செயற்கை நுண்ணறிவு நமக்கு வழங்கும் நம்ப முடியாத வசதிகளைக் கண்டு வியக்கும்போது, ஒரு முக்கியமான உண்மையை மறந்துவிடுகிறோம். அதன் பெயரில் “நுண்ணறிவு” என்பது இருந்தாலும், உண்மையில் ஆழமான ஒரு புத்திசாலியாக இருப்பதில்லை. கருத்துகளைப் பற்றிய உண்மையான புரிதல் செயற்கை நுண்ணறிவிற்கு இல்லை. வெறுமனே சொற்களை இணைத்து பொருள் கொள்வதில் மிகவும் திறமையாக இருப்பதால், ஏதோ புரிந்துகொள்வது போன்ற தோற்றம் உருவாகிறது. பொருள்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அல்லவா?

எனினும் இந்த பொருள் கொள்ளும் திறமையை செயற்கை நுண்ணறிவு வளர்த்துக் கொள்வதற்கும் நிறைய பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கு பயிற்சி கொடுப்பதுதான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய செலவுகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆங்கர் இனோவேஷன்ஸ் (Anker Innovations) என்ற நிறுவனம், நம்பவே முடியாத ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
ஆங்கர் நிறுவனம் யூஃபி (eufy) என்ற ஒரு வீட்டுக்கான பல்வேறு வேலைகளைச் செய்யும் கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. வீட்டை சுத்தம் செய்வது, திருடர்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க பாதுகாப்பு புகைப்படக்கருவிகள் போன்ற இன்னும் பல அம்சங்களுடன் உருவாக்கப்பட்டது யூஃபி. திருடர்களிடமிருந்து வீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவின் சேவை என்பது இங்கே தேவைப்படுகிறது. அதனால் திருடர்கள் எப்படியெல்லாம் திருடுவார்கள் என்பதை யூஃபிக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
அமைதியாக பூனை போல வந்து திருடுவது, யாருமில்லாத நேரத்தில் வந்து திருடுவது, பூட்டை உடைத்து திருடுவது, காரை திருடுவது என திருட்டின் வகைகள் பலவாக உள்ளன. எனவே ஆங்கர் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில், திருட்டு தொடர்பான காணொளிகளை வழங்குமாறு கோரிக்கை வைத்தது. பயனர்கள் வழங்கும் காணொளிகளை வைத்து செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சியளிக்கவும் திட்டமிட்டது. ஒவ்வொரு நல்ல திருட்டு காணொளிக்கும் $2 வழங்க முன்வந்தது ஆங்கர் நிறுவனம். இது இல்லாமல் ஒரு சிசிடிவி கருவியில் உள்ள மொத்த காணொளிகளையும் வழங்கினால், $40 அளிப்பதாகவும் உறுதியளித்தது. பயனர்களும் ஆர்வத்துடன் தங்களிடம் இருக்கும் திருட்டு காணொளிகளை கொடுத்துவந்தனர்.
பாவம் திருட்டு சம்பவமே நடைபெறாத பயனர்கள் என்ன செய்வார்கள். அவர்களே திருடர்களாக நடித்து காணொளிகளை பதிவு செய்தும் கொடுத்தனர். உண்மையான திருடர்களையே தோற்கடிக்கும் வகையில் அவர்களது சாகசங்கள் இருந்தன என்று மெச்சுகிறது ஆங்கர் நிறுவனம். இப்போது யூஃபி கருவி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த சம்பவம்தான் செயற்கை நுண்ணறிவிற்கு பயிற்சியளிக்க நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. பெரும்பாலும் நமது தரவுகளை கொண்டே செயற்கை நுண்ணறிவிற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
- மு. இசக்கிமுத்து
