வண்ணமயமாகும் வாட்சாப்

வாட்சாப் அரட்டைகளின் உருக்கரு (theme) மாற்றிக்கொள்ளும் வசதியை அனைத்துப் பயனர்களுக்கும் அளித்துள்ளது வாட்சாப். இதனால் அரட்டைகளின் பின்னணியைத் (background) தனிப்பட்ட விருப்பத்திற்கேற்றபடி மாற்றிக்கொள்வது (customization) சாத்தியமாகியுள்ளது. இனி, பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வண்ணங்களால் வாட்சாப் அரட்டைப் பக்கங்களை அலங்கரித்துக்கொள்ளலாம்.

whatsapp theme update

பல உலக நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அரட்டைச் செயலியாக உள்ளது வாட்சாப். அந்நாடுகளில், குறுஞ்செய்திச் சேவைகளை (SMS) இறந்தகாலமாக்கிய செயலி இது. இருந்தாலும், அதன் தோற்றத்தைத் தனக்கேற்றவாறு வடிவமைத்துக்கொள்ள போதுமான தெரிவுகள் இல்லாமலிருந்தது. தன்னுடைய இரசனைக்கேற்ப, தன் அரட்டைப் பக்கத்தை அமைத்துக்கொள்வது பயனரின் உணர்வு சார்ந்தது. நம் வீட்டை நமக்குப் பிடித்தாற்போல அலங்கரிப்பதை இதனுடன் ஒப்பிடலாம். எனவே, வாட்சாப்பில் இது ஒரு குறையாகக் கருதப்பட்டது.

இந்தக் குறை தற்போது களையப்பட்டுள்ளது. வாட்சாப்பை வண்ணமயமாக்க, புதிய அரட்டை உருக்கருக்கள் வந்துவிட்டன. இவற்றை அணுகுவதற்கு, முதலில் வாட்சாப் அமைவுகளுக்குச் (settings) செல்லவேண்டும். பின், தேர்வுப்பட்டியலில் (menu) அரட்டைகள் பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கு, இருபதுக்கும் மேற்பட்ட முன்னமைவுத் (preset) தெரிவுகளைக் காணலாம். அவற்றுள் நமக்குப் பிடித்த உருக்கருவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

பின்னணியின் ஒளிர்வளவைச் (brightness) சரிசெய்தும் வெளிச்செல்லும் செய்தியின் நிறத்தைத் தீர்மானித்தும் உருக்கருக்களை தனிப்பட்ட முறையில் வடிவமைத்துப் பயன்படுத்தலாம். அதே நேரம் உள்பெட்டிக்கு வரக்கூடிய செய்திகளின் நிறம் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும். பயனரின் உருக்கரு, அடர்நிறமா அல்லது வெளிர்நிறமா என்பதைப்பொருத்து அது தீர்மானிக்கப்படும்.

வெவ்வேறு சுவர் ஒப்பனைத்தாள்களைப் (wallpapers) பயன்படுத்தலாம். ஒரே திடமான வண்ணத்தையோ, கைப்பேசியில் ஏற்கனவே உள்ள படத்தையோ கூட, சுவர் ஒப்பனைத்தாள்களுக்குப் பதில் பயன்படுத்தவும் வசதியுள்ளது. அரட்டைச் செய்திகள் கண்களுக்குத் தெரியும் விதத்தை (visibility) சுவர் ஒப்பனைத்தாள்களின் ஒளிர்வளவைச் சரிசெய்து அதிகரிக்கவும் முடியும்.

அமைவுகளில் சென்று அரட்டை உருக்கருக்களை மாற்றுவது செயலியின் அனைத்து அரட்டைப்பக்கங்களிலும் எதிரொலிக்கும். அவ்வாறில்லாமல், குறிப்பிட்ட சில அரட்டைகளுக்கு மட்டும்கூட, உருக்கருவை மாற்றும் வசதியுள்ளது. இதைச்செய்ய, குறிப்பிட்ட பயனரின் அரட்டைப் பக்கத்துக்குள் நுழையவேண்டும். பின், மேல் வலதுபக்க மூலையிலுள்ள மூன்று புள்ளிகளைத் தொடவேண்டும். தேர்வுப்பட்டியல் திறக்கும். அதில், அரட்டை உருக்கருவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பிறகு, மேற்கூறியபடி, அப்பக்கத்தைத் நாம் விரும்பும்படி அமைத்துக்கொள்ளலாம். இந்த மாற்றங்கள் பிற அரட்டைப் பக்கங்களில் எதிரொலிக்காது.

கடந்த செப்டம்பரில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட இந்த வசதிகள், இப்போது அனைத்து வாட்சாப் பயனர்களுக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல், ஐஓஎஸ் சாதனங்களுக்கும் இது பொருந்தும். பிறகென்ன? உங்கள் வாட்சாப் பக்கங்களை வண்ணங்களால் நிரப்பி மகிழவேண்டியதுதானே.

  • ரிஷி ரமணா
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now