தொழில்நுட்ப வல்லுநர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் ஐ/ஓ (Google I/O) நிரலாளர்கள் மாநாடு கடந்த 20, 21 தேதிகளில் நடைபெற்றிருக்கிறது. இதில் பல்வேறு புது தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

கூகுள் ஐ/ஓ மாநாடு கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் கூகுள் தனது புதிய சேவைகள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை அறிமுகப்படுத்திவருகிறது. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் உருவாக்குபவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதில் அறிவிக்கப்படும் தொழில்நுட்பங்கள் அடுத்த சில ஆண்டுகளுக்கு நமது வாழ்க்கையை மாற்றியமைக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இம்மாநாடு தொழில்நுட்பத் துறையின் திசையைத் தீர்மானிக்கும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மாநாடு கடந்த 20, 21 தேதிகளில், கலிபோர்னியாவின் ஷோர்லைன் ஆம்பி தியேட்டரில் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. பலரின் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்று ஜெமினி செயற்கை நுண்ணறிவை கூகுள் குரோம் தேடுபொறியில் இணைத்துப் பயன்படுத்துவது. இதனைக் கூகுள் ஏஐ புரோ அல்லது கூகுள் ஏஐ அல்ட்ரா சந்தா பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதன்மூலம் நீங்கள் தேடுபொறியில் தேடலை மேற்கொள்ளும்போது, வலைப்பக்கங்களைச் சுருக்கி முக்கியமான தகவல்களை மட்டும் பெறமுடியும். மீண்டும் மீண்டும் ஒரே தகவல்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. இப்போதைக்கு இந்த அம்சத்தை அமெரிக்காவில் உள்ள கூகுள் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். கணினிகளைப் பொறுத்த வரையில் விண்டோஸ், மேக் இயங்குதள பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான ஒன்று வியோ 2 தொழில்நுட்பத்தின் மேம்பாடான வியோ 3. முன்பெல்லாம் சொற்குறிப்புகளைப் பயன்படுத்தி காணொளிகளை மட்டும் தயாரித்துத் தந்த வியோ, இனிமேல் அவற்றுக்கான ஒலியையும் சேர்த்துத் தரப்போகிறது. ஒலியை உருவாக்குவதற்குக் கூகுளிடமே சிர்ப் போன்ற செயற்கை நுண்ணறிவு இருக்கும்போது, வியோ தொழில்நுட்பத்திலும் அதனைச் சேர்ப்பது நமது பணியை ஒரே இடத்தில் எளிமையாக முடித்துக்கொள்ள உதவுகிறது.
இதுபோல இன்னும் பல அறிவிப்புகள் அம்மாநாட்டில் வெளியாகியுள்ளன. தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவற்றைக் கூகுளின் வலைப்பதிவில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
இவை தவிர பல்வேறு களிநயமான நிகழ்ச்சிகள் அஙகே நடைபெற்றிருக்கின்றன. ஜெமினி செயற்கை நுண்ணறிவைக் கூகுள் குரோமோடு இணைத்துப் பயன்படுத்தும் அம்சத்தைப் பற்றி முன்பே கூறியிருந்தோம் அல்லவா. அதனை நேரடியாகப் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு அம்மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
கூகுள் மூக்குக் கண்ணாடியின் மேம்பட்ட வடிவமான ஆண்டிராய்டு ஏஆர் கண்ணாடியைப் பயன்படுத்தி மகிழ்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள். நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களை நினைவில் வைத்துக்கொள்வது, மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணிகளை இந்த கண்ணாடி செய்கிறது. இது மட்டுமில்லாமல், இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு வரவுள்ள புராஜக்ட் மூஹன் என்ற மெய் நிகர் கருவியும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுபோலவே இன்னும் பலவித ஆச்சரியங்களைப் பங்கேற்றவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது கூகுள்.
- மு. இசக்கிமுத்து
