வாரன் பஃபெட் பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, பங்குதாரர்களையும் பொருளாதார உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த முக்கியமான அறிவிப்பு, ஒமாஹாவில் நடந்த வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் வளர்ச்சியை வழிநடத்தி வந்த பஃபெட், தனது வாரிசுக்காக இப்பதவியை விட்டுவிலக்கினார்.

2026 முதல், துணைத் தலைவர் கிரெக் ஏபல் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கிறார். 94வது வயதிலும் பஃபெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் தொடர, ஏபல் நிர்வாகத் திறமையால் பஃபெட்டின் நம்பிக்கையையும், டிம் குக்கின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
பஃபெட் ஒரு காங்கிரஸ் மன்ற உறுப்பினரின் மகனாக 1930-இல் பிறந்தவர். ‘ஓமாஹாவின் தீர்க்கதரிசி’ என அழைக்கப்படும் இவர், பெஞ்சமின் கிராஹாமின் வழிகாட்டலில் முதலீட்டு கொள்கைகளைப் படித்து, ஒரு நிதி நெருக்கடியில் இருந்த ஆடை நிறுவனத்தை மிகப்பெரிய முதலீட்டு வல்லரசாக மாற்றினார்.
பஃபெட் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டை தவிர்த்து வந்தாலும், 2016-இல் ஆப்பிளில் முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆப்பிளை ஒரு வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் கூடிய நுகர்வோர் நிறுவனமாகக் கண்டு முதலீடு செய்த பஃபெட், பெர்க்ஷைருக்கே மிகப்பெரிய லாபத்தை பெற்றுத்தந்தார். ஆனால் 2023-24 காலப்பகுதியில் 515 மில்லியன் பங்குகளை விற்றது பலரிடத்தில் கேள்விகளை எழுப்பியது. இதை அவர் வரி திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்தை குழப்பங்களை எதிர்நோக்கிய நடவடிக்கையாக விளக்கியுள்ளார்.
நன்றாக நிர்வாகிக்கப்படும், மதிப்பை விட குறைவான விலையில் உள்ள பங்குகளை நீண்டகாலத்திற்கு வாங்கி வைத்திருப்பதே பஃபெட்டின் முதலீட்டு தத்துவம். கோகா-கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள், அவரது கோட்பாடுகளுக்கு ஏற்ப, பெர்க்ஷைர் போர்ட்ஃபோலியோவில் நீண்ட காலமாக உள்ளன. ஸீஸ் காம்பனி, ஃப்ரூட் ஆஃப் த லூம், டெய்ரி க்வீன் போன்ற நிறுவனங்களை முழுமையாக வாங்கினாலும், அவற்றின் நிர்வாகத்தை தொடர அனுமதித்துள்ளார்
பஃபெட் முதலீட்டாளராக மட்டுமல்ல, மாபெரும் நன்கொடை வழங்குபவராகவும் உலகத்தை ஈர்த்தவர். 2006 ஜூனில், தனது பெரும்பாலான செல்வத்தை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறக்கட்டளை உலக சுகாதாரம், நூலகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் கவனம் செலுத்துகிறது. இது உலகின் மிகப்பெரிய வெளிப்படையான நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. பதவியில் இருந்து விலகினார் என்றாலும், பஃபெட்டின் சிந்தனையும் செயல்முறையும் உலகின் மிக முக்கிய முதலீட்டுத் துறையிலேயே தொடர்ந்து ஒளிவீசும்.
- நவீனா
