மனிதரின் எழுதும் திறனில் மாற்றம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மனிதர்களின் ‘எழுதும் திறன்’ மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

அலைபேசித் திரையில் தட்டச்சு செய்யத் தொடங்கும்போதே, அடுத்த சொல்லை அதுவே காட்டும் முன்கணிப்பு உரை (Predictive text) தொழில்நுட்பம் முதல், ஒரு முழு நீளக் கட்டுரையையே நொடிகளில் பளபளப்பாக மாற்றும் பெருமொழி மாதிரிகள் (LLMs) வரை, செயற்கை நுண்ணறிவு இன்று நமது எழுத்துக்கான இடைவெளியை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா, மினசோட்டா பல்கலைக்கழகங்கள் இணைந்து கூட்டு ஆய்வை நடத்தின. 100 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சார்ந்து எழுதுபவர்கள், ஓரளவுக்கு மட்டும் உதவிக்காகப் பயன்படுத்துபவர்கள், தாங்களாகவே எழுதுபவர்கள் எனப் பயனர்கள் பிரிக்கப்பட்டனர். ஆய்வாளர்கள் இவர்களின் இறுதிப் படைப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதிகப்படியான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது எழுத்தின் தனித்துவத்தை எவ்வாறு சிதைக்கிறது என்பதற்கான வலுவான புள்ளிவிவர ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஒரு மனிதன் எழுதும்போது அவனது தனிப்பட்ட அனுபவங்கள், உணர்ச்சிகள், ஒரு தனித்துவமான குரல் அதில் வெளிப்படும். ஆனால், செயற்கை நுண்ணறிவை அதிகமாகப் பயன்படுத்தும்போது, அவை இலக்கண ரீதியாக மிகத் துல்லியமான வாக்கியங்களை உருவாக்கினாலும், ஒரு குறிப்பிட்ட பொதுவான வடிவத்திற்குள்ளேயே சுருங்கிவிடுகின்றன. மனித எழுத்தில் இயல்பாகக் காணப்படும் உணர்ச்சிப் பூர்வமான வெளிப்பாடுகளும் தனிப்பட்ட கருத்துப் பதிவுகளும் குறைந்து, இயந்திரத் தன்மையே மேலோங்குவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் மிக அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு மனித எழுத்தின் வடிவத்தை மட்டுமன்றி, அதன் உள்ளடக்கத்தின் பொருளையே மாற்றியமைக்கிறது என்பதுதான். செயற்கை நுண்ணறிவை அதிகமாக நம்பியிருந்தவர்களின் பதில்கள், அவர்களின் உண்மையான சொந்தச் சிந்தனையிலிருந்து உருவான கருத்துக்களைவிட முற்றிலும் மாறுபட்டிருந்தன. அதாவது, ஒருவர் மனத்தில் என்ன நினைக்கிறாரோ, அதை அப்படியே வெளிப்படுத்தாமல், அந்த செயற்கை நுண்ணறிவு எதை நோக்கி நகர்த்துகிறதோ, அதற்கேற்ப அவரது இறுதி வாதம் மாறிவிடுகிறது.

இங்குதான் ஒரு களிநயமான உளவியல் உண்மையை கவனிக்க வேண்டும். நெருக்கடி உந்துதல் விளைவு (Hyper-efficiency Trap) என்று அழைக்கப்படும் இந்தச் சூழலில், மனித மூளை கடினமான சொற்களைத் தேடுவதையோ அல்லது வாக்கியங்களைச் செதுக்குவதையோ தவிர்த்து, செயற்கை நுண்ணறிவு தரும் எளிமையான தீர்வுகளை மிக விரைவாக ஏற்றுக் கொள்கிறது.

இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் புதிய கருத்துக்களை உருவாக்கும் திறனே மழுங்கிப்போகும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இந்தத் போக்கு நீடித்தால் இணையத்தில் பகிரப்படும் உள்ளடக்கங்களின் தனித்துவமும் பன்முகத்தன்மையும் முற்றிலும் அழியும் நிலை உள்ளது. மக்கள் தங்களின் முதல் வரைவை செயற்கை நுண்ணறிவுச் செயலி மூலம் உருவாக்கி, பின்னர் தாங்களே திருத்துவதாக நினைக்கின்றனர். ஆனால் அந்த மென்பொருள் ஆரம்பத்திலேயே கட்டுரையின் மையப் புள்ளியை தீர்மானித்துவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 19-ஆம் நூற்றாண்டில் தட்டச்சுப் பொறிகள் அறிமுகமானபோது, அது மனிதர்களின் எழுத்து வேகத்தைக் கூட்டியதே தவிர, அவர்கள் என்ன எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவில்லை. ஆனால், இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனித சிந்தனைக்கு மாற்றாவதாக ஆய்வார்கள் கருதுகிறார்கள். நரம்பியல் ஆய்வுகளின்படி, மனிதர் சிந்தித்து எழுதும்போது அவரது மூளையின் பல பகுதிகள் ஒரே நேரத்தில் சுறுசுறுப்படைகின்றன. ஆனால், அனைத்தையும் செயற்கை நுண்ணறி​விடம் ஒப்படைக்கும்போது மூளையின் அந்தப் பகுதிகள் செயலற்ற நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

எழுத்து என்பது மனித மூளையின் சிந்தனையின் எதிரொலி. அதை மனிதர்களிடமே வைத்திருப்பதுதான் மனித நாகரிகத்தின் பன்முகத்தன்மைக்கு நல்லது என்ற முக்கியமான வழிகாட்டலை வழங்கியிருக்கிறது இந்த ஆய்வு. எழுதத் தெரிந்தோர் உதவியைத் தவிர்த்து எழுதுவதும், எழுதப் பழகுவோர் தொடக்கநிலையைக் கடந்ததும் செயற்கை நுண்ணறிவைத் தவிர்த்து எழுதுவதும் நற்பலன் தரும்.

  • மு. இசக்கிமுத்து

https://www.nbcnews.com/tech/tech-news/ai-changing-style-substance-human-writing-study-finds-rcna263789

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now