மாய எழுத்து

எந்த ஓர் அகராதி பொருளையும் கொண்டிராதவை பகடி கொர்வா (Pahadi Korwa) பழங்குடிச் சமூகத்தின் கோட்டோவியங்கள். அவை மொழியியல் கட்டமைப்பிற்கும் அப்பாற்பட்ட, சொற்களால் விவரிக்க முடியாத உலகப் பார்வையை பழங்குடியினரின் வழியில் ஆவணப்படுத்துகின்றன.

காட்டின் மைந்தர்கள்

பகடி கொர்வா பழங்குடிகள் இந்தியாவின் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களின் அடர்ந்த வனப்பகுதிகளையும், மலைக் குன்றுகளையும் தங்களின் பூர்விகக் குடியிருப்பாகக் கொண்டவர்கள். இயற்கையோடு இயைந்த வாழ்வியலையும், காடுகளையே தங்களின் வாழ்வாதாரமாகவும் கொண்ட இவர்களின் சமூகம், நீண்ட காலமாகவே பொதுச் ச​மூகத்தில் இருந்து வில​கியே இருந்தது. இவர்களின் பேச்சு மொழி எழுத்து வடிவம் இல்லாத ஒரு வாய்மொழி மரபாகும்.

மை தீட்டிய புதிய வரலாறு

கொர்வா மக்களின் பாரம்பரியத்தில் வீடுகளின் சுவர்களிலும், சடங்கு வெளிகளிலும் குறியீடுகளை வரையும் வழக்கம் எப்போதும் இருந்துள்ளது. இந்த மக்களை பொதுச் சமூகத்திற்கு முன் அடையாளப்படு​த்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவதாக 1983ஆம் ஆண்டில் இந்தியக் கலை விமரிசகரும் ஓவியருமான ஜெகதீஷ் சுவாமிநாதன் தலைமையிலான குழு, கொர்வா மக்களின் வாழ்வியலை அறிவதற்காக அவர்களை சந்தித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா, ராய்கர் பகுதிகளில் வசித்த கொர்வா மக்களுக்கு, பொதுச் சமூகம் அன்றாடம் பயன்படு​த்தும் பொருள்களின் மீது நாட்டம் இருந்ததை உணர்ந்தனர். அதுவரை காகிதத்தையோ அல்லது பேனா, மை போன்ற நவீன ஊடகங்களையோ பார்த்திராத கொர்வா மக்களிடம் அந்தப் பொருள்களை முதன்முறையாகக் கொடுத்தனர். அப்போது கொர்வா ச​மூக தலைவரையும் அவரது ம​னைவியையும் சுவாமிநாத​னின் குழு படமாக வரைந்தனர். இதைப் பார்த்த மக்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட காகிதத்தில் சில படங்களை வரைய தொடங்கினர்.

கொர்வா மக்கள் தங்களின் மரபார்ந்த சுவரோவியங்களை நகலெடுக்காமல், முற்றிலும் புதியதொரு தற்காலக் கலை வடிவத்தை உருவாக்கினர். வெள்ளை அல்லது வெளிர் நிறக் காகிதங்களில் பெரும்பாலும் கருப்பு மையைக் கொண்டு, சிறிய வளைகோடுகளை கொண்டு அவர்கள் வரையத் தொடங்கினர். பார்ப்பதற்கு மேகக் கூட்டங்கள் போன்றோ அல்லது காட்டின் அடர்ந்த மரங்களின் கிளைகள் போன்றோ தோன்றும் இந்த வடிவங்கள், அச்சுக்கலையின் வரிவடிவங்களை அடியொற்றி, ஒரு மிகத் துல்லியமான தாள லயத்துடன் கூடிய (Rhythmic compositions) வரிசைகளாக அடுக்கப்பட்டன.

இந்த ஓவியங்களுக்குள் மறைந்திருக்கும் ‘எழுத்து போன்ற காட்சித் தன்மை’ மொழியியலாளர்கள், மானுடவியலாளர்களிடையே ஒரு பெரும் தத்துவார்த்த விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த ஓவியங்களில் எழுத்துக்கள் போன்ற தோற்றம் இருந்தாலும், அவற்றுக்கு என்று எந்தவொரு குறிப்பிட்ட இலக்கண அமைப்போ அல்லது நேரடிப் பொருளோ கிடையாது.

பொதுச் சமூகத்தின் எழுத்து வடிவங்களையும், அரசாங்கத்தின் ஆவணங்களையும் தூரத்திலிருந்து மட்டுமே வேடிக்கை பார்த்த பழங்குடி மக்கள், அந்த எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் ஒருவித மறைமுக ஆற்றலையும் அதிகாரத்தையும் உள்வாங்கியுள்ளனர்.

தங்களின் சொந்த வாய்மொழிக்கான எழுத்து வடிவத்தை நோக்கி நகரும் ஒரு கூட்டு முயற்சியே இந்த ஓவியங்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் சொற்களை எழுதவில்லை, மாறாக ‘எழுதுதல்’ என்ற ஒட்டுமொத்தச் செயல்பாட்டையே ஒரு மாயத் தன்மை வாய்ந்த முக்கியத்துவத்துடன் காட்சியாக மாற்றியுள்ளனர். இந்த அனுபவங்களை தனது ’மாய எழுத்து வடிவம்’ (The Magical Script) என்ற ​நூலில் விளக்கியிருக்கிறார் சுவாமிநாதன்.

அதன் தொடர்ச்சியாக, 1996 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கவிஞரான ஃபிராங்க் ஆண்ட்ரே ஜாமே என்பவரால் இரண்டாவது ஆவணப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களின் மூலமே காகிதத்தில் வரையப்பட்ட கொர்வாவின் தனித்துவமான ஓவியத் தொகுப்புகள் உலகக் கலை அரங்கிற்கு அறிமுகமாயின.

ஜெகதீஷ் சுவாமிநாதன், ஃபிராங்க் ஆண்ட்ரே ஜாமே ஆகிய இருவருமே கொர்வா ஓவியங்களை வெறும் நாட்டுப்புறக் கைவினையாகப் பார்க்காமல், உலகத் தரம் வாய்ந்த நவீனக் கலைப் படைப்புகளாகவே மதிப்பிட்டனர். மொழியால் வரையறுக்க முடியாத மனித அனுபவங்களையும், இயற்கையின் விதிகளையும் கலை எவ்வாறு தன்வசப்படுத்தி ஒரு தாள லயமாக வெளிப்படுத்துகிறது என்பதற்கு, இக்கொர்வா ஓவியங்கள் ஓர் எடுத்துக்காட்டு என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now