சத்யஜித் ரே, இந்தியாவின் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. அவருடைய திரைப்படம் இதேபோன்றதொரு மே,7ஆம் நாளில் 1956-இல் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது. ரே ஓர் இயக்குநர் மட்டும் அல்ல. ஓவியர், காட்சி வடிவமைப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். அதிகம் அறியப்படாத இன்னொரு முகமும் ரேவிற்கு இருக்கிறது. எழுத்துகளோடு விளையாடி எழுத்துருக்களை உருவாக்கியவர்.

சத்யஜித் ரேக்கு குழந்தையிலிருந்தே இந்த வித்தியாசமான பழக்கம் இருந்தது. எல்லாக் குழந்தைகளும் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ரே எழுத்துகளை விதம் விதமாக வரைந்துப் பார்த்தார். எழுத்தழகியல் மீது தனாகப் பற்று கொண்டார். எழுத்துகள் வெறும் குறியீடுகள் மட்டும் அல்ல, வடிவங்கள் என்பதை உணர்ந்தார். அதற்கேற்ப எழுத்துகளைப் படங்களாக வரைந்து பார்த்தார்.
படிப்பை முடித்ததும் ரே திரை உலகிற்கு உடனே வரவில்லை. விளம்பர நிறுவனம் ஒன்றில்தான் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் படங்கள், எழுத்துகள் எப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைக்கும் பணியைச் செய்தார். படங்களையும் எழுத்துகளையும் சேர்த்து அழகான விளம்பரங்களை உருவாக்கினார். “எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று யாராவது சொன்னால், “அப்படி இல்லாமல் இருந்தால்தான் என்ன?” என்று கேட்பார். மாற்றி யோசிப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார். எழுத்துகளை நீட்டி, வளைத்து புத்தம் புதிய அழகில் உயிர் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் விளம்பர வேலையைவிட்டு பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் வடிவமைக்கும் பணியைச் செய்தார். அதை வெறும் அட்டையாக மட்டும் செய்யவில்லை. முதலில் புத்தகத்தைப் படித்துவிடுவார். அது சோகத்தை வெளிப்படுத்துகிறதா? சாகசத்தை வெளிப்படுத்துகிறதா? எந்த உணர்வை வெளிப்படுத்துகிறது என்ற முடிவிற்கு முதலில் வந்துவிடுவார். அந்த உணர்ச்சியை அப்படியே புத்தகத்தின் தலைப்பில் உயிரோட்டமாகக் கொண்டுவந்துவிடுவார்.
ஒவ்வொரு புத்தக அட்டையிலும் எழுத்துகளை தனித்துவமாக வடிவமைத்தார். எழுத்து என்பது வெறும் தகவலைக் கடத்தும் கருவி மட்டும் அல்ல; அது கலை என நினைத்தார். புதுமைகளைப் புகுத்தினார். அதனால் அவருடைய எழுத்துகள் பேசப்பட்டன. சாகித்ய அக்காடமி உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ரே, இலச்சினைகளை வடிவமைத்துக் கொடுத்தார். ஜவஹர்லால் நேரு எழுதிய இந்தியாவைப் பற்றிய புகழ்பெற்ற புத்தகத்தின் முதல் அட்டையை வடிவமைத்தவர் ரே.
அடுத்துத் திரைப்படத் துறைக்கு மாறினார். படம் எடுத்தார். அப்போது எல்லோரும் “இனி ரே எழுத்தின் வடிவமைப்பை விட்டு விடுவார்” என்று நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அவர் எடுத்தத் திரைப்படங்களின் சுவரொட்டிகளை அவரே வடிவமைத்தார். அந்தச் சுவரொட்டிகளின் எழுத்தைப் பார்த்தே படம் எப்படிப்பட்டது என்று மக்கள் முடிவு செய்துவிடுவார்கள். அந்த அளவிற்குச் சுவரொட்டிகளின் எழுத்துகளில் படத்தின் உணர்ச்சி, கதையின் தன்மை, கதாபாத்திரங்களின் மனநிலை என எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வந்தார். எழுத்தை அலங்காரமாக நினைக்கவில்லை. கதையின் ஒரு பகுதியாக நினைத்து உயிர் கொடுத்தார்.
பலகாலம் எழுத்துகளுடனே ஒன்றியவர் ஒரு நாள் “ஏன் சொந்தமாக ஓர் எழுத்துருவை உருவாக்கக்கூடாது?” என்று நினைத்தார். எழுத்துகளின் மீது இருந்த ஈர்ப்பு எழுத்துருக்களை உருவாக்கும் பணியைச் செய்யச் சொல்லியது. அதன் வெற்றி வெளிப்பாடாக ரே ரோமன், ரே பிசார் உள்ளிட்ட பல எழுத்துக்களை (Ray Roman, Ray Bizarre, Daphnis, Holiday Script) உருவாக்கினார். ஒவ்வொன்றும் எளிமையானது, கலை நயமிக்கது, வித்தியாசமானத் தோற்றம் என பல தனித்தன்மைகளைக் கொண்டவை.
ரே, ஆங்கில எழுத்துருக்களை மட்டும் உருவாக்கவில்லை. தன் தாய் மொழியான வங்காளத்திலும் எழுத்துருக்களை உருவாக்கினார். சாந்தி நிகேதனில் படித்தபோதுதான் வங்காள எழுத்தழகியலைக் கற்றுக்கொண்டார். “எழுத்துதான் அந்த மொழி பேசும் மக்களின் அடையாளம்” என நம்பினார். அவர் உருவாக்கிய பாணியைத்தான் இன்றும் பலர் பின்பற்றுகிறார்கள். ‘சத்யஜித்ரே பாணி’ என்று அவர் பெயராலேயே அழைக்கிறார்கள்.
இந்தியாவில் எழுத்துரு வடிவமைப்பு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் ரே. அவர் செய்த சின்னஞ்சிறு முயற்சிகள் பின்னர் பெரிய அளவிளான மாற்றங்களாக நிகழ்ந்தன. ஒரு மொழியின் எழுத்து என்பது அதன் கலாசாரத்தின் ஒரு பகுதி. இதை நன்கு உணர்ந்த ரே அதன் பாணியில் எழுத்துருக்களை உருவாக்கினார். இளம் தலைமுறைக்கு எழுத்தின் வேர்களைக் கடத்தினார்.
சத்யஜித் ரே திரைப்படங்களில் செய்த சாதனைகளைப் போலவே, எழுத்துருக்களில் செய்த வேலைகளும் முக்கியமானவை. எழுத்தையும் கலாசாரத்தையும் இணைத்த பெரும் சிந்தனையாளர். “எழுத்து என்பது வெறும் சொல் அன்று, அது கலை, உணர்ச்சி, அடையாளம்.” என்று வாழ்ந்தவர்.
- ஸ்ரீதேவி கண்ணன்
