மறக்கப்படும் மரபுமொழிகள்

மேற்கு இமயமலைப் பகுதிகளில் இலட்சக்கணக்கானோர் பேசும் பஹாரி மொழிகள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிக்கொள்கைகளில் இன்றுவரை அங்கீகரிக்கப்படாமல் உள்ளன. இளம் தலைமுறையினர்  இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளைத் தேர்ந்தெடுக்கின்ற நிலையில், பூர்வீக மொழிகளைப் பாதுகாக்கச் சமூக தலைவர்களும் மொழியியல் அறிஞர்களும் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இமாச்சலப்பிரதேசம் என்பது வெறும் மலைகளும், ஆறுகளும், அழகிய இமாலயப் பசுமைப் பரப்புகளும் கொண்ட ஒரு பகுதி மட்டுமல்ல; பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த கலாசாரம், மொழிகள், மரபுகளைக் கொண்ட ஓர் உயிருள்ள அருங்காட்சியகமாகும். ஆனால் இன்று, இமாச்சலின் பல பழங்குடி மொழிகளும் வழக்காடலும் அழிந்துவரும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பஹாரி மொழிகள் என்பது இமாலயப் பரப்பில் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிகளின் ஒரு குழுவாகும். இவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன: கிழக்கு பஹாரி – நேபாளி போன்றவை. மத்திய பஹாரி – குமாயுனி, கர்வாலி. மேற்கு பஹாரி – இமாச்சலப்பிரதேசம், ஜம்மு ஆகிய இடங்களில் பேசப்படும்.

மேற்கு பஹாரி மொழிகள் (உள்நாட்டில் பஹாரி அல்லது பஹாடி) இமாச்சலின் பல பகுதிகளில் பேசப்படுகின்றன — காங்ரி, மண்டேயாலி, குல்லுவி, சிர்மௌரி, சம்பேயாலி, கட்டி போன்றவை இதில் அடங்கும். ஆனால் தற்போது இளம் தலைமுறை இம்மொழிகளைக் கற்றுக்கொள்ளாததால், யுனெஸ்கோவின்படி இவை அழிந்து வரும் அல்லது மிக ஆபத்தான (critically endangered) நிலையில் உள்ளன.

தொடக்கத்தில் டாங்கரி (Tankri) எனப்படும் எழுத்துமுறையைப் பயன்படுத்திய இம்மொழிகள், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிந்தைய கல்வி மாற்றங்களால் தேவநாகரி எழுத்துக்கு மாறின. இன்று டாங்கரி மறைந்துவிட்டது. டாங்கரியை மீண்டும் உயிர்ப்பிக்கவும் பஹாரி மொழிக்கு அரசு அங்கீகாரம் பெறவும் சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இமாச்சலின் பஹாரி மொழிகள் அதன் கலாசாரம், பாரம்பரிய அறிவு, அடையாளத்தின் முக்கியமான அங்கமாக இருக்கின்றன. பஹாரி (ஹிமாச்சலி) மொழியை இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டாலும், அது இன்னும் நிறைவேறவில்லை. பஹாரி மொழிகள் வழக்காடல்கள்தாம் என அரசு கருதினாலும், மொழியியலாளர்கள், உள்ளூர் மக்கள் இவற்றை தனி மொழிகளாகவே பார்க்கிறார்கள். இவை தனித்துவமான ஒலியியல், இலக்கணம், வாய்மொழி மரபுகளைக் கொண்டவை. யுனெஸ்கோவும் மக்கள் மொழியியல் ஆய்வு நிறுவனமும் சில பஹாரி வழக்காடல்களை தனித்தனி மொழிகளாக ஏற்றுக்கொண்டுள்ளன.

எழுத்து முறை இல்லாமை, நகரமயமாக்கல், கல்வியில் புறக்கணிப்பு, இந்தி/ஆங்கிலத்தின் ஆதிக்கம், அரசு ஆதரவு இல்லாமை ஆகியவை இமாச்சலின் பஹாரி மொழிகளை அழிவுப் பாதையில் தள்ளியுள்ளன. முக்கியமாக, இம்மொழிகள் வெறும் சொற்கள் அல்ல; அவை மரபுகள், அடையாளங்கள், வாழ்க்கை முறைகளைச் சுமக்கும் பாரம்பரியத் தூண்கள். ஒரு மொழி மங்கிற்றெனில், அதன் வழியே வாழ்ந்த ஓர் உலகமே மறைந்துவிடுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.  இப்போது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்கால தலைமுறையினர் இம்மொழிகளை  பாடப்புத்தகங்களில் மட்டுமே படிப்பார்கள்.

  • நவீனா

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now