தனக்குத் தேவையான தகவல்களை கூகுளில் தேடிப் பெறுவதைவிட அரட்டைச் செயலிகளுடன் உரையாடிப் பெறுவதை மக்கள் விரும்புகிறார்கள். கூகுள் நிறுவனத்தின் நோட்புக் எல்எம், குறிப்பெடுக்கும் அவசியம் உள்ளவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆய்வு செய்பவர்கள் நிறைய குறிப்புகள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. எழுத்து, குரல், காணொளி என எவ்வகைக் குறிப்புகளாக இருந்தாலும் ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்தச் செயலி உதவுகிறது. அது மட்டுமின்றி ஏதோ ஒரு தகவல் வேண்டுமெனில் நாம் ஒவ்வொன்றாகத் தேட வேண்டாம். தகவலைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினால் போதும். தகவலைத் தேடித் தருவதோடு எந்தக் கோப்பில் இருக்கிறது என்பதையும் சொல்கிறது. பெரும்பாலான மக்கள் நோட்புக் எல்எம் மாணவர்களுக்கானது என்று நிராகரிக்கின்றனர். ஆனால் இது அனைவருக்குமானது என்பதை உணரவைக்கும் சிறப்பு பயன்பாடுகள் உள்ளன.
உடல்நலப் பிரச்சினைகளை அலச உதவும்
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால், பலர் அணுகுவது கூகுளைத்தான். அப்படி நாம் தேடுதல் வேட்டையில் இருக்கும்போது, சில தளங்கள் தரவுகளை மேலோட்டமாக பதிவு செய்திருக்கும். அதைப் படித்துவிட்டு அச்சத்தின் உச்சத்திற்கே பலரும் செல்வதுண்டு. இந்த உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால், இப்படியெல்லாம் நடக்கும் என்ற தகவல்களை பார்த்ததும், பயம் ஏற்பட்டுவிடும். அந்த வேளையில் அதைப்பற்றி ஆழமாக அலசினால் இந்த பயம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதனைத்தான் நோட்புக் எல்எம் செய்கிறது. கூகுளின் நோட்புக், உடல்நலப் பிரச்சினை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ந்து, ஆழமான ஒரு குறிப்பாக தந்துவிடுகிறது. இதன் மூலம் நேரமும் மீதமாகிறது, அதே நேரத்தில் தேவையற்ற பயமும் மீதமாகிறது.
உடற்பயிற்சி பரிந்துரைகளை வழங்கும்
உடல் நலப் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அதனை தவிர்ப்பதற்காக உடற்பயிற்சி செய்ய நோட்புக் எவ்விதம் உதவிபுரிகிறது என்பதை அடுத்தாக பார்ப்போம். பலரும் யூடியூப் காணொளிகளையும், இன்ஸ்டாகிராம் செல்வாக்காளர்களையும் பார்த்தே உடற்பயிற்சிகளை செய்துகொண்டிருக்றோம். அவர்கள் மேலோட்டமாக கூறுவதை நாம் தவறாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உடல்வலி போன்ற பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கிறோம். இதற்கும் நோட்புக் எல்எம் பெருமளவில் உதவிபுரிகிறது. என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யவேண்டும், என்ற தெளிவான பரிந்துரையை நோட்புக் வழங்குகிறது. அந்த சிறிய பரிந்துரையில் மொத்த தகவல்களும் அடங்கிவிடுகின்றன. அதில் கழுத்து வலி பிரச்சினை ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாலும் நோட்புக் எல்எம் பதிலளிக்கிறது.
உங்களுக்கான காணொளி விளையாட்டுகளுக்கான பரிந்துரைகள்
காணொலி விளையாட்டுகளின் விளம்பரத்தை பார்த்து பலர் ஏமாறுவது உண்டு. விளம்பரங்களில் ஒருவிதமாக இருக்கும். விளையாடிப் பார்த்தால் மொத்தமாக வேறு விதமாக இருக்கும். உடனே அதன் மதிப்பாய்வில் சென்று திட்டித் தீர்த்துவிட்டு, செயலியையும் நீக்கிவிடுவோம். இந்த கால விரயத்தை நீக்க உதவுகிறது நோட்புக் எல்எம். ஏதேனும் ஒரு காணொளி விளையாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் நோட்புக்கை அணுகலாம். இது விளையாட்டின் செயல்படும் விதத்தைப் பற்றி விளக்கிவிடுகிறது.
இதே போல எந்த விதமாக வேலையாக இருந்தாலும், நோட்புக் எல்எம் மிகவும் எளிதாக முடித்துவிடுகிறது. ஒரு ஆழமான அறிவார்ந்த தனிப்பட்ட உதவியாளராகவே செயல்படுகிறது நோட்புக் எல்எம். முக்கியமாகச் செய்யவேண்டியது என்னவென்றால் இச்செயலி அலச வேண்டிய குறிப்புக்கான புத்தகங்கள் ஆய்வுக்கட்டுரைகளை நாமே தேர்ந்தெடுத்து அதற்குக் கொடுக்கவேண்டும் என்பதுதான். நாம் கொடுக்கும் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், வலைத்தளங்கள், காணொளிகளில் இருந்து மட்டுமே தகவல்களைத் தேடி பரிந்துரைகளை வழங்கும். தரமான உள்ளடக்கத்தைக் கொடுத்தால் பதிலும் தரமாகக் கிடைக்கும்.
- மு. இசக்கிமுத்து
