ஸ்கைப் செயலியின் பயன்பாட்டை மே மாதம் முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
2010 காலகட்டங்களில் அனைத்து விதமான அலுவலகங்களிலும் நாயகனாக வலம் வந்தது ஸ்கைப் செயலி. இது வலைத்தள அடிப்படையிலான தகவல் தொடர்பு செயலியாகும். குரல் அழைப்புகள், காணொளி அழைப்புகள், அரட்டைகள் (chat), கோப்புப் பகிர்வு போன்ற பல்வேறு வசதிகளை வழங்கிவந்தது. ஸ்கைப் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இருந்தாலும், 2003 ஆம் ஆண்டு ஸ்வீடன், டேனிஷ் கணினி நிரலாளர்களான நிக்லஸ் சென்ஸ்ட்ரோம் (Niklas Zennström) மற்றும் ஜானஸ் ஃபிரிஸ் (Janus Friis) இருவரால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

ஸ்கைப் மக்கள் மத்தியில் பிரபலமானதற்கு முக்கியமான காரணம் அதன் காணொளி அழைப்பு அம்சமாகும். அதன் பிறகு வணிக பயன்பாடுகளுக்காகக் குறிப்பாக அலுவலகங்களில் அதன் பயன்பாடு அதிகரித்தது. ஸ்கைப்பின் மிகப்பெரிய வளர்ச்சியைப் பார்த்த ஈபே நிறுவனம் 2.6 பில்லியன் டாலருக்கு அதனை வாங்கியது. அந்த சமயத்தில் 480 மில்லியன் மக்கள் ஸ்கைப்பின் பயனர்களாக இருந்தனர்.
2011 இல் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்-ஐ 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. மைக்ரோசாப்ட் வாங்கிய பின்னர், Windows Live Messenger ஸ்கைப்-உடன் இணைக்கப்பட்டது. ஆனால் திறன்பேசிக்கான ஸ்கைப் செயலி இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னரே திறன்பேசி பயனர்கள் பிற செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்ததால், ஸ்கைப் பற்றிய வரவேற்பு குறையத் தொடங்கியது.
அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனமே ஸ்கைப்புக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) செயலியை அறிமுகப்படுத்தியது. கோவிட் பெருந்தொற்று ஊரடங்கு காலங்களிலும், பயனர்களுக்கு ஏற்றபடி மாற்றங்கள் இல்லாததால் அதன் பயன்பாடு குறைவாகவே இருந்தது.
இப்போது ஸ்கைப் செயலியின் முடிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதில் “நவீன தகவல்தொடர்புகளை வடிவமைப்பதிலும் எண்ணற்ற அர்த்தமுள்ள தருணங்களை வழங்கியதிலும் ஸ்கைப் ஒரு முக்கியமான பங்கு வகித்து வந்தது. மேலும் இப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.
மே 5 வரை மட்டுமே ஸ்கைப் செயல்படும். அதற்குள்ளாக ஸ்கைப் பயனர்கள் தங்கள் தரவுகள், குழுக்கள் போன்ற அனைத்தையும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலிக்கு மாற்றிக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஸ்கைப் கணக்கு மூலம் டீம்ஸ் செயலிக்குள் நுழையும்போது, அரட்டைகள், தொடர்பு எண்கள் தானாகவே தோன்றும்.
டீம்ஸ் செயலிக்கு இடம்பெயர வேண்டாம் என நீங்கள் விரும்பினால், அரட்டைகள், தொடர்பு எண்கள், அழைப்பு வரலாறு உள்ளிட்ட தரவுகளை உங்கள் திறன்பேசியில் பதிவிறக்கிக்கொள்ளலாம். இந்த மாறுதல் காலத்திலும் ஸ்கைப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய வாடிக்கையாளர்கள் ஸ்கைப் கிரெடிட், அனைத்துலக, உள்நாட்டு அழைப்புகளைச் செய்யவும் பெறவும் உங்களை அனுமதிக்கும். கட்டண ஸ்கைப் அம்சங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது.
தற்போதைய ஸ்கைப் கட்டணப் பயனர்கள் தங்கள் அடுத்த புதுப்பித்தல் காலம் முடியும் வரை தங்கள் ஸ்கைப் கணக்கினைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஸ்கைப் கிரெடிட் பயனர்கள் தங்கள் மீதமுள்ள ஸ்கைப் கிரெடிட்டையும் தொடர்ந்து பயன்படுத்தலாம். மே 5, 2025க்குள் சந்தா முடியாத பயனர்கள், ஸ்கைப் இணையதளத்திலிருந்தும் டீம்ஸ் செயலியிலிருந்தும் அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஸ்கைப் செயலிக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பத் தயாராகுங்கள் பயனர்களே.
- மு. இசக்கிமுத்து
