நட்புக்காக ஒரு செயலி

ஜெல்லிஃபின் என்ற செயலி நண்பர்களோடு இணைந்து காணொளிகளைப் பார்க்கும் வகையிலான ஸின்க்பிளே (Syncplay) என்ற அம்சத்தை வழங்கிவருகிறது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நம் நண்பர்களைச் சந்திக்க முடியாமல், குடும்பத்தினரோடு வெளியே செல்ல முடியாமல் துன்பப்பட்டு வந்தோம். அப்போது நமக்கு ஆறுதலாக வந்ததுதான் காணொளிகளையோ திரைப்படங்களையோ ஒன்றாகப் பார்க்கும் அம்சம். அது அப்படி ஒன்றாகப் பார்ப்பது? ஒரு நண்பர்கள் குழு ஒன்றாகச் சேர்ந்து திரைப்படம் பார்க்கச் செல்ல விரும்புகிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வெளியே செல்ல முடியாது. அதற்கு மாற்றாக அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே திரைப்படத்தை அவரவர் இடத்தில் இருந்துகொண்டே அரட்டையடித்துக்கொண்டே பார்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அம்சம்தான் இது.

Syncplay

அச்சமயத்தில் நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் போன்ற அனைத்து ஒளிபரப்பும் தளங்களும் இந்த அம்சத்தைக் கொண்டுவந்தன. அது பயனர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு தளங்களும் அந்த அம்சத்தை நீக்கி வருகின்றன. அதோடு கடவுச்சொல் பகிர்வு தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக டிஸ்னி பிளஸ் 2023 இல் அதன் குரூப்வாட்ச் அம்சத்தை அமைதியாக நீக்கியது. இதே போன்று அமேசானின் வாட்ச் பார்ட்டி அம்சம் 2024ல் நீக்கப்பட்டது. போலவே பிளெக்ஸ் (Plex) தளமும் அதன் வாட்ச் டுகெதர் (watch together) அம்சத்தை நிறுத்துவதாகக் கடந்த சிலதினங்களுக்கு முன் அறிவித்தது. இவ்வாறு பல்வேறு தளங்களும் பின்வாங்குவது, பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு வருத்தமுறும் பயனர்களுக்காக இதே அம்சத்தை வழங்கி வருகிறது ஜெல்லிஃபின் என்ற ஒளிபரப்புத்தளம். இதனை மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், மேகோஸ், லினக்ஸ் கொண்டு இயங்கும் கணினிகளிலும் திறன்பேசி, டேப்லெட், திறன் தொலைக்காட்சி, மீடியா பிளேயர் என அனைத்திலும் பயன்படுத்த முடியும். இது வழங்கும் SyncPlay எனப்படும் அம்சம் உங்கள் நண்பர்களோடு சேர்ந்து திரைப்படங்களைப் பார்க்க உதவிபுரிகிறது.

நீங்கள் ஜெல்லிஃபின் செயலியைப் பதிவிறக்கம் செய்து, SyncPlay ஐப் பொத்தானை அழுத்துங்கள் . தொடர்ந்து உங்கள் நண்பர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்கவும் அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்றில் சேருங்கள். பின்னர் உங்கள் திரைப்படத்தைத் தொடங்கவும். உங்கள் நண்பர்களோடு சேர்ந்து திரைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்.

ஆனால் ஜெல்லிஃபினில் பிளெக்ஸ் போன்ற எளிய தொலைநிலை அணுகல் அம்சம் இல்லை. இதனை முதன் முறையாக இணைப்பதும் கொஞ்சம் கடினம்தான். அதனால் அதன் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள பயனர் வழிகாட்டியைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நீக்கினாலும் பயனர் ஆர்வம் காட்டுகிறார்கள் எனத் தெரிந்தால் ஒருவேளை பெருநிறுவனங்கள் மீண்டும் இந்தச் சேவையைக் கொண்டுவருவது பற்றி யோசிக்க வாய்ப்பிருக்கிறது.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now