கூகுள் மேப்ஸ், வேஸ் இரண்டும் புகழ்வீச்சுள்ள வழிகாட்டும் செயலிகள். இரண்டுமே கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் தனக்கென தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு செயலிகளையுமே பயன்படுத்தும் பயனர்களின் எதிர்பார்ப்பு, இவற்றின் இணைப்பு சாத்தியப்படுமா? என்பதுதான். அதற்கு இவற்றின் அம்சங்களை நாம் ஒப்பிட வேண்டும்.

கூகுள் மேப்ஸ் அதிக அளவிலான பயனர்களைக் கொண்ட ஒரு செயலி. இதன் செயற்கைக்கோள் படங்கள், நிகழ்நேரத்தில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் அம்சங்கள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவந்துள்ளன. இருப்பினும், சாலை விபத்துகள், காவல்துறையினரின் கெடுபிடிகள், வேக வரம்புகள் போன்றவற்றின் தரவுகளை வழங்குவதில் கூகுள் மேப்ஸ் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறது.
இந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உறுதுணையாக வருகிறது வேஸ் செயலி. இதன் மொத்த இயக்கமும் பயனர்கள் வழங்கும் தரவுகளைப் பொறுத்தே இருக்கிறது. அதனால் விபத்துகளைப் பற்றியும் காவல்துறையினர் பற்றியும் விவரமான அதோடு வேகமாகத் தகவல்களை வழங்குகிறது. பயனர்களின் இந்தக் கட்டமைப்பு வேஸ் செயலியின் பலமாக உள்ளது. எல்லா செயலிகளுக்குமே பயனர்கள் முக்கியம்தான். ஆனால் வேஸ் செயலிக்கோ பயனர்களே உயிர்நாடி என்றே கூறிவிடலாம்.
இதன் முக்கியமான அம்சங்களுள் ஒன்று மாஸ்டர் செஃப் கதாபாத்திரம். உங்கள் பாதைகளை மாஸ்டர் செஃபின் குரலோடு வழிநடத்துகிறது வேஸ். ஆனால் வேஸ் செயலியிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள UI அம்சங்கள், வாகன ஓட்டிகளைப் பாதிப்பதாகப் புகார்கள் உள்ளன. அதோடு திரையைப் பெரிதாக்கும்போது ஏற்படும் இடர்பாடுகள் ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடிக்கின்றன.
இது வரைபடத்தை விடவும் சாலையில் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களையே அதிகம் வழங்குகிறது. இரண்டு செயலிகளிலும் நிறை குறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகச் சிறப்பாக உள்ளன. இரண்டு செயலிகளிலும் உள்ள தனித்துவமான சிறப்பம்சங்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. இரு செயலிகளுமே ஒரே நிறுவனத்தின் கீழ் வருவதால் பயனர்கள் இதை அவ்வப்போது வலியுறுத்துகின்றனர். இவற்றின் இணைப்பு இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
கூகுள் மேப் உலகளவிலான வரைபடச் சேவை. வேஸ் உள்ளூர், சந்து, பொந்துகளின் தகவல்களை அதிகமாகக் கொண்டிருக்கும் செயலி. அதுவும் பயனர் தரவுகளை அதிகம் பயன்படுத்துவது. நோக்கமும் செயல்பாடும் வெவ்வேறு என்பதால் இணைக்க முடியாது என்றுதான் பத்தாண்டுகளாகச் சொல்கிறார்கள்.
உலகளவில் வேஸ் பயன்படுத்தப்பட்டாலும் இந்தியாவில் வேஸின் பயன்பாடு குறைவாகத்தான் உள்ளது. தொடர்ச்சியாக இந்தியாவில் அதன் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
- மு. இசக்கிமுத்து
