தடை செய்யப்படுமா டீப்சீக்?

டீப்சீக் உள்ளிட்ட சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களைத் தடைசெய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது அமெரிக்கா. தடையை மீறுபவர்களுக்கு மிக அதிக அளவில் அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கிறது இம்மசோதா. டீப்சீக், பயனர்களின் தகவல்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற சந்தேகமே இந்நடவடிக்கைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

Deepseek

செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களின் சந்தைக்கடலில் எங்கிருந்தோ வந்து, திடீரென்று குதித்தது டீப்சீக். அதனால் ஏற்பட்ட அலைகளில் பெரிய பெரிய கப்பல்களே ஆட்டம்கண்டன. கடந்த சில வாரங்களாகவே தன்னைப்பற்றி எங்கும் பேசும்படிச் செய்துள்ளது சீனாவைச் சேர்ந்த இந்தக் குட்டி நிறுவனம்.

சாட்ஜிபிடிக்கு இணையான திறனும் மிகக்குறைவான விலையும் கொண்டதால், இது சீக்கிரமே மக்களிடம் பிரபலமானது. ஒரு தரமான பொருள் மலிவாகக் கிடைப்பதற்குப் பின்னால் நிச்சயம் வலுவான காரணங்கள் இருக்கவேண்டுமென்று சந்தேகத்தைக் கிளப்பியது. டீப்சீக்கின் தரவு சேகரிக்கும் கொள்கைதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. சேகரிக்கும் தரவுகள் சீன நிறுவனமொன்றிற்கு வழங்கப்படுவதாக ஆண்டிராய்டு அத்தாரிட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் சீனாவிற்குத் தரவுகளை அனுப்புவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று தோன்றுகிறதா? அந்த நிறுவனம் சீனக் கம்யூனிசக் கட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தால் பிரச்சினை வராமல் என்ன செய்யும்? அதிலும் அது அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட கட்சியாக இருக்கும்போது கேட்கவே தேவையில்லையே. டீப்சீக்கின் அசுரவளர்ச்சியைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, அதை முடக்கக் கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை வீணாக்குமா என்ன?

அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தயாரிக்கும் புதிய மசோதாவில், அரசு நிறுவனங்களிலோ, சாதனங்களிலோ டீப்சீக் போன்ற சீனச் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளின் பயன்பாடு தடைசெய்யக் கோரப்போகிறார்களாம். அமெரிக்கக் குடிமக்கள், சீனச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவோ, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இணைந்து பணியாற்றவோ, தங்கள் நாட்டுத் தொழில்நுட்பத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ இம்மசோதா தடைவிதிக்க முயல்கிறது.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், நூற்று எண்பது நாள்களுக்குப்பின், சீனாவிலிருந்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த இறக்குமதிகளுக்குத் தடை வரும். எனவே, நாட்டுக்குள் யாரும் சீன, செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களை விற்கமுடியாது. இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்குப் பத்து கோடி அமெரிக்க டாலர்களும் தனிநபர்களுக்குப் பத்து லட்சம் அமெரிக்க டாலர்களும் அபராதமாக விதிக்கப்படுகின்றன. இது மிகப்பெரிய அபராதத் தொகை.

மேலும், தடையை மீறுவதால் அமெரிக்காவிற்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைப்போல், மூன்று மடங்கு தொகையை குற்றவாளிகள் இழப்பீடாகக் கொடுக்கவேண்டியிருக்கும். அதோடு, அவர்கள் அரசின் ஒப்பந்தங்கள், உரிமங்கள், நிதி வழங்கல்கள், மானியங்களைப் பெறுவதற்கானத் தகுதியை ஐந்தாண்டுகளுக்கு இழப்பார்கள். இப்படிப் பல்வேறு பரிந்துரைகள் மசோதாவில் உள்ளன.

நியூயார்க்கில் அரசு அலுவலகக் கருவிகளில் சீன செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பயன்படுத்த தடைவிதித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. டிக் டாக் செயலியைத் தடைசெய்த முன்னனுபவம் இதற்குத் துணைசெய்திருக்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவும் டிக் டாக் செயலியைத் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீப்சீக்கும் இந்தியாவில் தடைசெய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  • ரிஷி ரமணா

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now