எழுத்துருவை மாற்றிய அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துருவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, துறை சார்ந்த தகவல் பரிமாற்றங்களில் இனி டைம்​ஸ் நியூ ரோமன் (Times New Roman) எழுத்துருவே பயன்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட கேலிபிரி (Calibri) எழுத்துரு நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், கேலிபிரி போன்ற எழுத்துருக்கள் ஒப்பீட்டளவில் அலங்காரமற்ற தோற்றத்தை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தொழில்முறை தன்மையில் இருக்க வேண்டும் எனவும் அதற்காக டைம்​ஸ் நியூ ரோமன் எழுத்துரு பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023 ஜனவரி மாதத்தில், அப்போதைய வெளியுறவுத் துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் தலைமையில், துறை ஆவணங்களில் கேலிபிரி எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது. பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கு வாசிப்பில் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மைக்ரோசாப்ட் பயன்பாடுகளில் இயல்பாக பயன்படுத்தப்படும் எழுத்துருவாக இருப்பதாலும், கேலிபிரி தேர்வு செய்யப்பட்டதாக அப்போது விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால் கேலிபிரி எழுத்துருவிற்கு விடை கொடுத்த அறிவிப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் “அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒருமித்த குரல்” (One Voice for America’s Foreign Relations) என்ற வழிகா​ட்தலுக்காக எழுத்துருவில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்களிலும் ஒரே மாதிரியான தோற்றம் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு எழுத்துருக்களின் பண்புகளை பற்றி அலசும்போது கேலிபிரி என்பது அலங்கார கோடுகள் இல்லாத, மென்மையான வடிவமைப்பைக் கொண்ட எழுத்துரு. எழுத்துகளின் இடைவெளி சீராக இருப்பதால், கணினி, திறன்பேசித் திரைகளில் வாசிக்க இது எளிதாக இருக்கும். குறிப்பாக நீண்ட நேரம் திரையைப் பார்த்து வாசிக்கும்போது கண்களுக்கு ஏற்படும் சோர்வைக் குறைக்கும் வகையில் கேலிபிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் மின்னஞ்சல்கள், இணையக்கட்டுரைகள், அலுவலக தகவல் பரிமாற்றங்கள் போன்ற எண்ணிம உள்ளடக்கங்களில் இந்த எழுத்துரு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மற்றொரு பக்கம், டைம்ஸ் நியூ ரோமன் என்பது மரபார்ந்த தோற்றம் கொண்ட எழுத்துரு. எழுத்துகளின் முனைகளில் சிறிய அலங்காரக் கோடுகள் இருப்பதால், எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த உணர்வை தருகின்றன. இது குறிப்பாக காகிதத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களில் வாசிக்க உதவும் வகையில் அமைந்துள்ளது. கல்வி ஆய்வுக் கட்டுரைகள், சட்ட ஆவணங்கள், புத்தகங்கள், செய்தித்தாள்களில் டைம்ஸ் நியூ ரோமன் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now