2025 ஆம் ஆண்டில் நாம் பார்க்கும் எழுத்துருக்களின் வடிவங்கள், முன்பைவிட அதிகமாக கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. காரணம், இப்போது எழுத்துரு வடிவமைப்பு உலகில் இரண்டு பொருண்மைகள் ஒன்றாக சேர்ந்துள்ளன. ஒன்று புதிய தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும், மற்றொன்று பழைய நினைவுகளும் மனிதரின் கைவண்ணத்தின் திறனும்.

எழுத்துருக்கள் வெறுமனே வாசிக்க மட்டுமல்ல, அவை உணர்வையும், குணத்தையும் எடுத்துக்காட்டவும் உதவுகின்றன. சில எழுத்துருக்கள் அழுத்தமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். சில எழுத்துருக்கள் அமைதியாகவும், அழகாகவும், காலம் கடந்தும் நிலைக்கும் வகையிலும் இருக்கும்.
2025 இல் ஐந்து எழுத்துருக்கள் அதிகம் பேசப்பட்டன.
முதலாவது, விதிகளை உடைக்கும்(Anti-Design) எழுத்துருக்கள். இவை சீராக இருக்காது. சற்று குழப்பமாக, விளையாட்டுத்தனமாக, கையால் செய்தது போலத் தோன்றும். வாசிக்க சற்று கடினமாக இருந்தாலும், பார்ப்பவரின் கவனத்தை உடனே ஈர்க்கும். எல்லாமே ஒரே மாதிரி பளிச்சென்று இருக்கும் உலகில், தனித்துவமாகத் தெரிய இந்த பாணி பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது, பழைய கால நினைவுகளை (Heritage) தரும் எழுத்துருக்கள். புகழ்வாய்ந்த பழைய நிறுவனப் பெயர்களை நினைவூட்டும் இந்த எழுத்துகள், நம்பகத்தன்மையும், மதிப்பும் உள்ளதாக உணர வைக்கின்றன. “இந்த நிறுவனத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது” என்ற உணர்வை தரவே இந்த பாணி பயன்படுகிறது.
மூன்றாவது, 2000-களின் ஆரம்ப கால இணைய(Y2K) பாணி. அந்த காலத்தில் பார்த்த மின்னும் எழுத்துகள், வட்ட வடிவங்கள், அழுத்தமான நிறங்கள் இப்போது மீண்டும் வந்துள்ளன. இது மக்களுக்கு பழைய நினைவுகளைக் கிளறி, ஒரு நெருக்கமான உணர்வை தருகிறது.
நான்காவது, கையெழுத்து (Hand-Written) போல இருக்கும் எழுத்துருக்கள். மிகச் சரியாகவும் மென்மையாகவும் இருக்கும் எண்ணிம எழுத்துகளுக்கு நடுவில், சற்றே குறைபாடுகளுடன் இருக்கும் இந்த எழுத்துகள் மனிதத் தன்மையை காட்டுகின்றன. “இதை உருவாக்கியது ஒரு மனிதர்” என்ற உணர்வை தரவே இந்த பாணி பயன்படுத்தப்படுகிறது.
ஐந்தாவது, நடனமாடும் (Movement) எழுத்துருக்கள். இப்போது எழுத்துகள் நிலையாக இல்லாமல், நகர்கின்றன, மாறுகின்றன. இணையதளங்களில், காணொளிகளில், விளம்பரங்களில், எழுத்துகளே உயிருடன் இருப்பது போல தோன்றுகிறது. இதனால் பார்க்கும் மனிதர் அதை எளிதாக நினைவில் வைத்துக்கொள்கிறார்.
இந்த எல்லா போக்குகளுக்கும் நடுவில் ஒன்று மட்டும் மாறவில்லை. எழுத்துகள் வாசிக்க எளிதாக இருக்க வேண்டும். சொல்ல வேண்டிய கருத்தைத் தெளிவாக விளக்க வேண்டும். அதோடு எழுத்துகள் பேசும் ஒரு மொழியாகவும் பரிணமித்திருக்கின்றன. அதனால்தான், இன்றைய வடிவமைப்பு உலகில் எழுத்துகளுக்கும் ஒரு குரல் கிடைத்திருக்கிறது.
- மு. இசக்கிமுத்து
