பயனர் பாதுகாப்பின் உச்சமாகக் கருதப்படும் ஆப்பிளின் ஐபோன்கள், மெக் கணினிகள் ஒரு புதிய வகையான உளவு மென்பொருள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. வாட்சாப் செயலியில் இருந்த குறைபாடும், ஐஓஎஸ் 18.6 இல் உள்ள குறைபாடும் தாக்குதலுக்கு காரணமாகியிருக்கின்றன. ஆப்பிள், வாட்சாப் நிறுவனங்கள் இதைச் சரிசெய்துவிட்டதாக அறிவித்துள்ளன.

பொதுவாக இந்த மாதிரியான தாக்குதல்கள், ஏதேனும் இணைப்பை தொட்டாலோ அல்லது கோப்பை திறந்தாலோ மட்டுமே ஏற்படும். ஆனால் இப்போது, வாட்சாப் செயலியின் வழியே ஒரே ஒரு குறியீடு மட்டும் வழங்கப்படுகிறது. ஓர் அரட்டையை போல், மௌனமாக வழங்கப்படும் இக்குறியீடு மொத்த கருவியையும் தாக்கிவிடுகிறது. குறியீடு மூலம் அனுப்பப்படும் உளவு மென்பொருளால், தரவுகளின் தனியுரிமை அனைத்தும் கேள்விக் குறியாகிவிடுகின்றன. எந்த தொடுதலும் இல்லாமல் இந்த தாக்குதல் நடைபெறுவதால், பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இதனை ‘ஜீரோ-கிளிக்’ சுரண்டல் என்று விவரிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் பல்வேறு பயனர்களை வெகுவாக பாதித்தது என்றே கூறப்படுகிறது. வாட்சாப், ஆப்பிள் இரண்டுமே பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை மேற்கொண்டன. மெட்டா தனது வாட்சாப் செயலியை சரிசெய்தது, ஆப்பிள் ஐஓஎஸ், மேக்ஓஎஸ்ஐ திருத்தியது.
பொதுவாக இந்த மாதிரியான தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தேவையற்ற இணைய தளங்களுக்குள் நுழையாதது, இணைப்புகளை திறக்காதது என பலரும் கவனமாக இருப்பார்கள். ஆனால் இப்போதோ மிகவும் கவனமாக உள்ள பயனர் கூட பாதிப்பிற்கு ஆளாகலாம். இதை காரணம் காட்டியே அனைவரும் அச்சத்துடன் இருக்க வேண்டிய தேவையில்லை.
ஏனெனில் உளவு மென்பொருள் தாக்குதல்கள் அரிதாகவே சாதாரண பயனர்களை நோக்கமாகக் கொண்டவை. ஆனால் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் குறிவைக்கப்படுகிறார்கள். யாராக இருந்தாலும், அவர்களுடைய தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதற்கு தற்காலிக தீர்வு ஒன்றும் இருக்கிறது. ஆப்பிள் கருவிகளை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை கருவி தாக்கப்பட்டால், புதிய பதிப்பு வந்த பிறகு பழைய மென்பொருள்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதன் மூலம் உளவு மென்பொருளின் கதையும் முடித்து வைக்கப்படுகிறது.
இந்த வாட்ஸ்ஆப் உளவு மென்பொருள் தாக்குதல் தொழில்நுட்ப பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தாக்குதல்களை தொடுப்பவர்கள் எப்போதும் புதிய வழிகளைக் கண்டறிகிறார்கள்.
- மு. இசக்கிமுத்து
