ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள பவர்பீட்ஸ் புரோ 2 காதொலிப்பானைப் (Earbuds) பயன்படுத்தி இதயத்துடிப்பைக் கணக்கிட முடியும்.
உடற்பயிற்சி செய்யும்போது, எளிதில் கீழே விழாமல் இருப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் பவர் பீட்ஸ் புரோ ரக காதொலிப்பான். இதன் மேம்பட்ட புதிய பதிப்பாக பவர்பீட்ஸ் புரோ 2 வெளிவந்துள்ளது. இதில் பல்வேறு ஆச்சரியம் தரக்கூடிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்றாக, இதயத் துடிப்பு கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இதயத் துடிப்பு கண்காணிப்பு(HRM) உணரி இணைக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்நுட்பம் ஆப்பிள் திறன்கடிகாரத்தில் உள்ள நுட்பத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காதொலிப்பானில் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது உடற்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பின் தரவுகளைச் சேகரிக்கிறது. இந்தத் தரவு ஆப்பிள் ஹெல்த் செயலியுடன் பகிரப்படுகிறது. அதில் எளிதாக ஆப்பிள் திறன்கடிகாரம் இல்லாமலேயே இதயத் துடிப்பைக் கண்காணிக்க முடியும்.
இது தவிர, பிற மூன்றாம் தரப்பு உடற்பயிற்சி செயலிகளுடனும் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஆப்பிள் உடல்நலக் கண்காணிப்புச் செயலியில் (Apple fitness+) பயன்படுத்தும் அம்சம் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. இதயத் துடிப்பு கண்காணிப்பைத் தவிர இன்னும் பல வகைகளில் மாற்றம் பெற்றுள்ளது பவர்பீட்ஸ் புரோ 2. இதில், காதுடன் பொருத்திக்கொள்ளும் கொக்கி போன்ற அமைப்பு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் எடையும் முந்தைய பதிப்பைவிடவும் 20% குறைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள புதிய காற்றோட்ட அமைப்பு மூலம் தரமான துல்லியமான ஒலியைக் கேட்கமுடியும். பயனரின் காதின் வடிவத்தின் அடிப்படையில், ஒலி சுயவிவரத்தைத் தானாகவே சரிசெய்யும் EQ அம்சமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய அம்சங்களுள் ஒன்று , Active Noise Cancellation அம்சமாகும். இது சுற்றுச்சூழல் இரைச்சலைக் குறைத்து, காதுகளின் வடிவத்திற்கு ஏற்ப நிகழ் நேரத்தில் ஒலியை மாற்றியமைக்கிறது. நெருக்கடிக் காலங்களில் வெளிப்புற ஒலியைக் கொஞ்சம் கேட்கும் வகையிலான ஒலிபுகுந்திறன் அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மின்கல ஆயுளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவர்பீட்ஸ் வரிசையில் முதல் முறையாக, மின்கம்பியில்லா மின்னேற்றம் பவர்பீட்ஸ் புரோ 2ல் அறிமுகப்பட்டுள்ளது. ஆப்பிள் திறன்பேசிகளைப் போலவே, ஆண்டிராய்டு திறன்பேசிகளிலும் நல்ல இணக்கத்தோடு செயல்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிளில் பயன்படுத்தும் பெரும்பாலான அம்சங்களை ஆண்டிராய்டிலும் பயன்படுத்த முடியும். இந்த காதொலிப்பான் அடர் கருமை, குயிக் சாண்ட்(quick sand), அடர் ஊதா மற்றும் எலக்ட்ரிக் ஆரஞ்சு(Electric Orange) வண்ணங்களில் எனப் பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது இப்போது ஆப்பிளின் அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
- மு. இசக்கிமுத்து
