் இது சாத்தியமில்லை. இது செல்லினம் நமக்கு அளிக்கும் கூடுதல் வசதி.

வட்டார வழக்கில் உரையாடுவோம்

செந்தமிழில்தான் செய்தி அனுப்ப வேண்டும் என்றில்லை உங்கள் வட்டார வழக்கு பேச்சு மொழியிலேயே உரையாடலாம். எப்படி சொன்னால் புரியுமோ அந்த சொல்லை உங்கள் சொற்பட்டியலில் சேர்த்து கொள்ளும் வசதியினை அளித்துள்ளார்கள். உங்களது தமிழ் சென்னைத்தமிழாக இருந்தாலும் கொங்குத்தமிழாக இருந்தாலும் நெல்லைத்தமிழாக இருந்தாலும் கட்டம் கட்டி கலக்குங்கள். ஒரே கணக்கில் உள் நுழைவது மூலம் கருவிகளை மாற்றினாலும் கவலையில்லை. உங்கள் மொழி உங்களுடனே இருக்கும். ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், சயட, சயட சயடா..’’ என கலக்குங்கள்.

செல்லினம் வெறும் விசைப்பலகையா?

அப்படி ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்திட முடியவில்லை. ஏனெனில் ஆத்திச்சூடி, திருக்குறள் உட்பட அனைத்தும் உள்ளே இருக்கிறது. இவை வெறும் எழுத்து முறைகள் என வரையறுக்க முடியவில்லை. அதனைத்தாண்டி காலத்திற்கேற்றவாறு மேம்படுத்தப் பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு தகுந்தவாறு நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டே வரும் உயிர்ப்புள்ள செயலியாக இது இருக்கிறது. செல்லினத்தில் என்ன இடர்பாடு என்றாலும் அதனை உடனடியாக சரிசெய்கிறார்கள். சென்னை நெல்லிக்குப்பம் பகுதியின் ஒரு தெருக்கோடியில் இருந்து ஒருவர் எனக்கு வெளி விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்ய முடியுமா? என கோரிக்கை வைக்கிறார். அடுத்த பத்து நாட்களுக்குள் அந்த வசதி இந்த செயலியில் மேம்படுத்தப் பட்டு புதிய பதிப்பு வருகிறது. இதை வணிகப்படுத்த வேண்டும் நோக்கம் ஏதுமின்றி எங்கும் தமிழ் படுத்த வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி இருக்கிறது. இன்னும் பல வசதிகளையும் மாற்றங்களையும் செய்ய அணியமாக இருக்கும் செயலி செல்லினம் என்பதால் என்னுடைய முழு முதற் தேர்வு செல்லினம்.

இன்னும் என்ன தேவை

ஆங்கிலத்தில் இருப்பது போல பேசினால் தட்டச்சு செய்து கொள்ளும் வசதி (கொஞ்சம் பேராசைதான்), Swype என விலால் வரைகோடுகள் மூலம் தட்டச்சு செய்யும் முறை, திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி உள்ளது போல் அனைத்து இலக்கியங்கள், தமிழ்ப்பெயர்கள், கண்ணைக்கவரும் தீம்கள் நம்முடைய தேவை நீண்டு கொண்டே போகிறது. ஆனால் தொழிநுட்பத்தாலும் இது நாளுக்கு நாள் மேம்படுத்தும் செயலி என்பதால் சாத்தியம் இருக்கிறது என கருதுகிறேன். நிறுவுனர் முத்து நெடுமாறன் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து ஒரு மலர் கொத்து… இல்லை இல்லை ஒரு மலர் தோட்டமே … வழங்கலாம்!

சிவ. தினகரன், ஆய்வுத்தகைமையர்,
தமிழ் இணையக் கல்விக் கழகம்.
சென்னை
aforamma@gmail.com

Did you like this? Share it: