நாம் நினைப்பதை விட அதிகத் திறன் வாய்ந்தவை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் கருவிகள். தற்போது இக்கருவியில் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் திறன் கடிகாரங்கள் நம் உடல் தொடர்பான பல்வேறு தகவல்களைத் திரட்டி அதன் மூலம் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. நம்மிடம் எவ்வாறு தரவுகள் சேகரிக்கின்றன, என்னென்ன மருத்துவச் சேவைகள் வழங்குகின்றன என்பதை அறிந்துகொள்வது நல்லதுதானே. இன்னும் சிறப்பாகக் கருவியைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதயத் துடிப்பு:
இதயத் துடிப்பைக் கண்காணிப்பது ஆப்பிள் திறன் கடிகாரங்களின் அம்சங்களில் ஒன்றாகும். இதன் மேம்பட்ட சேவையே எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) பயன்படுத்துவது. இதற்கு உங்கள் ஆள்காட்டி விரலை வட்ட வடிவ டிஜிட்டல் கிரவுன் மீது வைத்தால் போதும். அதன்பின்னர் உங்கள் ஈசிஜி திரையில் தோன்றும்.
நீங்கள் திறன் கடிகாரத்தைப் பயன்படுத்தாத போதும், அது உங்கள் இதயத்துடிப்பைக் கணக்கிட்டுக் கொண்டே இருக்கும். குறைந்த, அதிக அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காணப்பட்டால், அது உங்களுக்கு அறிவிப்பை அனுப்பும். அதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இரவு நேரங்களில்கூட உங்கள் இதயத்துடிப்பு கணக்கிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். வெவ்வேறு செயல்பாடுகளின்போது உங்கள் இதயத் துடிப்பு எப்படி அதிகரித்திருக்கிறது என்பதை ஓர் அறிக்கையைப் போலவே வழங்குகிறது இந்த அம்சம்.
இரத்த ஆக்ஸிஜன் அளவு:
ஆப்பிள் திறன் கடிகாரத்தில் இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிவதற்கான அம்சம், கடந்த 2023 வரை வெளிவந்த ரகங்களில் செயல்பட்டது. அதன்பின்னர் வெளியான ரகங்களில் அது செயல்படவில்லை. ஏனெனில் ஒரு சட்டச் சிக்கல் காரணமாக அந்த அம்சம் முடக்கிவைக்கப்பட்டது. ஆனால் பழைய ரகத் திறன் கடிகாரங்களில் இன்றளவும் இதனைப் பயன்படுத்த முடியும். இதன்மூலம் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய முடியும்.
மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு:
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்றியின் கால அளவு பற்றிய தகவல்களைத் திறன் கடிகாரங்கள் சேகரிக்கின்றன. இதன் மூலம் கருமுட்டை விடுவிப்பு நாளைக் கணிக்க உதவுகின்றன. சில பெண்களுக்கு கரு முட்டையானது மாதவிடாய் சுழற்சி காலத்திற்கு முன்போ அல்லது பின்போ வெளிப்படும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதன் மூலம் கணிப்புகள் சாத்தியமாகின்றன. ஒரு நாளைக்கு முன்பே பயனர்கள் கருமுட்டை விடுவிப்பு பற்றிய அறிவிப்பைப் பெறுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
நடைப்பயிற்சி நிலைத்தன்மை:
உங்கள் ஆப்பிள் திறன் கடிகாரத்தில் உள்ள முடுக்கமானி மற்றும் கைரோஸ்கோப் போன்ற உணரிகளின் மூலம் நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பதை திறன் கடிகாரம் கற்றுக்கொண்டு புரிந்துகொள்வதால், அது உங்கள் நடையின் நிலைத்தன்மையைத் தீர்மானிக்கிறது. இதன்மூலம் வயதானால் நடையில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் பிற உடல் சார் நோய்களையும் அறிந்துகொள்ள முடியும்.
ஒலி அளவுகள்:
உங்கள் சுற்றுச்சூழலில் உள்ள ஒலியின் அளவைக் கண்காணிக்க உள் ஒலிவாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒலியின் அளவு உங்களுக்கு பிரச்சினையைத் தருமளவிற்கு இருந்தால், உங்களுக்கு எச்சரிக்கை அறிக்கை அனுப்பப்படும். ஒரு வேளை நீங்கள் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்றிருந்தால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். எனினும் Noise என்ற செயலியும் உள்ளது. அதன்மூலம் தற்போது உங்கள் சூழல் எவ்வளவு சத்தமாக இருக்கிறது என்றும் அதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டுமா என்பதை அறிந்துகொள்ளலாம்.
மூச்சுவிடுதல்:
நீங்கள் தூங்கும் நேரத்தில் நுண்ணிய அசைவுகளைக் கண்டறிந்து, நீங்கள் மூச்சு விடுவதைக் கூடக் கண்காணிக்கும். நீங்கள் தூங்கும்போது மட்டுமே உங்கள் சுவாசம் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படும். உங்களுடைய எல்லா தரவுகளும் Health செயலியில் பதியப்பட்டிருக்கும்.
தூக்கம்:
நாம் எவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறோம், இரவு எத்தனை மணிவரை கண்விழித்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வது நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். Sleep செயலி மூலம் நீங்கள் எவ்வளவு நேரம் படுக்கையிலிருந்தீர்கள், எவ்வளவு நேரம் தூங்கினீர்கள், தூங்கும் போது நீங்கள் கடந்து வந்த நிலைகளை அறிந்துகொள்ள முடியும். ஆப்பிள் திறன் கைக்கடிகாரங்களில் இன்னும் பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் கண்விழிக்கும் நேரத்தில் மெதுவாக அதிர்வுறும். இரவில் நீங்கள் வழக்கமாகத் தூங்கும் நேரத்தைக் கடந்து விழித்திருந்தால், திரையின் வெளிச்சத்தைக் குறைக்கும். மேலும் தேவையற்ற அறிவிப்புகள் வந்தால் அவற்றை அமைதியாக்கிவிடும்.
இதய உடற்பயிற்சி:
பயனர் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது அவருக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவைக் கூறும் வசதி இது. VO2 Max என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் பாலினம், வயது மற்றும் உடற்பயிற்சி நிலை உட்படப் பல காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்தத் தரவுகள் இதய நலனுக்கான குறியீடு. இது குறைவாக இருந்தால், உங்களுக்கு அறிவிக்கப்படும். அதிகரிக்க ஆலோசனைகளையும் வழங்குகிறது இச்சேவை.
பகல் நேரப் பயன்பாடு:
இதில் சுற்றுச்சூழலின் அடிப்படையில் திரையின் வெளிச்சம் சரிசெய்யப்படுகிறது. திரை தேவைப்படும்போது பிரகாசமாக இருக்கும். திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும் சுற்றுப்புற ஒளி உணரி மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், ஒரு நபர் எவ்வளவு நேரம் பகலில் செலவிடுகிறார் என்பதை மிகவும் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலைக் கண்காணித்தல்:
Sleep apnea என்பது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் குறைபாடாகும். இதனைக் கண்காணித்து பயனர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக Sleep apnea monitor என்ற வசதியை ஆப்பிள் திறன் கைக்கடிகாரம் கொண்டுள்ளது. இதன்படி, இரவில் மூச்சுத்திணறல் ஏற்படும் அளவையும் காலத்தையும் தரவாகச் சேகரித்து வைக்கிறது. பின்னர் முப்பது நாள்களுக்கு ஒருமுறை பயனர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படுகிறது. பாதிப்புகள், நிலைமையின் தீவிரத்தன்மை, மருவத்துவரை அணுகப் பரிந்துரைப்பது போன்றவை இடம்பெற்றிருக்கும். மருத்துவரை அணுக விரும்பும் பயனர்கள், அவர்களது மூன்றுமாத மூச்சுத்திணறல் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இசக்கிமுத்து
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் மூலம் மேலும் தகவல்களை அறியலாம்.
- Apple Watch tracks more health metrics than you realize
- How Apple Watch will bring healther nights to Brazil with sleep apnea detection
