நோட்புக்எல்எம்: படிப்புக்குத் துணை

நோட்புக்எல்எம் (NotebookLM – Notebook Language Model) அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி மூலம் நமது குறிப்பேடுகளை மற்றவர்களுடன் எளிதில் பகிர முடியும்.

NoteBookLM

தகவல் வெகு விரைவாகப் பரவும் இன்றைய உலகில், குறிப்புகள், ஆய்வுகள், சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி, தெளிவுபடுத்தி, மேலும் விரிவாக்கும் பணியில் நோட்புக்எல்எம் செயலி சக்திவாய்ந்த உதவியாளராகச் செயல்படுகிறது.

2023ல் பரிசோதனை முறையில் அறிமுகமான நோட்புக்எல்எம், தற்போது ஆண்டிராய்டு, ஐஒஎஸ் திறன்பேசி செயலியாகவும் வெளியாகியுள்ளது. இச்செயலி ஜெமினி 2.0 தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

மற்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் போல இணையத்தில் உள்ள பொது தகவல்களை இது தேடுவதில்லை. மாறாக, பயனர் பதிவேற்றும் ஆவணங்களையே ஆதாரமாகக் கொண்டு, பதில்களை விளக்கங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, அறிவியல் நூல் ஒன்றைப் பதிவேற்றிவிட்டு, “கடல் அமிலமாதலைக் குறித்து இந்த புத்தகத்தில் ஆசிரியர் என்ன கூறுகிறார்?” என்ற கேள்விக்கு, நோட்புக்எல்எம் துல்லியமான பதிலுடன், மேற்கோள்களுடன் பக்க எண்களையும் தரும். இது நீளமான ஆவணங்களைச் சுருக்கி முக்கியமான தகவல்களை வெளிக்கொணரும் திறனும் கொண்டுள்ளது. மேலும், ஒலி வடிவில் (Audio Overview) சுருக்கங்களை வழங்கும் வசதி மூலம், பயனர்கள் எழுத்தைப் படிக்க நேரமில்லாத போதும் உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பயனர்கள் பிடிஎப், கூகுள் டாக்ஸ், யூட்யூப் முகவரிகள் உள்ளிட்ட பலவகை ஆவணங்களைப் பதிவேற்ற முடியும். ஒரே சொடுக்கில் ,அதில் உள்ள தகவல்களைப் படித்து அதன் சுருக்கங்கள், குறிப்புகள், காலவரிசைகள் போன்றவற்றைத் தானாக உருவாக்கும் வசதி உள்ளது. நம்முடைய சொந்த ஆவணங்களை நேரடியாக பதிவேற்றவும் இச்செயலி அனுமதிக்கிறது. அதற்குப் பிறகு, நாம் பதிவேற்றிய குறிப்புகளுடன் உரையாடும் திறனை இந்த செயலி கொண்டுள்ளது.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அலுவலக அதிகாரிகள் என தகவலை ஆழமாகப் புரிந்து கொள்ள விரும்பும் பலருக்கும் இது பயன்படக்கூடிய கருவியாக இருக்கிறது. குறிப்பாக, பல ஆதாரங்களை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சூழ்நிலைகளில் குழப்பம் இல்லாமல் தெளிவை ஏற்படுத்துகிறது.

மேலும், மேம்பட்ட வசதிகளை விரும்பும் பயனர்களுக்காக “நோட்புக்எல்எம் பிளஸ்” என்ற சந்தா அடிப்படையிலான பதிப்பும் உள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான ஆதார ஆவணங்களைச் சேர்க்கும் வசதி, ஒலி விளக்கங்கள், நோட்புக்குகள் மற்றும் உரையாடல்களை விரிவாகக் கொண்டுவரும் திறன், குழு உறுப்பினர்களுடன் நோட்புக்குகளை பகிர்ந்து பயன்படுத்தும் வசதி ஆகியவை உள்ளன.

நம்முடைய குறிப்பேடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியையும் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வலது மேல் மூலையில் உள்ள பகிர் என்கிற பொத்தானை அழுத்தி எளிதாகப் பகிராலாம். மற்ற பயனர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ​கோப்புகளைத் திருத்தவோ மாற்றவோ இயலாது. கோப்புக​ளில் உள்ள தகவல்களைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியும். தங்கள் கல்லூரிப் பாடக் குறிப்புகளை நண்பர்களுடன் பகிர முடியும் என்பதால் மாணவர்கள் பெருமளவில் இதைப் பயன்படுத்துகின்றனர்.

  • நவீனா
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now