உரையாடல் செயலிகள், திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே பயன்பாட்டில் முதலிடம் பெற்று வருகின்றன. வாட்சாப், வீச்செட், லைன், தெலிகிராம் போன்ற செயலிகளின் தோற்றத்திற்கு முன் பயன்பாட்டில் இருந்த குறுஞ்செய்திச் சேவையில் (எஸ்.எம்.எஸ்) ஒவ்வொரு செய்திக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இந்தச் செயலிகள் பரவலான பயன்பாட்டிற்கு வந்தபின் குறுஞ்செய்திச் சேவையின் பயன்பாட்டை அதிக அளவு குறைத்துவிட்டது. நீண்ட செய்திகள் மட்டுமல்லாமல், நிழல்படங்கள் (photos), நிகழ்படங்கள் (videos), குரல் பதிவு (voice) போன்ற பல்லூடகச் செய்திகளையும் எளிதாக அனுப்பும் வாய்ப்பினை இந்தச் செயலிகள் தருகின்றன.
திறன்பேசிகளோடு நின்றுவிடாமல், உரையாடல் செயலிகள் இப்போது கணினிகளிலும் இயங்கத் தொடங்கியுள்ளன. முன்னனிப் பயன்பாட்டில் உள்ள தெலிகிராம், லைன் போன்ற செயலிகள், விண்டோசிலும் மெக்கிலும் இயங்கக்கூடிய பதிப்பை ஏற்கனவே தந்துவிட்டன. முதல் நிலையில் உள்ள வாட்சாப், கையடக்கக் கருவிகளுக்கு அப்பால், இணைய உலாவிகளில் மட்டுமே இயங்கிவந்தது. இன்று வாட்சாப்பும் கணினிகளுக்கான பதிப்பினை வெளியிட்டுள்ளனர். மெக்கிண்டாசு கணினியில் இயங்கும் வாட்சாப் செயலியின் படம் இதோ:
கணினிகளில் இந்தச் செயலிகள் இயங்கும்போது, கையடக்கத்திற்கு வரும் எல்லாச் செய்திகளும் கணினிக்கும் வருகின்றன. கணினியில் இருந்து மறுமொழி இடும்போது கையடக்கத்திலும் அவை தோன்றுகின்றன. இரண்டு கருவிகளில் இருந்து மாறிமாறிச் செயல்பட்டாலும் நடக்கும் உரையாடல் ஒன்றாகவே அமைகிறது.
கணினிவழி உரையாடலில் உள்ள வசதிகள்
கணினியில் வேலை செய்யும்போது, ஒரு செயலை மட்டும் நாம் செய்வதில்லை. உரையாடல்கள் கூட பல இடங்களில் நடைபெறும். மின்னஞ்சல் ஒரு புறம், ஸ்கைப் ஒருபுறம், நடுவில் வெர்டு, பவர் பாய்ண்டு போன்ற செயலிகள். கையடக்கக் கருவிகளிலோ, பெரும்பாலும் ஒரு நேரத்தில் ஒரு செயலியை மட்டுமே இயக்குகிறோம். பல செயல்களின் நடுவே கணினிகளில் இருக்கும்போது, இந்த உரையாடல் செயலிகள் எவ்வாறு நமக்கு உதவுகின்றன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். இந்த வசதிகள் கையடக்கத்திலும் இருக்கின்றன. என்றாலும் கணினியில் கிடைக்கும் பயன்பாட்டு எளிமை கையடக்கத்தில் நமக்குக் கிடைப்பதில்லை.
- மின்னஞ்சல் வழி நமக்கு அன்றாடம் பல சுவையான செய்திகள் வருகின்றன. இவற்றை எளிதாகவே உரையாடல்களுக்கு அனுப்பலாம்.
- மற்ற செயலிகளில் உள்ள நிழற்படங்களையும், நிகழ்ப்படங்களையும் எளிதாக இழுத்து (drag) உரையாடலில் போடலாம் (drop).
- கணினியில் உரையாடல்களை எழுதும்போது, சற்று விரிவாகவும் விரைவாகவும் எழுதலாம்.
- மற்ற செயலிகளில் உள்ள பனுவல்களை (text) வெட்டி, உரையாடல்களில் எளிதாகவே ஒட்டலாம்.
- குழுமங்களை எளிதாக உருவாக்கலாம், அவற்றைப் பராமரிக்கலாம்.
இதுபோல இன்னும் பல வசதிகளை, கணினியில் இயங்கும் உரையாடல் செயலிகள் நமக்குத் தருகின்றன.
இந்த முன்னேற்றங்களில் எல்லாம் நமக்கு உற்சாகம் அளிப்பது, அவை தமிழிலும் இயங்கக்கூடிய வல்லமையைப் பெற்றிருப்பதே. கையடக்கத்தில் செல்லினமும் கணினிகளில் முரசு அஞ்சலும் ஒருமுகப்படுத்தப்பட்ட பயன்பாட்டைப் பயனர்களுக்குத் தொடர்ந்து வழங்கிவர வேண்டும் என்பதே எங்கள் கனவு!
தொடர்புடைய கட்டுரைகள்: