சிறந்த கற்றல் செயலிகள்

நாம் அனைவருமே சிறு வயது முதலே ஏதோ ஒரு வித கற்றலில் விருப்பமுள்ளவர்களாகத்தான் வளர்ந்திருப்போம். அது பள்ளிக்கூட புத்தகங்கள் மட்டும் அல்லாது, கதைப் புத்தக வாசிப்பு, தகவல் களஞ்சியங்களை வாசிப்பது என பல வகைகளில் நீள்கிறது. அதன் பிறகு விக்கிப்பீடியா, இப்போது யூடியூப் காணொளி என கற்றல் பல பரிமாணங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது.​

இந்த புதிய வடிவங்களில் கூட நம்மில் பலரால் நேரம் ஒதுக்கி கற்க முடிவதில்லை. இந்த குறையை தீர்க்கும் வகையில் சிறந்த தகவல்களை, குறுகிய நேரத்தில் வழங்கும் 5 செயலிகளைப் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த பங்காற்றி வருகின்றன.

முதல் பரிந்துரையாக உள்ள மிமோ (Mimo) செயலி கணினி நிரலாக்கம் பற்றிய குறுகிய பாடங்களை உள்ளடக்கியது. செயலிக்குள்ளே நுழையும்போது, எந்த குறியீட்டு மொழியுடன் ஆரம்பிப்பது சிறந்தது எனக் கேள்விகளை எழுப்புகிறது. அனைத்து நிரலாக்கக் குறியீட்டு மொழிகளைப் பற்றிய பாடங்களும் இதில் இருக்கின்றன. ஒரு குளம்பியோ, தேநீரோ குடிக்கும் நேரத்தில் நிரலாக்க மொழியை கற்றுவிட முடியும் என்றால் நம்ப முடிகிறதா… அதைத்தான் மிமோ செயலி செய்துகொண்டிருக்கிறது.

மொழியைக் கற்க உதவும் செயலிதான் டிராப்​​ஸ் (Drops). இது நாம் கற்க விரும்பும் மொழியில், அதிகமான புதிய சொற்களை தெரிந்துகொள்ள உதவுகிறது. இதில் தினமும் ஒரே  விதத்தில் கற்காமல், ஒவ்வொரு நாளும் பாடத்திட்டத்தை வெவ்வேறு தலைப்புகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். சொற்களைக் கற்க உதவி புரிந்தாலும், அவற்றை இணைத்து மாலையாக்கும் இலக்கணத்தை இச்செயலி பெரியளவில் கற்றுத்தருவதில்லை. அதோடு இதில் தினசரி நேரவரம்பும்​ இருக்கிறது. சந்தாவை ​பயன்படுத்தாவிட்டால் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆங்கிலத்தில் சொல்வளத்தையும், இலக்கண அறிவையும் மேம்படுத்துவதற்கான செயலி வொகாபுலரி (Vocabulary). ஆங்கிலத்தை ஆழமாகக் கற்க விரும்புபவர்களுக்கே இந்த பரிந்துரை. எழுத்து வழக்கில் உள்ள சொற்கள் மட்டுமல்லாது பேச்சுவழக்கில் உள்ள சொற்களையும் இச்செயலி கற்றுத் தருகிறது. நீங்கள் செய​லிக்குள் நுழையாவிட்டாலும் சொற்களையும், ​அ​வற்றின் பொருளையும் அறிவிப்பாகவே அனுப்பிவிடுகிறது. இதன்​மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு புதிய சொல்லையாவது கற்றுக்கொள்ளலாம்.

கணினி ​அறிவியல், வரலாறு, உயிரினங்களைப் பற்றி கற்க ​உதவும் செயலி பி​ரைமர் (Primer). இதில் உள்ள பாடங்கள் மிகவும் ஆழமானவை அல்ல, ஆனால் பல்வேறு தலைப்புகளைப் பற்றிய அறிமுகத்தைப் பெறுவதற்கு மிகவும் பயனுள்ளவை. செயற்கை நுண்ணறிவு ​மூலம் கற்கும் வகையிலும் செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு கற்றலை முடித்த பிறகு தேர்வெழுதி, தேர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் அம்சமும் இதில் இருக்கிறது. இச்செயலி முழுவதும் சந்தா செலுத்திப் பயன்படுத்தும் வகையிலேயே இருக்கிறது.

பல்வேறு தலைப்புகளைப் பற்றி, இன்​​ஸ்டாகிராம் பயன்படுத்துவது போன்ற உணர்வோடு கற்க ஃபேக்ட்ஸ் (Facts) செயலியைப் பயன்படுத்தலாம். பெயரில் உள்ளது போலவே பல்துறைகளிலும் உள்ள உண்மைகளை விளக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட பதிவிற்கு விருப்பம் தெரிவிக்கும்போது அது தொடர்பான பதிவுகள் உங்களுக்குக் காண்பிக்கப்படும். இதில் பெரும்பாலான அம்சங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. சிலவற்றிற்கு மட்டும் சந்தா தேவைப்படுகிறது.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now