மொழிகளுக்குள் பிணைப்பு

உலகெங்கிலும் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின்படி, மனிதர்கள் பேசும் மொழிகள் அனைத்தும் சில குறிப்பிட்ட பொதுவான மறைமுக விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ‘மாக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் நிறுவனம்’ (Max Planck Institute for Evolutionary Anthropology), சாட்லாண்ட் பல்கலைக்கழகத்தின் (Saarland University) ஆய்வாளர்கள் இணைந்து இந்த மாபெரும் ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக வரலாற்றிலேயே மிக அதிகமான இலக்கணக் கூறுகளைக் கொண்ட ‘கிராம் பேங்க்’ (Grambank) என்ற உலகளாவிய மொழியியல் தரவுத்தளத்தைப் பயன்படுத்தினர்.

உலகில் மொழிகள் எவ்வாறு தோன்றின என்பதையும் அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதையும் ஆராய 191 இலக்கண விதிகளை அடிப்படை அளவுகோலாக ஆய்வாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதுவரை நடத்தப்பட்ட மொழியியல் ஆய்வுகளிலேயே இதுவே மிகப்பெரிய அளவிலான ஒப்பீட்டு ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய மரபார்ந்த ஆய்வுகளில், புவியியல் ரீதியாக மிக அருகில் இருக்கும் மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் வரலாற்றுப் பகிர்வினால் அல்லது அண்டை நாடுகளின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதனால், ஆய்வாளர்கள் பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மொழிகளை மட்டுமே ஒப்பிட்டு வந்தனர். ஆனால், இந்த அணுகுமுறையால் மொழிகளின் உண்மையான பரிணாம வளர்ச்சியைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

இந்தக் குறையைத் தீர்க்க, தற்போதைய புதிய ஆய்வில் ‘பேய்சியன் இடஞ்சார்ந்த-வடிவமைப்புப் பகுப்பாய்வு’ (Bayesian spatio-phylogenetic analysis) என்ற நவீன தொழில்நுட்ப முறையை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு மொழியின் தொன்மையான மரபையும், அது உருவான புவியியல் இருப்பிடத்தையும் ஒரே நேரத்தில் கணக்கில் கொண்டு, எந்தவித சார்பும் இல்லாத துல்லியமான புள்ளிவிவர முடிவுகளை ஆய்வாளர்களால் பெற முடிந்தது.

மறைந்திருக்கும் பொதுவான விதிகள்

இந்த விரிவான ஆய்வின் மூலம், மனித மொழிகளுக்குள் இருக்கும் சில சுவாரஸ்யமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஆய்வாளர்கள் பரிசோதித்த 191 உலகளாவிய மொழியியல் விதிகளில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி விதிகள் (சுமார் 35%) வலுவான புள்ளிவிவர ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதாவது, உலகெங்கிலும் உள்ள அனைத்து மொழிகளும் முழுமையாக ஒரே விதியைப் பின்பற்றாவிட்டாலும், கணிசமான எண்ணிக்கையிலான மொழிகள் ஒத்த இலக்கணக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

ஒரு வாக்கியத்தில் வினைச்சொற்கள், செயப்படுபொருளுக்கு முன்னால் வர வேண்டுமா அல்லது பின்னால் வர வேண்டுமா போன்ற வாக்கிய அமைப்புகள், எந்தவொரு வரலாற்றுத் தொடர்பும் இல்லாத, உலகின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் மொழிகளிலும் கூட ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவரான ஆன்மேரி வெர்கெர்க் இதுகுறித்துக் கூறும்போது, “உலகில் இவ்வளவு மாபெரும் மொழியியல் பன்முகத்தன்மை நிலவினாலும், மொழிகள் தற்செயலாக பரிணாம வளர்ச்சி அடைவதில்லை என்பது மிகவும் வியப்பளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மொழிகள் காலப்போக்கில் மாறினாலும், அந்த மாற்றங்களுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு இருப்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. மனித மூளையின் சிந்தனை முறை உலகெங்கிலும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்கள் உருவாக்கும் மொழிகளின் இலக்கண தீர்வுகளும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே அமைகின்றன போலும்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now