உலகத் தாய்மொழி நாள் 2026

2026ஆம் ஆண்டின் உலகத் தாய்மொழி நாள் கருப்பொருளில் இளைஞர்களின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.

பிப்ரவரி 21 என்பது வெறும் ஒரு நாள் மட்டும் அல்ல, உலகெங்கிலும் மொழிகளின் பெருமையைக் கொண்டாடும் நாள். இன்று உலகில் 7,000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் ஒவ்வோர் இரண்டு வாரங்களுக்கும் ஒரு மொழி மறைகிறது எனும் அதிர்ச்சிச் தகவலை யுனெஸ்கோ கூறியிருக்கிறது. ஒரு மொழி மறையும்பொழுது ஒரு முழு பண்பாட்டையும் இழக்கிறோம். இந்த மொழிகளை பாதுகாக்கவே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோவின் அங்கீகாரம்

வங்கதேசத்தில் நடைபெற்ற மொழி உரிமைப் போராட்டங்களில் பிப்ரவரி 21 முக்கியமானது. மொழி உரிமைக்காக உயிர் ஈந்த தம் நாட்டு மக்களை நினைவுகூறும்வகையில் இந்நாளை அனைத்துலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கக் கோரியது வங்கதேசம். 1999 நவம்பர் 17ல் யுனெஸ்கோவின் பொது மாநாடு வங்கதேசத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது. 2000ஆவது ஆண்டு முதல் உலகம் முழுவதும் இது கடைப்பிடிக்கப்படுகிறது. 2002-ல் ஐக்கிய நாடுகள் பொது சபையும் இதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 1952-ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் சிந்திய ரத்தம், உலகம் முழுவதும் மொழி உரிமைக்கான குரலாக மாறியது.

உலகத் தாய்மொழி நாள் அறிவிப்பு தற்போது வெள்ளிவிழா கண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு பொருண்மையில் இந்த நாள் முன்னெடுக்கப்படுகிறது.

2026 – இளைஞர்களின் குரல்

கடந்த ஆண்டு தாய்மொழி நாளின் வெள்ளிவிழா தொடக்கம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டின் அனைத்துலக தாய்மொழி நாள் பன்மொழி கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை முன்னிலைப்படுத்துகிறது. “மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டுமல்ல. அது அடையாளம், கற்றல், நலன், சமூகத்தில் பங்கேற்பு ஆகியவற்றின் மையம்.

இளைஞர்கள் வெறும் மொழி பன்முகத்தன்மையின் பெறுநர்கள் மட்டும் அல்ல. அதன் எதிர்காலத்தில் முக்கிய பங்காளர்கள். அவர்கள் தங்கள் சொந்த மொழிகளில் கல்வி, தகவல், எண்ணிமத் தளங்களை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்துவது உள்ளடக்கம், சமத்துவம், நிலையான வளர்ச்சிக்கு அவசியம்.” என யுனெஸ்கோ அமைப்பு கூறியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழிகள்

2026 கருப்பொருள் பல மொழிகளை பேசுவதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது. தொழில்நுட்ப உள்ளடக்கம் குறைவான எண்ணிக்கையிலான மொழிகளில் அதிகமாக குவிந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் முதன்மையாக ஆதிக்கம் செலுத்தும் மொழித் தரவுகளையே நம்பியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, மொழி சமத்துவமின்மையை வலுப்படுத்துமா அல்லது குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மொழிகளை புத்துயிர் பெற உதவுமா என்பதை அறியும் வகையிலேயே இந்த ஆண்டின் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

1952-ல் மாணவர்கள் தங்கள் தாய்மொழிக்காக உயிரை கொடுத்தனர். அந்த தியாகம் வீணாகவில்லை. இன்று உலகம் முழுவதும் மொழி உரிமைக்கான குரலாக ஒலிக்கிறது. ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மொழியும் கொண்டாடப்பட வேண்டும். அதுதான் உலகத் தாய்மொழி நாளின் செய்தி. அதுதான் பிப்ரவரி 21-ன் பாடம்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now