யூடியூப் இசையின் புதிய பரிமாணம்

யூடியூப் இசை, ரசிகர்களையும் கலைஞர்களையும் மேலும் நெருக்கமாக இணைக்கப் போகிறது. “மேட் ஆன் யூடியூப்’ நிகழ்ச்சியில் இதை யூடியூப் நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய மேம்படுத்தல் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிரியமான கலைஞர்களின் பாடல்களை தவற விடாமல் கேட்கும் அனுபவத்தைப் பெறமுடியும்.

முன் சேமிப்பு (Pre-save with countdown) என்ற வசதி மூலம், புதிய தொகுப்பு அல்லது பாடல் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் அதை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம், பாடல் வெளியீட்டு நேரத்தில் தானாகவே அறிவிப்பு வரும். அடுத்து, “தனித்துவமான காணொளி” என்ற அம்சம் மூலம் கலைஞர்கள் தங்கள் முன்னணி ரசிகர்களுக்கு மட்டும் சிறப்பு காணொளிகள், பின்னணி காட்சிகள், நன்றி காணொளிகள் அல்லது வெளியீட்டின் முன் சிறிய காணொளிகள் போன்றவற்றை பகிர முடியும். 

மூன்றாவதாக, வியாபாரத் திட்டமும் உண்டு. வணிகத் துளி (Merch Drops) எனப்படும் திட்டம் மூலம், கலைஞர்கள் தங்களின் தலையாய ரசிகர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட பதிப்பு கொண்ட  சட்டை, தொப்பி, அட்டைகள் போன்ற பொருள்களை விற்பனை செய்ய முடியும்.  தலையாய ரசிகர்கள் என்பது அவர்கள் ஒரு காணொளியை எத்தனை முறை பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

யூடியூபின் இந்த புதிய அம்சம் அனைத்து கலைஞர்களுக்கும் பொருந்தும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. பெரும் புகழ்வீச்சில்லாத கலைஞர்களும் இதில் ஈடுபடக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது எல்லாமே ரசிகர்கள் தங்கள் பிரியமான கலைஞர்களுடனான உறவை இன்னும் நெருக்கமாக அனுபவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

ஸ்பாட்டிபை, ஆப்பிள் மியூசிக் மாதிரியான தளங்களும் இதே போல முயற்சி  செய்து வருகின்றனர். ஆனால் யூடியூப் தன் தனி பாணியில் வரவுள்ளது. வரும் மாதங்களில் இந்த அனைத்து அம்சங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சிகள் தற்போது அமெரிக்காவில் சோதனை நிலையில் உள்ளன. அடுத்த கட்டமாக இந்தியா உட்பட பிற நாடுகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூடியூப்பின் கடந்த கால பாதைகளை ஆராயும் போது அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என்ற வரிசையில்தான் பெரும்பாலான வெளியீடுகள் நடந்துள்ளன. அதன்படி இந்தியாவில் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அல்லது ஆண்டு இறுதிக்குள் இந்த அம்சங்கள் வரலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா யூடியூப்பின் மிகப்பெரிய இசை சந்தை என்பதால் இந்த அம்சம் இங்கு வேகமாக பரவ வாய்ப்பு அதிகம் .

இனி யூடியூப் வெறும் பாடல்கள், காணொளி பார்க்கும் தளமாக இல்லாமல் ரசிகர்கள் கலைஞர்களோடு நேரடி உறவாடல் மற்றும் வணிக ரீதியாக மாறப்போகிறது.

  • சத்யா கோபாலன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now