மொழி நம் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. மொழி உணர்வால் உந்தப்பட்டுத் தம் மொழியை வாழ வைக்கும் மனிதர்களும் உண்டு. தையினோ இனத்தவரான பிரிசில்லா கோலன் அப்படியானவர்களில் ஒருவர். அழிந்ததாகக் கருதப்பட்ட தையினோ மொழியை உயிர்ப்பித்துக் கற்பிக்கும் முயற்சியில் இருக்கிறார். கணிசமான அளவு அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

1492ஆம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் கொலம்பஸ். உலகளவில் மிகக் கடுமையான விமரிசனங்களையும் ஆய்வுகளையும் எதிர்கொண்ட கூற்று இது என்றால் மிகையல்ல. அந்த ஆய்வு இங்கு அவசியமில்லை. அவர் வருகைக்கு முன்பு அங்கே யார் இருந்தனர் என்பதுதான் முக்கியம். வேளாண்மை செய்து தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாட்டை வளர்த்து, தலைவர் வழிகாட்டுதலில் வாழ்ந்துகொண்டிருந்த தொல்குடி மக்கள் கரிபியத் தீவுகளில் இருந்தனர். அதுவும் லட்சக்கணக்கில். கொலம்பஸையும் மற்ற ஐரோப்பியர்களையும் வரவேற்ற தொல்குடி மக்கள் பேசிய மொழிதான் தையினோ.
வெறும் முந்நூறு ஆண்டுகளில் இந்த இனம் இல்லாமல் ஆக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தையினோ இனத்தவரின் எண்ணிக்கை மூவாயிரம்கூட இல்லை. பதினாறாம் நூற்றாண்டிலேயே 90% தையினோ இனத்தவர் இல்லை என்று பதிவு செய்துவிட்டனர் ஐரோப்பியர்கள். தையினோ மக்கள் இதை ஆவணங்களால் நடத்தப்பட்ட இன அழிப்பு (Paper Genocide) என வரையறுக்கின்றனர். ஆனாலும் தையினோ இனமும் மொழியும் மொத்தமாக அழிந்துவிடவில்லை.
ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வொன்று இந்த வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சியது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆய்வின்படி போர்டோரிகோவில் சுமார் 61% மக்கள் தொல்குடி வேர்களைக் கொண்டுள்ளனர். தாய்வழி மரபணுக்களின் வழியாகத் தையினோ பெண்களால் தலைமுறை தலைமுறையாக இது கடத்தப்பட்டுள்ளது. அதாவது, இன்றைக்கு போர்டோரிகன், டொமினிகன் என அறியப்படும் ஒருவரின் பாட்டியினுடைய பாட்டியின் பாட்டியைத் தேடிச் சென்றால் அவர் தையினோ இனத்தவராக இருக்க அதிக வாய்ப்புண்டு. 2011ஆம் நடந்த மற்றோர் ஆய்வு இன்னமும் நுட்பமாக ஆராய்ந்து தோராயமாக 15% மக்களிடையே தையினோ மரபணு இருக்கிறது என்றது.
தையினோ இனத்தைப் போலவே மொழியும் பல தலைமுறைகள் கடந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளிலும் தையினோ சொற்கள் வாழ்கின்றன. பார்பிக்யூ, அரிக்கேன், டொபேக்கோ போன்ற சொற்களின் வேர் தையினோ மொழிதான். மரபணு ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு தையினோ இனம், மொழி பற்றிய விழிப்புணர்வு கூடியது. மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் மரபணுவைப் பரிசோதித்துப் பார்த்தனர். அழிந்ததாக அறிவிக்கப்பட்ட தம் இனத்தின் எச்சங்களை மீட்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர்.
மொழி ஆய்வாளர் சேவியர் (Javier A. Hernández – ஹேவியர் ஏ. ஹெர்னாண்டஸ்) தையினோ மொழியை மீட்டெடுக்க முயன்றார். கெடுவாய்ப்பாக எழுத்துப் பதிவு எதுவும் கிடையாது இம்மொழிக்கு. கல்வெட்டுகளில் கிடைத்திருப்பதும் பெரும்பாலும் ஓவிய எழுத்துகளே. இலக்கியம் இல்லாவிட்டாலும், இலக்கணமாவது தெரிந்தால்தானே மொழியை மீட்க இயலும்? அதெல்லாம் இல்லாமலும் மொழியை மீட்ட நிகழ்வுகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினார் சேவியர்.
ஐரோப்பியப் பதிவேடுகளில் உள்ள குறிப்புகளில் தையினோ மொழிச் சொற்கள் பல கிடைத்தன. வீடுகளில் பல சொற்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும் புழங்கிக்கொண்டிருந்தன. இவற்றைச் சேகரித்து இம்மொழிக்கு நெருக்கமான அரவாக் மொழிகளுடன் பொருத்திப் பார்த்து இலக்கணம், மொழித் தொடர் வரிசை போன்றவற்றை உருவாக்கினார். நாய், மாடு போன்ற சொற்கள் தையினோவில் இருந்தன. ஐரோப்பியர் வருகைப்பிறகு அறிமுகமான முயல்குட்டியை தையினோவில் தேட முடியாது. வேறு பல சொற்களை எப்படித் தேடியும் கண்டடைய முடியவில்லை. பரவாயில்லை எனச் சகோதர மொழியில் இருந்து கடனாக எடுத்துக்கொண்டார். அதைத் தையினோ உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றி தையினோ சொல்லாக ஆக்கிவிட்டார். பத்தாண்டு கால உழைப்பில் தையினோனாய்கியை உருவாக்கினார்.
இதுபற்றி அறிந்த பிரிசில்லா கோலன் தன் இனத்தின் மொழியைக் கற்கத் தொடங்கினார். போர்டோரிகோவை பூர்விகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார் பிரிசில்லா. பள்ளி ஆசிரியராகப் பணிவாழ்வைத் தொடங்கியர். பாடப்புத்தகங்களை உருவாக்கும் துறையில் அடுத்து நுழைந்தார். கற்றலுக்கு உதவி செய்யும் நூல்கள், கருவிகள் உருவாக்குவதில் பங்காற்றினார். அரிதாகப் பேசப்படும் மொழிகளைக் கற்பிக்கும் சிறப்புப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கினார். கல்வி சார்ந்த ஒலித்தட்டுகள், காணொளிகள், ஆவணப்படங்கள் போன்றவற்றை உருவாக்குவதில் அனுபவம் பெற்றவர். மொழி மீதான தணியாத ஆர்வம் உள்ளவர். மொழிக்காக நேர்ந்துவிடப்பட்ட ஒருவராகவே (Language Nerd) பிரிசில்லா தன்னை அடையாளப்படுத்துகிறார். ஐரோப்பியக் குடியேற்றத்தால் அழிக்கப்பட்ட தம் இனத்தின் முன்னோர்களுடன் உறவாடும் கருவியாக அவர் மொழியை உணர்ந்தார். தன்னைப் போலவே மற்றவர்களும் தம் வேர்களை அறிய தையினோ கற்கவேண்டும் என நினைத்தார். பயிற்றுவிப்பதில் வல்லவரான பிரிசில்லா, சேவியருடன் இணைந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தையினோ மொழியைக் கற்பதற்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை வடிவமைத்தார்.
7000 மொழிகள் எனும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவி கிடைத்தது. இவ்வுலகில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உண்டென்கிறது ஒரு கணக்கு. அவற்றில் பாதி மொழிகள் முற்றிலும் அழிந்தவை அல்லது அழிவின் விளிம்பில் உள்ளவை. அவற்றில் சிலவற்றையேனும் மீட்கும் முயற்சிகளுக்குத் தொழில்நுட்ப வழியில் உதவுகிறது இந்த அமைப்பு. இதன் வழியாக பிரிசில்லா கட்டமைத்த பாடத்திட்டம் மின்னியல் பாடமாக உருவெடுத்தது. குட்டிக் குட்டிக் காணொளிகளில் தையினோ கற்றுக் கொள்வதற்கான பாடங்களை நூற்றுக்கணக்கில் யூட்யூபில் பதிவேற்றினார் பிரிசில்லா.
இம்முயற்சிகள் தையினோ இனத்தவரிடையே வரவேற்பைப் பெற்றன. தன் நேர்காணல்களில் தவறாமல் ஒன்றை நினைவுகூர்வார் பிரிசில்லா. யூட்யூபில் அவரது சேனல், இருபது பின்தொடர்பாளர்களை எட்டாத தொடக்கநிலை அது. ஒரு காணொளிக்கான பின்னூட்டத்தில், தானும் கற்றுக்கொண்டு தன் மகனுக்கும் கற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார் டேவிட் என்பவர். தன் மகன் அவனுடைய பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுப்பான் என எழுதியிருந்தார். பல தலைமுறைகளாக அழிந்து போனதெனக் கருதப்பட்ட மொழி இன்னும் மூன்று தலைமுறைகள் தாண்டி வாழப் போகிறது என்பதை அந்த நொடியில் உணர்ந்தார் பிரிசில்லா. தன் பணி இத்தனை தலைமுறைகளைத் தொட்டிருக்கிறது என்பதை அறிந்து நெகிழ்ச்சியடைந்தார்.
தையினோ மொழியை மீட்கும் முயற்சிகளில் மற்ற சிலரும் ஈடுபட்டுள்ளனர். சேவியர், பிரிசில்லா போன்று இல்லாது கரிபிய மொழிக்குடும்பத்தில் இருந்து மட்டுமே சொற்களைக் கடன் பெற்று தையினோ மறு உருவாக்கம் செய்யும் முயற்சி ஒன்றும் உண்டு. பிரிசில்லா தேர்ந்தெடுத்தது, தற்காலப் பயன்பாட்டிலும் தையினோ இருக்கவேண்டும் எனும் பாதை. எனவேதான் தற்காலச் சொற்களான கணினி, மகிழுந்து போன்றவற்றுக்கும் புதுச் சொற்களை உருவாக்குகிறார். இப்படிக் கட்டமைத்தால் உயிர்ப்பிக்கும் மொழியின் வாழ்வு தொடரும் என்பது அவர் கருத்து. அதுமட்டுமின்றி குறுகிய எல்லைக்குள் வைத்திராமல் பரவலாக யாவரும் எளிதில் கற்றுக் கொள்ளும் விதத்தில் யூடியூபில் கிடைக்கும்படி வைத்திருப்பதும் இவர் பாதையின் பலம். இதனால் தையினோ இனத்தவர் மட்டுமின்றி மொழி ஆர்வம் கொண்ட யார் வேண்டுமானாலும் தையினோ கற்றுக்கொள்ளலாம். இச்செயல்பாடு வெற்றியைத் ஈட்டியுள்ளது.
மொழியோடு ஓவியம், நடனம், கலை சார்ந்த மீட்டெடுப்பும் மேற்கொள்கிறார் பிரிசில்லா. காசா அரேய்டோ (Casa Areyto) என்கிற அமைப்பைத் தொடங்கிப் பணியாற்றுகிறார். காசா என்றால் வீடு என்று பொருள். அரேய்டோ என்பது கதைகள், பாடல்கள் வழியாக வரலாற்றைக் கடத்தும் தையினோ மரபு நடனத்தைக் குறிக்கிறது. பிரிசில்லாவின் அமைப்பு அதை நூல்கள், எண்ணிமத் தளங்கள் வழியாகச் செய்கிறது. தன் மொழிக்காக மட்டுமின்றி மற்ற தொல்குடி மொழிகளுக்காகவும் குரலெழுப்புகிறார்.
பிரிசில்லாவின் அயராத பணிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையும் (UN) யுனெஸ்கோவும் (UNESCO) இணைந்து இவரை தொல்குடி மொழிகளுக்கான அனைத்துலகக் குழுவின் கல்விக்கான பத்தாண்டுப் பணிக்குழு 1-ன் இணைத் தலைவராக (Co-chair) நியமித்துள்ளன. இப்பொறுப்பின் கீழ், உலகளவில் அழிந்து வரும் தொல்குடி மொழிகளைப் பாதுகாப்பதற்கான ஆய்வுகளை முன்னெடுப்பதில் அவர் மிக ஆர்வத்தோடு இயங்குகிறார்.
லில்லி (LILI – Living Indigenous Languages Initiative) எனப்படும் திட்டத்தின் வாயிலாக உலகளாவிய தொல்குடி மொழிகளுக்குப் புத்துயிர் அளித்து, அவற்றுக்கான பயிற்சிகள், இணையக் கருத்தரங்குகளை (Webinars) வடிவமைக்கவும் எண்ணிமத் தளங்களில் தொல்குடி மொழிகள் செழிக்கவும் தேவையான கல்விக் கொள்கைகளை வகுக்கிறார் பிரிசில்லா.
தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டும் என்பது உலக நியதி. பிரிசில்லாவின் பணி அதைத் தாண்டியும் விரிகிறது. காகித ஆவணங்கள் வழியாகத் தொலைக்கப்பட்ட மொழியும் இனமும் தற்போது எண்ணிம உலகில் வலுவாகத் தடம் பதிக்கின்றன. தையினோ வாழ்வாங்கு வாழும்.
*
செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனரும் உருவாக்குநருமான முத்து நெடுமாறன், அண்மையில் பாரிசில் நடந்த யூனிகோடு மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு வருகை தந்திருந்த பிரிசில்லா கோலனுடன் அவர் உரையாடியதைத் தன் வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார். இணைப்புச் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முத்து நெடுமாறன் – பிரிசில்லா கோலன் – நேர்காணல்
*
தையினோ பற்றிய மேலும் சில இணைப்புகள்
