நமது அன்றாடச் செயல்களைத் திட்டமிட்டு செய்வதற்கு ஜெமினி செயற்கை நுண்ணறிவு எவ்வாறெல்லாம் உதவும் எனத் தன் வலைத்தளத்தில் பட்டியலிட்டிருக்கிறது கூகுள்.

நமது பணிகளை எளிமையாக்குவதற்கும், அவற்றைக் கச்சிதமாகச் செய்து முடிப்பதற்கும் கூகுள் புதுவித செயலிகளையும் அம்சங்களையும் உருவாக்கிவருகிறது. முதலிலிருந்த கூகுள் உதவியாளர் நாம் கூறும் வேலைகளை, கூறும் விதங்களில் மட்டும் செய்து தந்து கொண்டிருந்தார். அவர் இணையத்தில் தேடி உங்களுக்குத் தேவையான பதிலைத் தருவது, அலாரம் வைப்பது, நீங்கள் கூறுபவற்றை நினைவுபடுத்துவது, திரையின் வெளிச்சம், ஒலி போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது, அழைப்புகளை மேற்கொள்ளுவது இதுபோன்ற இன்னும் பல பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு வந்தால் நமக்கு வேலை இருக்காது என்ற பலரின் நிலைதான் கூகுள் உதவியாளருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இப்போது அனைத்துமே செயற்கை நுண்ணறிவின் வசம் சென்றுவிட்டதால், அவரின் பணியைப் பறித்து ஜெமினியிடம் கொடுத்திருக்கிறது கூகுள். இந்த பணிப்பறிப்பு நடவடிக்கை கூகுளின் வலைப்பதிவு மூலம் நடைபெற்றிருக்கிறது.
அப்படி என்னதான் அந்த வலைப்பதிவில் இருக்கிறதென்று பார்த்தால் கூகுள் உதவியாளர் செய்து கொண்டிருந்த பணிகள் அனைத்தையும் இனிமேல் ஜெமினி செய்யும் எனக் கூறியிருக்கிறது கூகுள். இதுவரை கூகுள் உதவியாளர் செய்யாத பணிகள் கூட ஜெமினிக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த வேலைகளுக்குத் திட்டமிடப்பட்ட செயல்கள் அம்சம் எனப் பெயரிட்டிருக்கிறது கூகுள். இந்த அம்சம் வெளியாகுமெனக் கடந்த ஆண்டிலிருந்தே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இது போன்ற அம்சம் சாட்ஜிபிடியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது.
சரி ஜெமினியின் கதைக்கு வருவோம். அது செய்யப்போகும் முதல் வேலை ஒரு நிகழ்விற்காக உங்களைத் தயார் செய்வதுதான். நீங்கள் நிகழ்வைப் பற்றிக் கூறி, தேதி நேரத்தை மட்டும் அதனிடம் கூறினால் போதும். அது மறக்காமல் உங்களுக்கான திட்டத்தைத் தயார் செய்து கொடுத்துவிடும். மேலும் வாசிக்க இயலாத மின்னஞ்சல்களை எல்லாம் தொகுத்து, சுருக்கி, நீங்கள் புரிந்துகொள்ளும்படி மாற்றித் தந்துவிடும் இந்த ஜெமினி.
அடுத்து நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளில் உதவி செய்யும். உங்கள் திட்டங்களைப் பற்றி வலைப்பதிவு எழுதுபவராக இருந்தால், இனிமேல் புது யோசனைகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நீங்கள் எதைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்பதை ஐந்து யோசனைகளாக உங்களுக்கு இது தந்துவிடும். இதைப்போன்ற நிறைய பணிகளை எளிமையாக்கும் நடவடிக்கைகளைச்
செய்திருக்கிறது கூகுள். அத்தனையையும் தெரிந்துகொள்ள விருப்பமிருப்பவர்கள் கூகுளின் வலைப்பதிவைப் படித்து விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்னொரு முக்கியமான செய்தியும் இருக்கிறது, இந்த அம்சத்தை ஜெமினியின்
சந்தா பயனர்களான ஜெமினி புரோ பயனர்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறது கூகுள். விரைவில் அனைவருக்கும் கொண்டுவருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதுவரை காத்திருப்போம்.
- மு. இசக்கிமுத்து
