கொற்கை : முத்து நெடுமாறன் உரை

ரோஜா முத்தையா நூலகம், ஒண்மை அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த ‘கொற்கை’ எழுத்துரு வெளியீட்டு விழாவில் செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் நிறுவனர் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் ஆற்றிய உரையை செல்லினம் வாசகர்களுக்காக கீழே கொடுத்துள்ளோம். :

korakai release

புதிய முயற்சிகள்

இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஒண்மை அறக்கட்டளை நண்பர்களுக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், தமிழ் எழுத்துருவுக்கு இப்படியான அணுகுமுறையுடன் செயலாற்றுவோர் இப்போது அதிகம் இல்லை. உங்கள் முயற்சி இல்லையென்று சொன்னால் இவ்வளவு பெரிய ஒரு திட்டம் நடைமுறைக்கு வந்திருக்காது.

கடந்த ஆண்டு இங்கு ‘கணித்தமிழ்’ மாநாடு நடைபெற்றது. அங்கு எனது உரையில் ஒரு சிறிய விளக்கக்காட்சியைக் காட்டினேன். அது ஐபேடில் நான் உருவாக்கிய செயலி. அதில் ஆப்பிள் பென்சில் கொண்டு நீங்கள் தமிழ் எழுத்துக்களை எழுத வேண்டும். குழந்தைகளுக்காகத்தான் அதை செய்தோம், ஆனால் யார் வேண்டுமானாலும் தமிழ் எழுத்துக்களை எழுதலாம். நீங்கள் எழுத எழுத, அது சரியாக எழுதுகிறீர்களா இல்லையா என்றுகூடக் காட்டும்.

எடுத்துக்காட்டாக ‘கா’ எழுதுவதற்குப் பதிலாக ‘தா’ என்று எழுதினால் அது தவறு என்று சொல்லும்; ‘கா’ என்று எழுதினால் சரியாகக் காட்டும். குழந்தைக்குச் சரியாக எழுதச் சொல்லிக் கொடுப்பது ஒரு நோக்கம் என்றாலும், அனைத்து எழுத்துக்களையும் எழுதி முடித்த பிறகு அந்த எழுத்தை ஓர் எழுத்துருவாக அந்தச் செயலி மாற்றித் தந்துவிடும். அதை நான் ஏன் தொடர்ந்து செய்யவில்லை என்றால், முதலாவதாக அதற்கு ஐபேட் மற்றும் ஆப்பிள் பென்சில் தேவைப்பட்டது; இரண்டாவது காரணம் தரக்கட்டுப்பாடு இல்லாமல் தமிழ் எழுத்துக்கள் நிறைய உருவாவதை நான் விரும்பவில்லை. அதைச் செய்து முடிப்பதற்குப் பொறுமை தேவைப்பட்டது. அது என்னிடம் இல்லாததால் அந்தத் திட்டம் அப்படியே தேங்கிக் கிடக்கிறது.

இன்றைய இந்த வெளியீடு எதிர்காலத்தைப் பற்றியது அல்ல; கடந்த காலத்தில் அச்சு இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட புகழ் பெற்ற ஒரு தமிழ் எழுத்துருவை நவீன உலகிற்கு எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றிய ஒரு மிகப்பெரிய முயற்சியின் பலனைத்தான் இன்று காணப்போகிறோம்.

தமிழ் எழுத்தின் பரிணாம வரலாறு

அழகான எழுத்துருக்களை உருவாக்குவது தொடர்பான விழிப்புணர்வு இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் வட இந்தியாவில் இதற்கான பல திட்டங்களை நடத்துகிறார்கள். ஏனெனில் அவர்களது எழுத்து வனப்பெழுத்து சார்ந்தது என்பதால் மிக அழகான எழுத்துகளை உருவாக்குகிறார்கள். ஆனால் நமது எழுத்து அப்படி ஒரு மரபில் இருந்து வரவில்லை; நமக்கு ஒரு ‘கேலிகிராஃபிக்’ பின்னணி இருப்பதாகச் சொல்ல முடியாது.

ஓலைச்சுவடியில் என்ன வரைய முடியும்? அங்கு சொல்லுக்குச் சொல் இடைவெளியோ, வரிக்கு வரி இடைவெளியோ கிடையாது; தொடர்ந்து எழுதினார்கள். வாசிக்கும் போதுதான் அது புரியும். ஓலைச்சுவடியில் புள்ளி, இடைவெளி, இரட்டைக்கொம்பு கூடக் கிடையாது. இவையெல்லாம் பிற்காலத்தில்தான் வந்தன. எனவே எழுத்தின் அழகைப் பற்றிய சிந்தனை நமக்கு இப்போதுதான் அல்லது பிற்காலத்தில்தான் வந்தது.

அச்சு இயந்திரம் வந்தபோது, ஆங்கிலத்தைப் பயன்படுத்தியது போலத் தமிழையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அங்கிருந்துதான் தலைப்புக்குத் தடித்த எழுத்து, துணைத் தலைப்புக்குச் சாய்வான எழுத்து, கட்டெழுத்துரு (body text) எனப் பல்வேறு எழுத்துக்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அச்சுத் துறையின் சவால்கள்

நான்கு ஐந்து மாதங்களுக்கு முன் நான் பல பதிப்பாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நான் 40 ஆண்டுகளாக எழுத்துருக்களை உருவாக்கி வருகிறேன். ஆனால் அவர்கள் என்னைப் பார்த்து, “நீங்கள் அச்சுத் துறைக்கு எழுத்துருக்கள் எதுவும் செய்யவில்லை போலிருக்கிறதே” என்று கேட்டார்கள். அந்த அளவில்தான் நாம் இருக்கிறோம்.

அச்சுக்காக எழுத்துரு உருவாக்கும்போது, எழுத்துக்கு உள்ளே இருக்கும் இடைவெளி, வெளியே இருக்கும் இடைவெளி, எழுத்துக்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஆகியவற்றைச் சீர்படுத்துவோம். அப்போதுதான் படிக்கும்போது சோர்வு ஏற்படாமல் இருக்க அந்த ‘மூச்சு விடுவதற்கான இடம்’ இருக்கும்.

எழுத்துரு உருவாக்குவதில் இதுபோன்ற பல நுட்பங்களும் விதிகளும் உள்ளன. படிப்பதற்கு எடுப்பாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருந்தால் வாசகர்கள் அதைப் படிக்க முன்வருவார்கள். அதற்குப் பிறகு வாசகர்களைத் தொடர்ந்து படிக்க வைப்பது எழுத்தாளரின் வேலை. நாங்கள் அந்த நுழைவாயிலை அழகாக அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காகப் பல இலட்சங்களைச் செலவு செய்து கல்லூரிகளில் படித்துவிட்டு இதையெல்லாம் செய்கிறோம்.

எனினும் அச்சுத் துறையினருக்கு இரண்டே விதிகள்தான் முக்கியம்: ஒரு வரியில் எத்தனை சொற்களை அடக்க முடியும், ஒரு பக்கத்தில் எத்தனை வரிகளை அடக்க முடியும் என்பதுதான். அது படிக்க எளிதாக இருக்கிறதா என்பது பற்றிய சிந்தனை இரண்டாமிடத்தில்தான் அவர்களுக்கு இருக்கிறது.

அச்சிலிருந்து கணினிக்கு

தமிழ் எழுத்துருக் கூடத்தில் ஏற்கெனவே அச்சில் இருந்த ஓர் எழுத்துருவை அடிப்படையாகக் கொண்டு, அதை எண்ணிம முறைக்கு மாற்றும்போது என்னென்ன மேம்பாடுகளைச் செய்யலாம் என ஆராய்ந்தோம். அச்சில் இருந்த வடிவம் தற்போதைய சூழலுக்கு அப்படியே பயன்படாது. ஏனெனில் அப்போது பயன்படுத்தப்பட்ட தாளின் தன்மையும் மையின் தன்மையும் வேறு. மை தாளில் படும்போது ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டுதான் அப்போது வடிவமைத்தார்கள். அப்போது இருந்த குறைபாடுகள் இப்போது இல்லை. ​ அதற்கேற்ப மாற்றங்களைச் செய்துள்ளோம்.

இந்தச் சூழலில் மின்பதிப்பகத் துறை எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக உள்ளது. ஏனெனில் அங்கு பக்கக் கட்டுப்பாடு கிடையாது; எழுத்துகளைப் பெரிதாகவும் விரிவாகவும் பயன்படுத்தலாம். இதற்காகவே பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு வட சென்னையில் ஒரு தெருவைத் தேர்ந்தெடுத்து, அதிகாலை 6 மணிக்கெல்லாம் சென்று எழுத்துலா நடத்தினோம். பதாகைகள், பழைய உலோக எழுத்துகள் முதலிய வடிவங்களைப் புகைப்படங்கள் எடுத்தோம். எங்களை வருமான வரித்துறையினர் என்று நினைத்து மக்கள் விரட்டவும் செய்தார்கள்.

ஒருமுறை தமிழகத்தின் ஒரு கிராமப்புறத்தில் மிக அழகான ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். ஒரு வீட்டு வசதித் திட்டம் குறித்த அந்த விளம்பரம் படங்களுடன் மிக அழகாக இருந்தது, ஆனால் ஒரு சொல் கூடத் தமிழில் இல்லை. அங்குள்ள மக்களுக்குப் புரியாத மொழியில் விளம்பரம் இருந்தால் அதன் வணிக நோக்கம் எப்படி நிறைவேறும்? இது குறித்து நான் கேட்டபோது, “அந்த வடிவமைப்பிற்கு ஏற்ற தமிழ் எழுத்துருக்கள் இல்லாததால் ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தினார்கள்” என்றார்கள்.

‘கொற்கை’ எழுத்துருவின் நோக்கம்

இந்த இடைவெளியை நிரப்புவதுதான் எங்களது திட்டம். இன்று வெளியிடப்படும் ‘கொற்கை’ எழுத்துரு கட்டெழுத்துரு (body text) வகையைச் சேர்ந்தது. நீண்ட நூல்களைப் படிக்கும்போது சோர்வு ஏற்படாமல் இருக்க இது உதவும். எழுத்துகளின் வடிவமே அதன் செய்தியைச் சொல்லும். இது மகிழ்ச்சியான கதையா அல்லது சோர்வான கதையா என்பதை அது காட்டும். அந்தந்தத் தேவைக்கு ஏற்ப வேறுபட்ட எழுத்துருக்கள் நிறைய வர வேண்டும்.

இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஒண்மை அறக்கட்டளைக்கும் ரோஜா முத்தையா நூலகத்திற்கும் நன்றி. வணக்கம்.

கொற்கை வெளியீடு விழா பற்றிய செய்தி.

முழு உரையின் காணொளி வடிவம்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now