ஆப்பிள் ஏர்பாட்களில் படக்கருவியை இணைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிமேல் காது கேட்க மட்டுமன்று, பார்க்கவும்தான்.

2016 ஆம் ஆண்டில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிளின் ஏர்பாட்கள் வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. சில புதிய அம்சங்களைத் தவிர்த்து, வேறு எந்த ஒரு பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதன் பிறகு 2019ல் ஏர்பாட்ஸ் புரோ, 2020ல் ஏர்பாட்ஸ் மேக்ஸ் இரண்டும் களத்தில் இறங்கின. அதன்பிறகு அவற்றிலும் வியக்கும்படியான மாற்றங்கள் வெளியாகவில்லை. அதன் காரணமாகவே என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பது தொடர்பான தகவல்கள் வெளியான வண்ணமே உள்ளன.
இந்த மூன்று ரக ஏர்பாட்களிலும் வெளியாகப் போகும் மாற்றங்களை ஆய்வாளர் மிங் சி குவோ கணித்திருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று ஏர்பாட்களில் வரப்போகும் படக்கருவி அம்சம். ஆப்பிள் செயற்கை நுண்ணறிவை மக்களிடையே கொண்டுசெல்ல ஆப்பிள் நிறைய முயற்சிகளை எடுத்துவருவது நமக்குத் தெரியும். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் ஏர்பாட்களில் படக்கருவியைக் கொண்டுவரும் அம்சம்.
இது எப்படிச் சாத்தியமாகும் எனும் உங்கள் கேள்விக்கான பதில் காத்திருக்கிறது. தொடர்ந்து படியுங்கள். முதலில் ஏர்பாட்களில் படக்கருவியைக் கொண்டுவருவதன் மூலம் காட்சி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த முடியும். இது ஐபோன் 16 ரக திறன்பேசிகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
இதன் மூலம் பயனரின் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிந்து அதற்கேற்றாற்போல் செயற்கை நுண்ணறிவு தன்னை தகவமைத்துக்கொள்ளும். உதாரணமாக நீங்கள் ஒரு மருத்துவமனையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வரைபடத்தில் தேட வேண்டிய அவசியம் இல்லை. செயற்கை நுண்ணறிவு உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிந்து அருகிலுள்ள மருத்துவமனையை அடைய உதவி புரியும். இதேபோல ஆப்பிள் விஷன் புரோவிலும் இந்த படக்கருவியின் மூலம் மேம்பாடு வரும் வாய்ப்புள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, உங்கள் அசைவைப் பொறுத்து உங்களுக்கு வழங்க வேண்டிய ஒலியை மாற்றியமைக்க விஷன் புரோவிற்கு இது உதவி புரியும்.
அடுத்து ஏர்பாட்ஸ் புரோவில் அதன் மறுவடிவமைப்பு, ஆப்பிளின் பவர்பீட்ஸ் புரோவில் உள்ளதைப்போல இதயத் துடிப்பு உணர்விகள் என மாற்றங்கள் வரிசை கட்டுகின்றன. இதேபோல ஏர்பாட்ஸ் மேக்ஸில் எடைக் குறைப்பு, நிகழ் நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் அம்சம் என பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளன.
இந்த அம்சங்களைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று ஆப்பிள் இன்சைடர்
தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள் அதனைப் படித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்.
- மு. இசக்கிமுத்து
