வங்கிப் பரிவர்த்தனைகளில் தனிப்பயனாக்க அடையாள எண்கள் (Personal Identification Number) எனப்படும் பின் எண்கள் மிக முக்கியமானவை என்பதை நாம் அறிவோம். வங்கி சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் அந்தக் கடவு எண்கள் அவசியம் என்பதால், அதை ரகசியமாகப் பாதுகாப்பதிலும் நாம் கவனமாக உள்ளோம். பெரும்பாலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற முக்கியமான தேதிகள், அலைபேசி இலக்கத்தின் சில பகுதி முதலியவற்றையே நாம் இத்தகைய எண்களாக வைத்திருப்போம். நமது தகவல்களைத் தெரிந்த எவராயினும் அந்த எண்களைக் கணித்துவிடுவது எளிது. இதைத் தவிர்க்கும் வகையில், பயனருக்குத் தொடர்பில்லாத எண்களைக் கடவு எண்களாக வைக்க வங்கிகள் பரிந்துரைக்கின்றன. மேலும், கணிப்பதற்கு கடினமான கடவுச்சொற்களையும் எண்களையும் உருவாக்கப் பல்வேறு வழிகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் அக்ஷரா.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கியுள்ள கடவு எண் உருவாக்கும் இயலிதான் அக்ஷரா. அதிலும் தமிழ்ச் சொற்களின் வடிவங்களில் இருந்து தனித்துவமான முறையில் எண்களைப் பெற்று, கடவு எண்களை உருவாக்குகிறது அக்ஷரா. ரிசர்வ் வங்கி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் வங்கிகளில் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு இந்தி எழுதப்படும் தேவனாகிரி எழுத்து வடிவத்திலிருந்து, எண்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஆக்ஸிஸ் வங்கி உருவாக்கியுள்ளது. அதன் பாணியில் தமிழ் எழுத்து வடிவங்களிலிருந்து எண்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அக்ஷரா செய்கிறது.
அதாவது, அக்ஷரா இயலியை இணையதளத்தில் கண்டுபிடிக்கலாம். அதற்குள் நுழைந்து, தமிழில் நாம் எழுத நினைக்கும் சொல்லை ஆங்கில வடிவத்தில் உள்ளிட வேண்டும். பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள சவாலைத் தீர்த்துவிட்டு, கடவு எண்ணை உருவாக்கச் சொல்லித் தொட்டால் போதும். நாம் எழுதிக் கொடுத்த சொல்லின் தமிழ் வடிவத்தைக் காட்டி, அதற்குள் மறைந்திருக்கும் எண்களைக் கொண்டு, தனித்துவமான கடவு எண்களைக் கொடுத்துவிடும். நான்கு, ஆறு இலக்கங்களில் கடவு எண்களுக்கான பரிந்துரைகள் கிடைக்கும். அதை நாம் பயன்படுத்துவது நமது விருப்பம்.
அக்ஷராவில் கடவு எண்கள் உருவாக்கத்திற்கான பரிந்துரைகளைப் பெறுவதன் மூலம் மனத்தில் பதியும் கடவு எண்ணை உருவாக்க முடியும். வழக்கமான எண்களை விட அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், மொழி அடிப்படையிலான எளிதான அணுகல் சாத்தியமாகிறது. இந்த அம்சம் குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் அஜய் குமார் ஸ்ரீவத்சவா, ”பாதுகாப்பும், பழக்கத்துக்கும் இடையே பாலம் கட்டும் முயற்சியாக இது அமையும். நமது வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த மொழியில் பாதுகாப்பாக பின் உருவாக்கிக்கொள்ளும் அளவிற்கு நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அக்ஷரா இயலி, ஒவ்வொரு எழுத்து வடிவத்திலிருந்தும் வெவ்வேறு எண்களை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக ய என்ற எழுத்தின் நேர்க்கோட்டிலிருந்து 1 ஐயும் காட்டுகிறது. அதன் கீழ் இருக்கும் படுக்கைக் கோட்டைச் சேர்த்து 7 என்ற எண்ணையும் காட்டுகிறது. இதன்மூலம் ஒவ்வொர் எழுத்திற்கும் தனித்துவமான எண்கள் கிடைக்கின்றன. இதில் எண் 6, எண் 7, எண் 1, ஆகியவை முறையே 210, 138, 113 முறை வருவதாக தொழில்நுட்ப ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை முழுவதுமாக நம்ப முடியாது என்று பலர் கருத்து கூறி வந்தாலும், செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் எண்களைப் பரிந்துரைகளாக மட்டுமே கொண்டு நமது தனித்துவமான அடையாள எண்களை உருவாக்குவது பாதுகாப்பான வழியாகக் கருதப்படுகிறது.

செல்லினம் என்ற சொல்லுக்கு எத்தனை முறை முயன்று பார்த்தாலும் 619667 என்ற கடவு எண்ணையே காட்டுகிறது அக்ஷரா. நீங்களும் பயன்படுத்திப் பார்த்துக் கருத்தளியுங்கள்.
- விவேக்பாரதி
அக்ஷரா இயலி அறிமுகம் குறித்த செய்தி
