சீனத் தூரிகையும் குறும்பும்

படைப்பாளர்களுக்கு உலகின் எந்தப் பொருளும் எளிதில் உந்துபொருளாகிக், கற்பனைக்கு எட்டாப் படைப்புகளைக் கொடுக்க வைக்கும். முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறனின் எழுத்துருப் பயணத்திலும் அத்தகைய உந்துதல்களால் உருவான எழுத்துருக்கள் தனித்துவமானவை. இதோ அவற்றுள் இரண்டு…

சீனத் தூரிகைப் பரிசு – கீற்று

முத்து நெடுமாறன் தமிழ் மட்டுமன்றி பிற மொழிகளுக்கும் எழுத்துரு உருவாக்கியுள்ளார். எழுத்துரு ஆக்கத்தில் ஈடுபடத் தொடங்கியபின் அவருக்கு வனப்பெழுத்து (Calligraphy) மீது தனியார்வம் பிறந்தது. பொதுவாக வனப்பெழுத்துகளைப் பல கருவிகளைக் கொண்டு எழுதுவார்கள் என்றாலும், தூவலும் தூரிகையும்தான் முதன்மை. அப்படிச் சீன வனப்பெழுத்துத் தூரிகை ஒன்று, முத்து நெடுமாறன் கையில் கிடைத்தது. அதில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பார்க்கும் கற்பனை அவருக்குப் பிறந்தது. உடனே அதைச் செயலாக்கினார். எழுத்தின் தொடக்கத்தில் அடர்த்தியாய்ப் பதியும் மை, இழுப்புகள் போகப்போக அடர்த்தி குறைந்து மறைவிளைவை (Fading effect) ஏற்படுத்தும். அந்த அழகை அப்படியே தமிழ் எழுத்துகளின் கீற்றலுக்கு வர முத்து நெடுமாறன் எழுதினார். அதனைப் பின்னர் எழுத்துருவாகவும் வடிவமைத்தார். 

அதன் பெயர் ‘கீற்று’. கீற்று உருவாகும்போது எழுத்துரு ஆக்கத்தில் பல  பாடங்களைப் முத்து நெடுமாறன் பெற்றிருந்தார். அதன் விளைவால் ஆங்கிலம் எழுதப் பயன்படும் லத்தின், எண்கள், தமிழெண்கள், தமிழ் எழுத்துகளின் மரபுக் குறிகள் என அனைத்தையும் உருவாக்கிவிட்டார். இதன்மூலம் முழுமையான காட்சியெழுத்துருவாய்க் ‘கீற்று’ உருவானது. அதன் அடுத்த கட்டமாக கீற்று எழுத்துருவின் தனித்துவ மறைவிளைவை மற்ற இந்திய மொழிகளுக்கும் அவர் உருவாக்கி வருகிறார். இந்தக் கீற்று எழுத்துரு, முரசு அஞ்சலின் புதிய படைப்பில் கிடைக்கும். 

குறும்புகளின் கொண்டாட்டம் – ஆம்பல்

நாம் வாசிக்கும் கட்டுரை, கதையின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எழுத்துருக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் கட்டங்கட்டமாய் இருக்கும் இயல்பான தட்டெழுத்துக்களை விட, ஏற்ற இறக்கமான எழுத்துருக்களை அதிகம் விரும்புகின்றனர். அது எழுத்துகளிலேயே குறும்புத் தனத்தைப் பிரதிபலிக்கும். இந்த உளவியலின் உந்துதலில் முத்து நெடுமாறன் ஓர் எழுத்துருவை உருவாக்கினார்.

“குழந்தைகளுக்கானத் தமிழ் வளங்களை உருவாக்கும்போது அவற்றின் தலைப்பு எழுத்துக்களில் கொஞ்சம் விளையாட்டுத் தன்மையை சேர்க்க வேண்டும்.” என்று குறிப்பிடும் அவர், தமிழ் எழுத்துகளுக்குள் அதற்காகச் சில அடிப்படை மாற்றங்களைச் செய்து புதிய எழுத்துருவை உருவாக்கினார். முதன்மையாக எழுத்துகளின் தடிமத்தை அதிகப்படுத்தினார். பின்னர் ள, ல, வ போன்ற எழுத்துகளின் தொடக்கத்திலிருக்கும் சுழிகளை முடிச்சுகளாக வரைந்தார். இதன்மூலம் இயல்பிலேயே உள்ள இழுப்புகளின் தடிமம் பெரிதானது. அதேபோல், எழுத்துகளை விட்டுத் துருத்திக் கொண்டு வெளியே அருவிபோல் கொட்டும் இகர, ஈகாரக் கொக்கிகளை வடிவமைத்தார். விளையாட்டுத் தன்மையை மேலும் கூட்ட, ஒரே எழுத்து அடுத்தடுத்து வரும்போது வெவ்வேறு வடிவங்களில் தெரியும்படி உருவாக்கினார். அதற்கு எழுத்துருவியல் நுட்பம் உதவியது என்று குறிப்பிடுகிறார். 

ஒரே சீராக இல்லாமல் வடிவத்தில் ஏற்ற இறக்கமாகத் தெரிவதாகவும், அதே நேரத்தில் எழுத்துகளுக்கு இடையிலுள்ள அடிப்படை அமைதி குலையாமல் முத்து நெடுமாறன் அந்த எழுத்துருவை உருவாக்கி, வெற்றி கண்டார். அதிலும் லத்தின், குர்முகி எனப்படும் இந்திய மொழி வடிவம் உள்ளிட்டவற்றை உருவாக்கி முழுமைப்படுத்தினார். அதுதான் குழந்தைகளின் குறும்புக் கொண்டாட்டமாய் வடிவம் பெற்றிருக்கும் – ‘ஆம்பல்’ எழுத்துரு. 

ஆம்பல் எழுத்துருவைத் தேட வேண்டியதில்லை. முரசு அஞ்சல் புதிய படைப்பில் கிடைக்கவுள்ளது.  முரசு அஞ்சலின் இந்தப் புதிய பதிப்பு, வெவ்வேறு நாள்களில் மூன்று நாடுகளில் வெளியாகிறது. ஜூன் 27-ம் தேதி மலேசியாவிலும், ஜூலை 5-ம் தேதி சிங்கப்பூரிலும், ஜூலை 12-ம் தேதி சென்னையிலும் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு விதவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன.

  • விவேக்பாரதி

முன்பதிவு செய்யும் இணைப்பு

முரசு அஞ்சல் வெளியீடு குறித்த விரிவான செய்தி

‘அஞ்சல் ஆம்பல்’ எழுத்துரு பற்றிய முழுக்கட்டுரை

‘அஞ்சல் கீற்று’ எழுத்துரு பற்றிய முழுக்கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now