இணையம் இன்று எதையும் ஒரே சொடுக்கில் நம் முன் கொண்டு வந்து விடுகிறது. ஆனால் இணையத்தில் நாம் செய்யும் தேடல்கள், உலாவல்கள் எங்கோ யாரோ பதிவு செய்து கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் எப்போதும் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும். இதற்கான பதிலாக கூகுளின் குரோம் உலாவியில் உள்ள இன்கோக்னிடோ நிலை (Incognito Mode) மிகவும் புகழ்வாய்ந்தது. ஆனாலும் இது வழங்கும் தனியுரிமை உண்மையில் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.
குரோம் உலாவியில் இன்காங்னிடோ நிலையில் வைத்துப் பயன்படுத்துவது பாதுகாப்பனது என்பதும் நம்மில் பலரின் எண்ணம். நம்முடைய கருவிகளில் இருக்கும் தேடல் வரலாறு, குக்கீகள் (Cookies), தளம் சார்ந்த தரவு (Site Data) போன்றவற்றை நாம் சாளரத்தை மூடும் போதே இன்கோக்னிடோ நிலை அழித்துவிடும். அதனால், அதே கருவியைப் பிறர் பயன்படுத்தினாலும் நம்முடைய தேடல்களைப் பார்க்க முடியாது. பொதுக் கணினிகள் அல்லது பகிரப்பட்ட மடிக்கணினிகளில் இது ஓரளவுக்கு உதவுகிறது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு வரம்பு உண்டு.
நமக்கு இணைய சேவையை வழங்கும் நிறுவனம் நம்மால் பார்வையிடப்பட்ட அனைத்து வலைத்தளங்களின் பதிவுகளையும் வைத்திருக்கும். பல நாடுகளில் இந்த தகவல்களை சட்டப்படி விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அனுமதியும் உண்டு. பள்ளி, அலுவலகம் போன்ற இடங்களில் வலைத்தள நிர்வாகிகள் எளிதாக நம்முடைய உலாவல் வரலாற்றை பின்தொடர முடியும். நாம் பார்ப்பது எந்த வலைத்தளமோ அதற்கும் நம்முடைய இணைய நெறிமுறை முகவரி (Internet Protocol Address) தெரிந்துதான் தீரும். மேலும், உலாவி கைரேகை (Browser Fingerprinting) எனப்படும் தொழில்நுட்பம் மூலம் குக்கீகள் இல்லாமலேயே நம்மைப் பின்தொடர முடியும்.

அப்படியானால் இணையத்தில் தனியுரிமையை பாதுகாக்க என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை டோர் உலாவி (Tor Browser), பிரேவ் உலாவி (Brave Browser) போன்றவை தான். பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், ரகசியத் தகவலை வெளியிடுபவர்கள் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் உலாவி டோர் ஆகும். காரணம், டோர் உலாவி நம்முடைய இணையப் போக்குவரத்தை பல அடுக்குகளாகக் குறியாக்கம் (Encryption) செய்வதால் யாராலும் நம்முடைய உண்மையான இருப்பிடம் மற்றும் செயற்பாடுகளை கண்டுபிடிக்க முடியாது.
பிரேவ் ஒரு சாதாரண உலாவியே ஆனாலும் இதில் டோர் வசதி உள்ளதால் டோர் போலவே நம்முடைய இணையச் செயல்பாடுகளை பாதுகாப்பாகவும் மறைவாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
முல்வத் உலாவி (Mullvad Browser) தனியுரிமையை மையப்படுத்திய ஒன்று. இதன் முக்கியப் பணி உலாவி கைரேகை எனப்படும் நம்மை அடையாளம் காணும் முறையை மிகவும் கடினமாக்குவது. அதனால் இணையத்தில் நம்மைப் பின்தொடர்வது சிரமமாகிவிடும்.
ஆனால் இவ்வுலாவிகளுக்கும் சவால்கள் உண்டு. வேகம் குறைவாக இருக்கும்; சில வலைத்தளங்கள் அதைத் தடுக்கும்; சில நேரங்களில் பயன்பாடு சற்று சிரமமாக இருக்கும். ஆனாலும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
மொத்தத்தில் பார்த்தால் இன்கோக்னிடோ நிலை நம்முடைய கருவிகளில் இருக்கும் தேடல் வரலாற்றை மட்டும் மறைக்கும் கருவி. இணையத்தில் உண்மையான தனியுரிமை வேண்டுமெனில் டோர், வி.பி.என். (VPN) போன்ற கருவிகளையே நம்ப பரிந்துரைக்கிறார்கள் வல்லுநர்கள். வேகம் குறைந்தாலும் பாதுகாப்பு அதிகம் கிடைக்கும். விளம்பரங்களில் கூறப்படுவது போல அல்லாமல், நமக்கேற்ற பாதுகாப்பு மட்டத்தை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும்.
- அருட்செல்வம்
