ஜெமினி லைவ் உடன் உரையாடும்போது இனி மின்னணுக்கோப்புகள், காணொளிகள், யூட்யூப் சுட்டிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இணைப்புகளை ஆய்வுசெய்து அதைப்பற்றிப் பயனருடன் வழக்காடும் அறிவைப்பெற்றுள்ளது இப்போதைய ஜெமினி லைவ். தற்சமயம், குறிப்பிட்ட சில கைபேசிகளில் மட்டுமே இந்த அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜெமினி லைவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இப்புதிய அம்சத்தால் ஜெமினி நிறுவனம் முன்னோக்கியதொரு பெரிய அடியை எடுத்துவைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

குரல் உதவியாளர் (Voice Assistant) செயலிகளுடன் நாம் போராடிய காலத்தை மறந்துவிடமுடியாது. நாம் கேள்வியை எப்படி மாற்றிக்கேட்டாலும் அச்செயலிகள் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட பதிலைத்தான் கூறும். உருப்படியாக ஒரு பதிலை அவற்றிடம் பெறுவதற்குள் நாம் சாப்பிட்ட உணவு செரித்திருக்கும். பலநேரங்களில் அப்படியொரு பதில் கிடைக்காமலே போய்விடும்.
ஜெமினி, சாட்ஜிபிடி, கிளாட் போன்ற செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள், வழக்கமான குரல் உதவியாளர் செயலிகளின் எந்திரத்தனமான உரையாடலிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. இவை உரையாடலை இடைநிறுத்தவும் வழக்காடும் பொருளை மாற்றவும் இடைப்பட்ட உரையாடல்களுக்கும் இடமளிக்கின்றன. எனவே, ஒரு மனிதருடன் உரையாடும் உணர்வை இவை தருகின்றன.
சந்தையில் நிலவும் போட்டி காரணமாக, செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஒன்றையொன்று விஞ்சுவதற்கான ஆரோக்கியமான போட்டியாக இதைப்பார்க்கலாம். தற்போது ஜெமினி லைவ் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த அம்சம் பயனர்களுக்குப் பெரிய அளவில் பயனளிக்கக்கூடியது.
இதன்படி, பயனர் காணொளிக்கோப்புகள், படங்கள், பிடிஎஃப் கோப்புகள், யூட்யூப் சுட்டிகள் போன்றவற்றைத் தங்கள் உரையாடலில் இணைக்கமுடியும். இவற்றை ஜெமினி லைவ் ஆய்வுசெய்து, அதைப்பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பயனருடன் பகிர்ந்துகொள்ளும். இந்தப் புதுப்பிப்பு அம்சத்தால், கோப்புகளிலுள்ள தகவல்களைத் தொகுக்கவும் அதைப்பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் கோப்புகளின் சாரத்தை வெளிக்கொணரவும் வல்லதாகிறது ஜெமினி லைவ்.
கல்விசார் செயல்பாடுகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கும் (Content Creators) அதிக அளவிலான மின்னணுக் கோப்புகளைக் கையாளவேண்டிய நிறுவனங்களுக்கும் இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பெரிய காணொளியை முழுவதும் காண நேரமில்லாதவர்கள் அதில் என்ன இருக்கிறதெனச் சுருக்கமாக அறிந்துகொள்ள இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தப் புதுப்பிப்பு, ஜெமினி லைவின் பல்திசையியக்கத்திறத்தை (Versatility) அதிகரித்துள்ளது. ஜெமினி லைவ், கூகுள் நிறுவனத்தின் அங்கம் என்பதால், தகவல்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளையாது என்ற நம்பிக்கை பொதுவாகவே பயனர்களிடையே நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி, கேலக்சி S24 மற்றும் S25 திறன்பேசிகள், பிக்சல் 9 வரிசையிலுள்ள திறன்கருவிகள் போன்றவற்றில் மட்டுமே இந்த அம்சம் பயன்படுத்தத்தக்கதாக உள்ளது. விரைவில் அனைத்து திறன்கருவிகளிலும் இந்த அம்சம் பயன்படுத்தத்தக்கதாக மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் கூகுள் தலைவர்.
ஆனாலும், ஒப்பீட்டளவில் ஜெமினி லைவ் தாமதமாகத்தான் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தையிலுள்ள மற்ற போட்டியாளர்களான ஓப்பன்ஏஐ சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோபைலட், கிளாட் ஏஐ, ஒட்டர் ஏஐ, சிந்தெசியா போன்றவை ஏற்கெனவே இந்த வசதியை அறிமுகப்படுத்திவிட்டன. அவ்வப்போது கொண்டுவரப்படும் புதிய வசதிகளைப்பொறுத்து இந்த ஏஐ கருவிகளின் கவர்ச்சி, சந்தையில் ஏற்றஇறக்கங்களைச் சந்தித்துவருகிறது.
எது எப்படியோ. இவர்களின் சந்தைப்பிடிபோட்டியால் பயனர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
- ரிஷி ரமணா
