கூகுள் நிறுவனத்தின் நோட்புக் எல்எம் குறிப்பேடு அறிமுகமாகி கிட்டத்தட்ட ஈராண்டுகளில் தற்போதுதான் பொதுமக்களின் கவனத்தைக் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.
எல்எம் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகள் குறுகிய காலத்தில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. தனக்குத் தேவையான தகவல்களை கூகுளில் தேடிப் பெறுவதைவிட இவ்வகை அரட்டைச் செயலிகளுடன் உரையாடிப் பெறுவதை மனிதர்கள் விரும்புகிறார்கள். வழங்கும் தகவல்களில் குறைபாடுகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட தனக்கென்று கிடைத்திருக்கும் தனித்துவமான உதவியாளர் போலவே மனிதர்கள் இவற்றைப் பாவிக்கின்றனர்.

மொழி மாதிரிகளிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்றாலும் குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளுக்கு குறிப்பிட்ட அரட்டைச் செயலிகள்தாம் சரியாக இருக்கும் என்று பயனர்கள் வகைப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கவிதையோ கதையோ எழுதுவதென்றால் சாட்ஜிபிடி சிறப்பாகச் செயல்படுகிறது. வெண்பா எழுத கிளாட் செயலியே சிறப்பானது. கணிதப் புதிர்களுக்கு விடை காண சாட்ஜிபிடி போலவே டீப்சீக் செயலியும் துல்லியமானது. இப்படி வகைக்கொன்றாக மக்கள் பிரிப்பதைப் பார்த்து நிறுவனங்களும் குறிப்பிட்ட பயன்சார்ந்து தங்கள் மொழிமாதிரிகளை உருவாக்க ஆர்வம் காட்டுகின்றன.
கூகுள் நிறுவனத்தின் நோட்புக் எல்எம் குறிப்பெடுக்கும் அவசியம் உள்ளவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்பவர்கள் நிறைய குறிப்புகள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. எழுத்து, குரல், காணொளி என எவ்வகைக் குறிப்புகளாக இருந்தாலும் ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்தச் செயலி உதவுகிறது. அது மட்டுமின்றி ஏதோ ஒரு தகவல் வேண்டுமெனில் நாம் ஒவ்வொன்றாகத் தேட வேண்டாம். தகவலைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினால் போதும். தகவலைத் தேடித் தருவதோடு எந்தக் கோப்பில் இருக்கிறது என்பதையும் சொல்கிறது.
தேடுவதற்கு மட்டுமல்ல பொதுவாக நாம் கொடுக்கும் அனைத்து வகைக் கோப்புகளையும் ஆராய்ந்து சுருக்கித் தரவோ, சரிபார்க்கவோ, பட்டியலிடவோ செய்யலாம். மாணவர்கள் தாங்கள் படிக்க வேண்டிய அனைத்து பாடங்களையும் பதிவேற்றிவிட்டு கேள்வி கேட்டு பதில் பெறுவதன் மூலம் எளிதாகப் படிக்கலாம்.
கல்விப் பயன்பாடு மட்டுமல்ல, அலுவலக வேலைக்கும் பயன்படும். நிறைய தகவல்கள் உள்ள கோப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்க ஒவ்வொன்றையும் வரிக்கு வரி படிக்க வேண்டியதில்லை. அனைத்தையும் நோட்புக் எல்எம் உள்ளே போட்டுவிட்டு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறிப்பிட்ட பொருளின் விற்பனை எத்தனை விழுக்காடு உயர்ந்துள்ளது என்று கேட்கலாம். ஆராய்ந்து பதில் சொல்லும். கொடுக்கும் பதில் எங்கிருந்து பெறப்பட்டது என்ற ஆதாரமும் சேர்ந்தே வருவதால் நம்பகத்தன்மை கூடுகிறது.
இணையத்தளம், யூட்யூப் காணொளிகள் போன்று எல்லா வகையிலும் தகவல்களை உள்ளீடு செய்ய முடியும். நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதெனில் அதைக் கொடுத்து என்னென்ன முக்கியமான அம்சம் என்று கேட்கலாம். செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், தங்கள் குறிப்புகளை வகைப்படுத்தி எழுத்தை மேம்படுத்தலாம். நீண்ட நேர்காணலின் குரல் பதிவை உள்ளீடு செய்து, தகவல்களை கால வரிசைப்படித் தரச்சொல்லலாம். வீடு வாங்கப்போகிறோம் என்றால் பத்திரத்தில் சட்டவிதிகளைச் சரிபார்க்கவும் பயன்படுத்தலாம்.
நீண்ட தகவல்களைப் படிப்பதற்குப் பதில் நோட்புக் எல்எம் மூலம் சுருக்கமாகத் தகவல்களைப் பெறலாம். நமக்காகக் குறிப்பெடுக்கும் தனிப்பட்ட உதவியாளராகவே இச்செயலி செயல்படுகிறது.
