வீட்டைத் துடைக்கும் ஆப்பிள்

இயந்திர துடைப்பான் (Robitic vacuums and mops) கருவிகளை எளிதாகத் திறன்பேசியோடு இணைத்துப் பயன்படுத்தும் அம்சம் ஐஓஎஸ்18.4ல் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன .

Robotic vacuums and mops

வீட்டுவேலை செய்யும் இயந்திரங்கள், புனைவாகத் தொடங்கி இன்று பல குடும்பங்களின் வேலைப்பளுவை உண்மையிலேயே குறைத்து வருகின்றன. 1956 ஆம் ஆண்டில், அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் ராபர்ட் ஏ. ஹெய்ன்லைன் தனது ‘தி டோர் டு சம்மர்’ என்ற நாவலில் முதன்முறையாக இது பற்றிய தனது புனைவுக் குறிப்பை எழுதியுள்ளார் .

இந்தப் புனைவை உண்மையாக்கிக் காட்டுவேன் என அடம்பிடித்த பொறியாளர் டொனால்ட் மூர், தரையில் போடப்பட்ட ஒரு கோட்டைப் பின்பற்றி சுத்தம் செய்யும் தானியங்கி இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்தார். வேர்ல்பூல் நிறுவனமும் 1959 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேசிய கண்காட்சியில் இந்த கருவி பற்றிய கருத்தை வெளியிட்டது. ஆனால் என்ன தயக்கமோ, சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை.

அதன்பிறகு ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக்கொண்டு இதன் தயாரிப்பு பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முழுவதும் தன்னிச்சையாக இயங்கும், இயந்திர துடைப்பான்கள் வெளிவந்து சந்தையைக் கலக்கிவருகின்றன. நம் மக்களுக்கு எந்தவொரு புதிய கருவி வந்தாலும் அதனைத் திறன்பேசியோடு இணைத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதே போல இயந்திரத் துடைப்பானையும் திறன்பேசியோடு இணைத்துப் பயன்படுத்தும் அம்சத்தை ஆப்பிள் தன் திறன்பேசிகளில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகிவந்தன. ஐஓஎஸ்18லேயே வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம், ஐஓஎஸ்18.4ல் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புளூஸ்கை தளத்தின் பயனரான ஜேம்ஸ் ப்ரச்னோவ் இந்த அம்சத்தைக் கண்டறிந்துள்ளார். அவர் பயன்படுத்தி வந்த சியாமி நிறுவனத்தின் S10 ரக இயந்திரத் துடைப்பானில் இந்த அம்சம் வேலை செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது திறன்பேசிகள், திறன்கடிகாரங்கள், தொலைக்காட்சி என அனைத்திலும் இந்த அம்சத்தைக் கொண்டுவரவுள்ளது. எனவே ஐஓஎஸ்18.4, ஐபேட்ஓஎஸ்18.4, டீவிஓஎஸ்18.4, மேக்ஓஎஸ் 15.4, வாட்ச்ஓஎஸ் 11.4 பதிப்புகளில் இந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம்.

வீடு துடைக்கும் வேலையை வேண்டாவெறுப்பாகச் செய்யும் கணவனுக்கோ மனைவிக்கோ பிறந்தநாள் பரிசாகக் கொடுக்க ஏற்ற பொருள் இது.

மு.‌இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now