விளையாட்டு பலவிதம்

ஆப்பிள் திறன்பேசிகளில் புகழ் பெற்ற விளையாட்டுகளில் சில புதுப் பொலிவுடன் வெளியாகவுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் படைப்பாற்றல் மிக்க விளையாட்டுகளை நிறுவும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் அறிமுகமாகும் விளையாட்டுகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.

உலக மக்கள் தொகையில் 84 விழுக்காட்டினர், திறன்பேசிகளில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதாக 2024-ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. இதனாலேயே திறன்பேசி விளையாட்டு நிறுவனங்கள், ஆண்டுதோறும் புதுப்புது மேம்படுத்தல்களைக் கொண்டுவரும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி ஐபோன் பயனர்களுக்காகப் புகழ்பெற்ற விளையாட்டுகள் சில, வரும் ஜூலை மாதம் புதிய அம்சங்களுடன் அறிமுகமாகின்றன. அவற்றுள் சில,

ஆங்க்ரி பர்ட்ஸ் பவுன்ஸ் (Angry Birds Bounce)

கோபக்கார பறவைகள் (Angry birds) என்ற உலகப் புகழ் பெற்ற விளையாட்டு, பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. தடைகளை உடைத்து, சிறைக்குள் இருக்கும் பன்றி உருவங்களை அழிக்கும் வகையில், பறவைகளைக் கவணில் வைத்து ஏவி விடும் வகையில் இந்த விளையாட்டு அமைக்கப்பட்டிருக்கும். கோணங்களைச் சரியாகக் கணித்து விளையாடும் விளையாட்டாக உருவாக்கப்பட்டு புகழடைந்த இந்த விளையாட்டு, தற்போது புதிய பரிமாணத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது.

கிங்டம் ரஷ் 5 : அலையன்ஸ் டிடி (Kingdom Rush 5: Alliance TD)

அயர்ன்ஹைட் கேம் ஸ்டூடியோ நிறுவனத்தின் களிநயமூட்டும் கிங்டம் ரஷ் 5  மதில் காக்கும் ரக (Tower defense) விளையாட்டாகும். 15 முக்கியக் கதாபாத்திரங்கள், 17 மதில்கள், 32 மேம்படுத்தல்கள், 22 தளங்கள், 40 எதிரி வகைகள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக ஐபோன்களுக்கு வெளியாகவுள்ளது. 

சுய்கா விளையாட்டு (Suika Game)

பாத்திரத்திற்குள் விழும் பழங்களைத் தகுந்த அளவுகளின் அடிப்படையில் பிடிக்கும் விளையாட்டு சுய்கா. ஒரே மாதிரியான பழங்களை அடுத்தடுத்து பிடிப்பதன் மூலம் பழங்களின் வகைகள் பெரிதாகிக் கொண்டேபோய், இறுதியில் தர்பூசணி பழ அளவுக்கு வளரும். எந்தப் பழமும் பாத்திரத்தை விட்டு வெளியே சிந்தாதபடி ஆட்டத்தை முடிப்பதே இந்த விளையாட்டின் விதி ஆகும். பார்வைக்கு சவால் விடும் இந்த விளையாட்டை உலகளவில் பலர் விளையாடி வருகின்றனர். இதுவும் ஐபோன் இயங்குதளத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு ஜூலை மாதம் அறிமுகமாகவுள்ளது. 

க்ரயோலா ஸ்கிரிபிள் ஸ்க்ரூபீ பெட்ஸ் (Crayola Scribble Scrubbie Pets)

வண்ணங்களை விரும்பும் குழந்தைகளைக் குறி வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, செல்லமாக வீட்டில் வளர்க்கும் விலங்குகளைப் பராமரிக்கும் கட்டளைகளைக் கொண்டுள்ளது. குதிரை, நாய், பூனை, முயல் முதலிய 90க்கும் மேற்பட்ட விலங்குகளில் இருந்து பிடித்ததைத் தேர்ந்தெடுத்து, அதை அன்றாடம் சுத்தம் செய்வது, உணவு வழங்குவது போன்ற பராமரிப்புகளைச் செய்து விளையாடக் கூடியது. முப்பரிமாண விலங்கு உருவங்களின் மேல் வண்ணம் தீட்டியும் விளையாடலாம். இந்த விளையாட்டும் ஐபோனுக்கு ஜூலை மாதம் வரவுள்ளது. 

இதுபோக ப்ரூட் நிஞ்சா கிளாசிக் (Fruit Ninja Classic), ப்ளூன்ஸ் டிடி 6 (Bloons TD 6) உள்ளிட்ட விளையாட்டுகளும் சில மேம்படுத்தல்களுடன் அறிமுகமாகும் என்று தெரியவருகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் வகையிலும், பெரியவர்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்குகளாகவும் உள்ள விளையாட்டுகள் பலவற்றை உருவாக்கி, மேம்படுத்தும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை ஐபோனில் விளையாட்டுகளை விரும்பும் பயனர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

  • விவேக்பாரதி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now