மின்னஞ்சல் முகமூடி

அன்றாடம் மின்னஞ்சல் உள்பெட்டிகளை நிரப்பும் விளம்பரச் செய்திகளால் அவதிப்படுகிறீர்களா? அதனால் தனியுரிமை பாதிக்கப்படுவதாகத் தோன்றினால், உங்கள் மின்னஞ்சலுக்கு முகமூடி மாட்டிக் கொள்ளும் வசதி ஒன்றிருப்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. 

இணையதள உலகில் அனைவருக்குமே மின்னஞ்சல் முகவரி முக்கியமான அடையாளம். விற்பனை வலைதளங்களுக்குள் நுழையும்போது நமது மின்னஞ்சல் அடிப்படையிலேயே அவர்கள், வருகைக் கணக்கைக் கணிக்கின்றனர். அப்படிப் பதிவாகும் மின்னஞ்சல்கள் அதன்பின் நாள்தோறும் அவற்றின் விற்பனைச் செய்திகளைப் பெறுகின்றன. அளவின்றி குவியும் விற்பனைச் செய்திகளால் பலமுறை நம் மின்னஞ்சல் உள்பெட்டி நிரம்பி வழியும். மேலும், நமக்குத் தேவைப்படும் மின்னஞ்சலுக்கு இடமின்றி நம்மை வந்து சேராமலே போகும் நிலையும் உருவாகும். இதைத் தடுக்கும் வழியாகவே ஈமெயில் அலயஸ் (Email Alias) என்ற மின்னஞ்சல் மாற்றுப்பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. 

அதென்ன மின்னஞ்சல் மாற்றுப்பெயர்?

மின்னஞ்சல் மாற்றுப்பெயர் என்பது, விளம்பரச் செய்திகளை அனுப்பும் வலைத்தளங்களுக்கும் நமது மின்னஞ்சல் முகவரிக்கும் இடையில் செயல்படும் திரையாகும். தேவையற்ற இடத்தில் நமது முதன்மை மின்னஞ்சல் முகவரி தெரியாமல் பார்த்துக் கொள்ளும் முகமூடி என்றும் விவரிக்கப்படுகிறது. இதன்மூலம் நமது தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. இணையதளத்தில் உலவும் போலிகளால் ஏற்படும் தரவுத் திருட்டு தவிர்க்கப்படும். 

இது எப்படி வேலைசெய்கிறது? 

அதாவது, நாம் ஏதேனும் விற்பனைத் தளத்திற்குள் செல்லும்போது, இந்த மின்னஞ்சல் மாற்றுப்பெயரைக் கொண்டு உள்நுழைந்தால், அங்கிருந்து நமக்கு அனுப்பப்படும் விளம்பரச் செய்திகளின் பெறுநர் பகுதியில் நமது முதன்மை மின்னஞ்சல் முகவரிக்குப் பதிலாக இந்த மாற்றுப்பெயர் முகமூடி போல் அமர்ந்திருக்கும். எடுத்துக்காட்டாக, நமது முதன்மை மின்னஞ்சல் முகவரி [email protected] என்று இருந்தால், மின்னஞ்சல் மாற்றுப்பெயர், [email protected] என்று கூட இருக்கலாம். விளம்பரச் செய்திகள் நமக்குத்தான் வரும், ஆனால் நமது முதன்மை மின்னஞ்சல் முகவரி அவர்கள் கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருக்கும். 

இதன் பயன்கள் என்ன? 

மின்னஞ்சல் முகவரியின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதே மின்னஞ்சல் மாற்றுப் பெயரின் முதன்மையான பயன். விற்பனைச் செய்திகளின் குழுவுடன் பல நேரங்களில் ஆபத்தான பிஷிங் மின்னஞ்சல்களும் வரும். அத்தகைய பிஷிங் செய்திகளை அதிகம் அனுப்பும் வலைத்தளத்தை, நம் தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி கண்டுபிடிக்க மின்னஞ்சல் மாற்றுப் பெயர் பயன்படுகிறது. இதன்மூலம் அதிகப்படியான விளம்பர மின்னஞ்சல்களைத் தவிர்த்து, நமது மின்னஞ்சல் பெட்டியை நேர்த்தியாகப் பராமரிக்க முடியும் என்று இதைப் பயன்படுத்துவோர் குறிப்பிடுகின்றனர். அதோடு சில சமயங்களில் நமக்கு இந்தச் சேவை தேவைப்படாது என்று தெரிவித்த பிறகும் அதை மதிக்காமல் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி நம்​மைத் தொந்தரவு செய்வோரைத் தவிர்க்கவும் இயலும்.

எப்படி உருவாக்குவது? 

பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் ஜிமெயில், யாஹூ உள்ளிட்ட மின்னஞ்சல் சேவை வழங்கிகளில் இந்த அம்சம் இயல்புநிலையிலேயே வழங்கப்படுகிறது. ஜிமெயிலில் உள்ள அமைப்புகளுக்குள் நுழைந்து, கணக்குகளைச் சொடுக்கி, அதற்குள் “மற்றொரு மின்னஞ்சல் முகவரியைச் சேர்” என்பதைத் தொட்டால், புதிய மின்னஞ்சல் பெயரை உள்ளிடும் பெட்டி திறக்கும். அதற்குள் பெயரைச் சேர்த்து, இதைப் புனைப்பெயராக நடத்து என்ற தேர்வைக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் மின்னஞ்சல் மாற்றுப்பெயர் உருவாகிவிடும். இதற்கென்று தனித்துவமான புற வலைதளங்களும் செயல்படுகின்றன. ஆனால் அடிப்படை தேவைகளுக்கு ஜிமெயில் வழங்கும் சேவையே போதுமானது என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். இந்த மின்னஞ்சல் மாற்றுப்பெயரை, நாம் நுழையும் விற்பனைத் தளங்களில் உள்ளிட்டுக் கொண்டால், அங்கிருந்து வரும் விளம்பரச் செய்திகள் பாதுகாப்பான முறையில் நம்மை வந்தடையும். 

தெரியாத வலைதளங்களில் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதைத் தவிர்ப்பதே நேரிடையாக இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்கும் வழி என்றபோதிலும், தனியுரிமை மீது மிகுந்த கவனம் கொண்டவர்களுக்கு, இந்த மின்னஞ்சல் மாற்றுப்பெயர் என்ற முகமூடி கச்சிதமான பரிசாகிறது.

  • விவேக்பாரதி

மின்னஞ்சல் மாற்றுப் பெயர் குறித்த விளக்கம்

மின்னஞ்சல் மாற்றுப் பெயரை உருவாக்கும் எளிய முறை

மின்னஞ்சல் மாற்றுப் பெயர் பயன்பாட்டு அனுபவம் குறித்த கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now