கூகுள் மெய்நிகர் ஆடையகம்

ஆடை, அணிகலன்கள், ஒப்பனைப் பொருள்களை வாங்கும்போது நமக்கு எவ்வளவு பொருத்தம் என்று அணிந்து பார்த்து முடிவு செய்ய, தம் திறன்பேசியில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது கூகுள்.

Google Shopping

மிளகாய்ப்பொடி முதல் மடிக்கணினி வரை அனைத்துப் பொருள்களையும் நம்மால் இணையத்தில் வாங்கிக்கொள்ள முடியும். அவ்வாறு வாங்கும்போது பலரும் வாங்கத் தயங்கும் பொருள்கள் ஆடை, அணிகலன்களும் ஒப்பனைப் பொருள்களும்தான். ஏனெனில் இணையத்தில் ஒரு சட்டையைப் பார்க்கும்போது அது நமது நிறத்திற்கு ஏற்றதாக இருக்குமா? அளவு பொருத்தமாக இருக்குமா? என்ற பலவிதமான கேள்விகள் நம் மனத்தில் தோன்றும். இதே போலத்தான் ஒப்பனைப் பொருள்களின் நிலைமையும்.

இந்த குழப்பத்தைத் தீர்ப்பதற்கு புதிய அம்சம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். கூகுள் ஷாப்பிங் மூலம் இனிமேல் உங்கள் விருப்பம்போல உடைகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் உங்கள் பொருள்களை வாங்கும் அனுபவத்தை எளிதாக்கப்போகிறது கூகுள்.

இதை முயற்சி செய்ய, உங்கள் மனத்தில் உள்ள எந்த விதமான ஆடையையும் கூகுளில் தேடுங்கள். உங்களுக்கு விருப்பமான ஆடை கிடைக்கவில்லை எனில், திரையின் கீழே செல்லுங்கள். அங்கு Can’t find it? Create it என்ற பக்கம் காண்பிக்கப்படும் . அதில் உங்களுக்குத் தேவையான ஆடையின் விவரங்களை உள்ளிட்டு செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். பொருள்களை வாங்குவதற்கானப் பக்கத்தில் ‘உருவாக்கு,வாங்கு’ (Create & shop) என்ற பக்கத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

இதே போலான ஒன்றுதான் கூகுளின் மெய் நிகர் முயற்சி அம்சம் (Virtual try on) இது முன்பே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி உங்கள் உடல் அளவிற்கேற்ற துணிகளைத் தேர்வுசெய்துகொள்ள முடியும். முன்பு மேலாடைகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இது இப்போது அனைத்து ஆடைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கால்சட்டைகள், ஜீன்ஸ், என நீள்கிறது இதன் வரிசை.

இது மட்டுமின்றி கூகுளின் AR அழகு அம்சமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஒப்பனைகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொண்டு, நம்முடைய வாங்குதல் அனுபவத்தை எளிதாக்குகிறது. ஜெமினி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பயனர்கள், உதட்டுச்சாயம், மஸ்காராக்கள், ஐ ஷேடோக்கள் மற்றும் ஐலைனர்கள் போன்ற பல ஒப்பனைப் பொருட்களை எளிதாக வாங்கலாம். இந்த அம்சத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களைக் கூகுளின் வலைப்பதிவைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மூன்று அம்சங்களும் அமெரிக்காவில் மட்டுமே தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பயனர்களின் வரவேற்பைப் பார்த்து விரைவில் எல்லா இடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now