சென்னையில் ஆண்டுதோறும் நடைப்பெற்று வரும் புத்தகக் கண்காட்சி இவ்வாண்டும் 39ஆவது முறையாக பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் இணையக் கல்விக் கழகமும் ஓர் அரங்கை அமைத்துள்ளார்கள். கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் தமிழின் பயன்பாடு குறித்து விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். அகன்ற திரை ஒன்றில் ஆண்டிராய்டு திறன்பேசியின் திரையைக் காண்பித்து அதில் செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடும் வழிமுறைகளைத் தெளிவாக விளக்கிக் கொண்டிருப்பது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ள ஒன்றாக அமைந்துள்ளது. விரும்பும் பயனர்களுக்கு, செல்லினத்தின் இணைப்பைப் பகிர்ந்து அங்கேயே தரவிறக்கம் செய்தும் தருகிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’ என்னும் ஆங்கில நாளேடும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக செல்லினத்தின் பதிவிறக்க எண்ணிக்கையும் பதிகை மேம்பாட்டு (version update) எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
கணினிகளைவிட கையடக்கக் கருவிகளின் பயன்பாடே நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற கண்காட்சிகளில் செயல்முறைக் காட்சிகளின்வழி தெளிவான விளக்கங்களைத் தந்தால் தொழில்நுட்பப் பயிற்சி இல்லாதப் பயனரும் எளிதாகக் தமிழில் உள்ளிடவும் செய்திப் பரிமாற்றங்களை நடத்தவும் உதவும். இது தமிழின் பயன்பாட்டைக் கூட்டுவதோடு வருக்காலச் செயலிகள் தமிழியேயே முழுமையாக இயங்கக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
இந்த அரிய பணியை மேற்கொண்டிருக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தாருக்கு நமது நன்றிகளும் வாழ்த்துகளும்!