வாட்சாப்பில் நீங்கள் பிறருக்கு அனுப்பிய அல்லது பிறர் உங்களுக்கு அனுப்பிய காணொளி, புகைப்படம், படவரைவு ஆகியவற்றை மீண்டும் தேட முடியாமல் அவதிப்பட்ட அனுபவம் பலருக்கும் உருவாகியிருக்கலாம். குறிப்பாக ஒரு புகைப்படத்தை யார் அனுப்பினார்கள், நாம் யாருக்கு அனுப்பினோம் என்பதே நினைவில் இல்லையெனில் அதை ஒவ்வொரு தொடர்பு எண்ணிலும் சென்று தேடுவது முற்றிலும் இயலாத காரியம். இந்த சிக்கலைச் சரி செய்ய வாட்சாப் புதிய முயற்சியுடன் வந்துள்ளது.

அதாவது வாட்சாப்பில் நாம் பயன்படுத்தும் அனைத்து புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தொகுத்துக் காண்பிக்கும் வகையில் புதிய மையம் (Hub) தொடங்கப்படவுள்ளது. முன்னர் ஒவ்வொரு பெயருக்கும் இவை தனித்தனியாக இருந்தன. இனிமேல் எல்லாம் ஒரே இடத்தில் தொகுப்பாக இருக்கும். இந்த சேவை முதலில் இணைய வாட்சாப்பில் வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. வாட்சாப் செயலியில் இருக்கும் அமைப்புகளுக்கு மேல் இந்த வசதி தனியாக இருக்கும். சரியான சொற்களைப் பயன்படுத்தி புகைப்படங்கள், கோப்புகள், இணைப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களின் வகைகள், தேதி, அளவு ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த மையத்தை வரிசைப்படுத்தலாம்.
இது போக யார் அனுப்பினார்கள், எந்த தேதியில் அனுப்பப்பட்டது என்பதும் அதில் காட்டப்படும். பல கோப்புகளை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து பிறருக்கு அனுப்புவது, நீக்குவது, பதிவிறக்கம் செய்வது போன்றவற்றைச் செய்ய முடியும். ஏற்கனவே வாட்சாப்பில் இது போன்ற ஒரு மையம் உள்ளது ஆனால் அது குறைவான வசதிகள் கொண்டது. சிக்கலானதும் கூட. தற்போது இணைய வாட்சாப்பில் உருவாக்கப்படும் இந்த புதிய மையம் மிக எளிதாக அணுகக் கூடிய வகையிலும் பயனுள்ளதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்சாப்பின் இந்த புதிய மையம் இன்னும் உருவாக்க நிலையிலேயே உள்ளது, முழுமையாக எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இதே மாதிரியான வசதி திறன்பேசியில் இருக்கும் வாட்சாப் செயலியிலும் சேர்க்கப்பட்டால் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதே போல் வாட்சாப்பில் செயற்கை நுண்ணறிவு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு நண்பர்களை உருவாக்கிக்கொள்ளலாம். இந்த அம்சம் பயனர்களுக்கு உதவியாளர்களை வடிவமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு நண்பர்களைப் பயனர்கள் தங்கள் உற்பத்தித்திறன் உதவியாளராக, தொழில்நுட்ப பயிற்சியாளராக அல்லது நேரத்தைச் செலவழிக்க ஒரு வேடிக்கையான வழியாக தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். பயனர்கள் இந்த செயற்கை நுண்ணவு நண்பரின் தோற்றம், பங்கு, ஆளுமை பண்புகள், உரையாடல் தொனி ஆகியவற்றையும் தனிப்பயனாக்க முடியும். விரைவில் ஆண்டிராய்டு பயனாளர்கள் மத்தியில் இந்த சோதனை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சத்யா கோபாலன்
