செயற்கை நுண்ணறிவின் பரந்த பார்வையில் இருந்து தப்பிக்கும் எழுத்துரு தொழில்நுட்பம் ஒன்று ஆய்வு முயற்சியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இணையத்தில் பரவலாகக் கிடைக்கும் தரவுகளைத் தன்னிச்சையாகச் சேகரிப்பதும், மனிதர்களின் தனிப்பட்ட உரையாடல்களையும் படைப்புகளையும் தங்கள் பயிற்சிகளுக்காக வாசிப்பதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தொழில்நுட்பத்தின் இந்த ஊடுருவலில் இருந்து தரவுகளைப் பாதுகாப்பது எப்படி என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்துவருகிறது.
இந்தச் சூழலில் செயற்கை நுண்ணறிவுகளையே குழப்பும் வகையில், அச்சுக்கலை நிறுவனம் (Mixfont) ஒரு ஆய்வு முயற்சியை மேற்கொண்டுள்ளது. மனிதர்களின் பார்வை இயல்புக்கும் செயற்கை நுண்ணறிவின் படங்களைப் பகுப்பாய்வு செய்யும் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்தி திசைதிருப்பும் எழுத்துருவை (Decoy Font) உருவாக்கியுள்ளது.
தூரத்திலிருந்து பார்க்கும்போது ஓர் உருவமாகவும், அருகில் பார்க்கும்போது வேறோர் உருவமாகவும் தோன்றும் ஒளியியல் மாயை நுட்பமே (Hybrid Image) இதன் அடிப்படையாகும்.
இந்தப் புதிய எழுத்துருவின் ஒவ்வோர் எழுத்திலும் இரு வெவ்வேறு செய்திகள் ஒரே இடத்தில் மறைக்கப்படுகின்றன. முன்னணியில் மிக மெல்லிய, தெளிவான கோடுகளால் உருவாக்கப்பட்ட எழுத்துகள் இருக்கும். பின்னணியில் தடித்த, மங்கலான வடிவங்கள் இருக்கும். இவை வெவ்வேறு இடஞ்சார் அதிர்வெண் அளவுகளில் அமைக்கப்படுகின்றன. இதனால் ஒரே படத்தை மனிதர்களும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளும் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
மனிதர்கள் படத்தைச் சற்றுத் தொலைவில் இருந்து பார்க்கும்போது அல்லது கண்களைக் குறுக்கிப் பார்த்தபோது பின்னணியில் உள்ள தடித்த வடிவங்கள் தெளிவாகத் தோன்றி, மறைக்கப்பட்ட உண்மையான செய்தியைப் படிக்க முடிகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் படத்தின் படவணுக்களை மிக நெருக்கமாகப் பகுப்பாய்வு செய்யும்போது, முன்னணியில் இருக்கும் மெல்லிய கோடுகளே தெளிவான தகவலாகக் கிடைக்கின்றன. இதனால் அவை உண்மையான செய்திக்குப் பதிலாக முன்னணியில் உருவாக்கப்பட்ட போலிச் செய்தியைப் படிக்கின்றன.
இந்தத் தொழில்நுட்பத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது வெறும் படமாக உருவாக்கப்படும் ஒரு தற்காலிக விளைவு மட்டுமல்ல. இந்த எழுத்துருவை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவி பயன்படுத்தவும் முடியும்.
இதற்கு முன்னதாக பேய் எழுத்துரு (Ghost Font) என்ற மற்றொரு எழுத்துருவையும் ஆய்வு நோக்கில் இந்நிறுவனம் உருவாக்கியது. ஆனால்அதை வழக்கமான எழுத்துருவாகக் கருத முடியாது. அதில் எழுத்துகள் நிலையான படத்தில் அல்லாமல், ஆயிரக்கணக்கான புள்ளிகளின் இயக்கத்தின் மூலம் தோன்றுகின்றன. ஒரு நிலையான அமைப்பில் பார்க்கும்போது அது வெறும் குழப்பமான புள்ளிகளாகத் தோன்றும்; அசைந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போதுதான் மனிதக் கண்களுக்கு எழுத்துகள் தெளிவாகத் தோன்றுகின்றன.
இந்த முயற்சிகளுக்குப் பின்னால் புதிய பாதுகாப்பு முறையை உருவாக்குவது மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான பார்வை வேறுபாட்டை ஆராய்வதும் முக்கியமான நோக்கமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவின் பட வாசிப்புத் திறன் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை அளவிடுவதற்கான ஒரு முயற்சியாகவும் இத்தகைய எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம் என்று இந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
இணையதளங்களில் மனிதர்களையும் தானியங்கிகளையும் வேறுபடுத்த உதவும் (CAPTCHA) சோதனைகளிலும் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்ற சாத்தியம் முன்வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்களை மனிதர்களுக்குள் மட்டும் பகிர்வது அல்லது செயற்கை நுண்ணறிவு தகவலை வாசிப்பதைத் தடுப்பது போன்ற பயன்பாடுகளும் எதிர்காலத்தில் ஆராயப்படலாம்.
எனினும், இந்த எழுத்துரு முழுமையான பாதுகாப்பு அல்லது செயற்கை நுண்ணறிவிடமிருந்து தகவலை மறைக்கும் உத்தரவாதமான தொழில்நுட்பம் என்று கருத முடியாது. இந்நிறுவனத்தின் விளக்கத்திலேயே, அதிக திறன் கொண்ட மாதிரிகள், நிரலாக்கத் திறன் கொண்ட மாதிரிகள் இந்த எழுத்துருவின் பின்னணியில் உள்ள உத்தியைப் புரிந்துகொண்டு இரு செய்திகளையும் பிரித்தறியக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்கி இப்படி முயன்று பார் என்று கட்டளையிட்டால், தற்போதைய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளே இந்த மறைக்கப்பட்ட எழுத்துகளைக் கண்டறிந்துவிடுகின்றன.

அதாவது, இந்த எழுத்துரு, செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை ஆரம்ப நிலையில் குழப்பும் ஒரு முயற்சியே தவிர, நிரந்தரமான செயற்கை நுண்ணறிவு படிக்கமுடியாத எழுத்துரு அல்ல. மனிதர்கள் ஒரு காட்சியைப் புரிந்துகொள்ளும் விதமும், இயந்திரங்கள் அதே காட்சியைப் பகுப்பாய்வு செய்யும் விதமும் ஒரே மாதிரி இல்லை என்பதை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது.
- மு. இசக்கிமுத்து
