நாம் விரும்பிக் கேட்கும் பாடல்களை மட்டும் தனி இசைப்பெட்டியில் (Playlist) சேமித்து வைப்பது நமக்கு வழக்கம். ஒவ்வோர் உணர்வுக்கு ஏற்றதுபோல் இசைப்பெட்டிகளை நிறைத்துக் கொண்டு போக இனி தேவையில்லை. நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு செயற்கை நுண்ணறிவே நாம் கேட்கும் பாடல்களை வழங்குகிறது.

திறன்பேசிகளின் அன்றாடப் பயன்பாடுகளில் பாடல்கள் கேட்பதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு நபர் சராசரியாக 961 மணி நேரங்கள் இசையைக் கேட்கச் செலவிடுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது. வாழ்வின் பெரும்பகுதியை இனிமையாக்கும் இசை அனுபவத்தை நமக்கு வழங்க, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், அமேசான் ஆடியோ உள்ளிட்ட எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. அவற்றில் இனி செயற்கை நுண்ணறிவே நமது உணர்வுக்கும் விருப்பத்திற்கும் தேவையான இசையை ஆய்ந்து இசைப்பெட்டிகளை வழங்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
எப்படி வேலை செய்கிறது?
இசை வழங்கும் செயலிகளுக்குள் உள்ள பாடல்களில் காதல், ஆன்மிகம், கொண்டாட்டம், துள்ளல் என நாம் கேட்கும் பாடல்களின் தன்மைகளை ஆராய்ந்து செயற்கை நுண்ணறிவு நினைவு வைத்துக் கொள்கிறது. அவற்றில் நாம் பலமுறை கேட்பன, தள்ளிவிடுவன, பாதி கேட்பன போன்றவையும் முக்கியத் தகவல்களாக நினைவு கொள்ளப்படுகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் கேட்க விரும்பும் பாடல்களைச் செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தருகிறது.
பெரும்பாலும் இசை வழங்கும் செயலிகளிள் அனைத்திலும் இந்த வசதி கொண்டுவரப்பட்டுவிட்டது. நாம் தரவுகளையோ, குறிப்புகளையோ கொடுத்து நமக்கான தனித்துவமான இசைப் பெட்டிகளை உருவாக்கச் சொல்ல முடியும். அல்லது கலவையான பாடல்களுக்கும் அதற்குள்ளேயே தனியான அம்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்.
தரவுகளின் மூலம் இசைப்பெட்டி – ஒரு பாடலின் இசையமைப்பாளர், திரைப்படம், பாடகர், பாடலாசிரியர் உள்ளிட்ட தரவுகளை நாம் குறிப்பிட்டு தேடும்போது அதன் கீழ் அடங்கும் அனைத்து பாடல்களையும் செயற்கை நுண்ணறிவு பட்டியலிட்டு ஓர் இசைப்பெட்டியை உருவாக்கித் தருகிறது.
குறிப்புகளின் மூலம் இசைப்பெட்டி – உடற்பயிற்சி கூடத்துக்கான பாடல்கள், இரவில் கேட்கும் பாடல்கள், இனிமையான மாலை நேர பாடல்கள், சோகப் பாடல்கள் என நாம் உணரும் தன்மைக்கு ஏற்ப குறிப்புகளைக் கொடுப்பதன் மூலம் பாடல்களை ஒரே வரிசையில் அடுக்கிச் செயற்கை நுண்ணறிவால் இசைப்பெட்டியை உருவாக்க முடிகிறது.
கலவையான இசைப்பெட்டி – சில சமயங்களில் எவ்வித தகவல்களையோ குறிப்புகளையோ தராமல், பாடல் மட்டும் கேட்க வேண்டும்போல் தோன்றினால், அப்போது நாம் அதுவரை கேட்ட பாடல்களின் தரவுகளைக் கொண்டு கலவையான இசைப்பெட்டியை செயற்கை நுண்ணறிவு உருவாக்குகிறது.
இதன் பலன்கள் என்னென்ன?
நமக்கான பாடல் வரிசையை செயற்கை நுண்ணறிவு உருவாக்குவதன் மூலம் பாடல்களை தேடித் துழாவ வேண்டிய தேவை குறைகிறது. பழைய, மறந்த, கேட்டிராத, புதிய பாடல்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நமது பாடல் கேட்கும் பழக்கத்தை இசை வழங்கும் செயலிகள் துல்லியமாக புரிந்து கொண்டு நமக்கான அனுபவத்தை மேம்படுத்தப்பட்ட வகையில் தர முடிகிறது.
தற்போதைக்கு இசை வழங்கும் முதன்மையான செயல்களில் மட்டும் இருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு திறன் விரைவில் அனைத்து இசை வழங்கிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமின்றி தனியாகவும் செயற்கை நுண்ணறிவு இசைக்காகவே செயலிகள் இணையதளத்தில் இருந்தாலும் பயனர்களின் நம்பிக்கையைப் பெற்ற இசைத்தளங்களில் விரைவில் இந்த வசதி முழுமையாக வரவிருக்கிறது. இது பயனர் அனுபவத்தை எளிதாகவும் இயல்பாகவும் ஆக்குவதாக, செயற்கை நுண்ணறிவு இசைப் பெட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- விவேக்பாரதி
பாட்டுப் பட்டியலை செயற்கை நுண்ணறிவு உருவாக்குவது குறித்த செய்தி
