அண்மையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் அப்பதவிக்குச் சரியானவர்தானா என்றொரு விவாதம் எழுந்தது. இன்டெலிஜென்ஸ் தொடர்பான விமர்சனங்கள், புதிய வன்பொருள் குறைபாடுகள் போன்ற சவால்கள் இருந்தாலும் டிம் குக்கின் மேலாண்மை திறனும், நிறுவனத்திற்கு அவரால் ஏற்பட்ட வளர்ச்சியும் அவரை தலைமைப் பொறுப்பிலேயே தக்கவைத்துள்ளன. இந்தக் கட்டுரையில், டிம் குக்கின் ஊக்கமளிக்கும் பயணத்தையும், அவர் ஆப்பிளை எவ்வாறு மேம்படுத்தினார் என்னும் நுணுக்கங்களையும் பார்ப்போம்.

டிம் குக், உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2011ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ்க்குப் பிறகு இப்பொறுப்பை ஏற்ற இவர், ஆப்பிளை பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சி அடையச் செய்துள்ளார். அவரது தலைமையின் கீழ், ஆப்பிளின் பங்குகள் 1000 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் உள்ள ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த டிம் குக், ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியல் படித்தார். பின்னர் டியூக் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகக் கல்வி கற்றார். அங்கே “ஃபுகுவா மாணவர் விருது” எனப்படும் ஆண்டின் சிறந்த மாணவர் விருதைப் பெற்றார். பட்டம் முடித்த பின் ஐபிஎம் நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், காம்பேக் நிறுவனத்தில் உயர்நிலை நிர்வாகியாக இருந்தார்.
1998ஆம் ஆண்டு, முப்பத்தேழாவது வயதில், டிம் குக் ஆப்பிளில் உலகளாவிய செயல்பாடுகளுக்கான மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அறிமுகப்படுத்திய “விரைவுப் பொருள் தயாரிப்பு முறை” (Just-in-Time) ஆப்பிளின் தயாரிப்பு, விநியோக முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், சரக்கு சேமிப்பு நாள்கள் மாதங்களிலிருந்து ஐந்து நாள்கள் வரை குறைந்தன — இது தொழில்துறையில் புரட்சிகர முன்னேற்றமாக கருதப்பட்டது.
ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, டிம் குக் 2004, 2009ஆம் ஆண்டுகளில் தற்காலிக தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்ற பின்னர் தான், ஐகிளவுட்டும், ஐபேட்ம் வெளியிடப்பட்டன. 2011ஆம் ஆண்டு, நிரந்தர தலைமை பொறுப்பை ஏற்ற பின், நிறுவனம் வேகமாக வளரத் தொடங்கியது.
டிம் குக்கின் நிர்வாகப் பாணி மிகச் சீரமைக்கப்பட்டதொடு திட்டமிடப்பட்டதும் ஆகும். ஒவ்வொரு தயாரிப்பு முயற்சிக்கும், ஒரு முழுநேர திட்ட ஒருங்கிணைப்பாளரை நியமித்து, பணநிலை, பணியாளர்கள், வளங்கள் போன்றவை அனைத்தையும் திட்டமிட்டு செயல்பட வைக்கிறார். இதன் மூலம், அணி உறுப்பினர்கள் ஒன்றுபட்டு பணியாற்றும் பண்பும், தயாரிப்பு உயர்தரத்துடன் வெளியிடப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், அவரது தலைமையில், தனியுரிமை, போட்டி ஒழுங்குமுறை போன்ற சில சிக்கல்கள் எழுந்தன. 2021இல், மனித உரிமை என கருதப்படும் தனியுரிமையை பாதுகாக்க, கருவிகளில் உள்ள உள்ளடக்கங்களைத் தானாக ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகமானது. இது சிலரிடையே விமர்சனங்களையும் சந்தேகங்களையும் எழுப்பியது.
மேலும், ஆப்ஸ்டோரில் 30 விழுக்காடு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆப்பிள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எபிக் கேம்ஸ் நிறுவனமும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அமெரிக்க மக்களவை நீதிக்குழுவின் முன்னிலையில் டிம் குக் விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சர்ச்சைகள் இருந்தாலும், டிம் குக்கின் தெளிவான திட்டமிடல், விநியோகச் சங்கிலி மேலாண்மை, தயாரிப்புகளின் உயர்தரம் மற்றும் நிலையான லாப வளர்ச்சி ஆகியவை, ஆப்பிளை இன்று உலகளவில் நம்பகத்தன்மை வாய்ந்த முன்னணி நிறுவனமாக மாற்றியுள்ளன என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.
- நவீனா
