தனியுரிமைச் சண்டையில் ஆப்பிள், மெட்டா

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு பயனர்களின் தனியுரிமையில் எல்லை மீறுவதாக மெட்டா நிறுவனத்தை நோக்கிக் குற்றம் சாட்டியிருக்கிறது ஆப்பிள். ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்களின் ஏகபோக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் வழி செய்யும். அதன்படி ஒரு நிறுவனம் அதனுடைய போட்டி நிறுவனங்கள் மற்றும் செயலிகளை உருவாக்குபவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். தவறும்பட்சத்தில் ஆண்டு வருமானத்தில் பத்து சதவிகிதம் அபராதம் கட்டவேண்டும். 

Apple Meta

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளுக்காக அவர்கள் கேட்கும் அனுமதியை வழங்கினால் பயனர்களின் தனியுரிமை பறிபோகும் எனச் சொல்கிறது ஆப்பிள். பயனர்களின் தனியுரிமை குறித்த ஆப்பிளின் இந்த அக்கறை உண்மையில் அவர்களை விளம்பரப்படுத்தும் உத்தி எனச் சொல்கிறது மெட்டா. ஆப்பிளுக்கும் மெட்டாவுக்குமான சண்டை எப்போதும் ஓயாது என்பதற்கான சாட்சியாய் இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன. 

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இருக்கிற பெரிய வேறுபாடே பயனர்களின் தனியுரிமை தொடர்பானது தான். பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அதிக விலை கொடுத்து பயனர்கள் வாங்குகின்றனர். ஆனால், அனைவரும் பயன்படுத்தத் தகுந்த சேவையை இலவசமாக வழங்குவது ஃபேஸ்புக்தான் என்பது மெட்டா தரப்பு வாதம். உண்மையில் பயனர்கள் தங்களுடைய தனியுரிமையை அதற்கு விலையாகக் கொடுக்கின்றனர். 

மெட்டா போன்ற நிறுவனங்கள் பயனர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்கின்றன. அந்தத் தகவல்களைப் பிற நிறுவனங்களுக்குப் பகிர்ந்துகொள்வதன் வழியாகப் பல பில்லியன் டாலர்களை சம்பாதிக்கின்றன. ஆப்பிள் 2021ஆம் ஆண்டு ஒரு வசதியைப் பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. அதன்படி, ஒரு செயலி தங்களது செயல்பாட்டைக் கண்காணிக்க ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ பயனர்களுக்கு வாய்ப்பளித்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பயனர்கள் தங்களது செயல்பாட்டைச் செயலிகள் கண்காணிப்பதை விரும்பவில்லை. இதனால் மெட்டா நிறுவனத்துக்கு அந்த ஓராண்டு மட்டும் பத்து பில்லியன் டாலர் வருமானம் குறைந்தது. 

ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது கேம்பிரிட்ஜ் அனலடிக்கா என்ற நிறுவனம் தொண்ணூறு மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக அமெரிக்காவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு ஆறு பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. சமீபத்தில் இதே குற்றத்துக்காக முப்பது மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆஸ்திரேலிய அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது மெட்டா நிறுவனம். 

எப்படிப் பார்த்தாலும் தங்கள் தனியுரிமையையும் தகவல்களையும் விட்டுத் தருவதா அல்லது கட்டிக்காப்பதா என்பது பயனர்களின் முடிவு. இதனைப் பயன்படுத்தி இரண்டு பெரிய நிறுவனங்களும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்வது அவர்களது வணிக உத்தி. 

  • அ. பாண்டியராஜன்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now