மெட்டா நிறுவனம் யுனெஸ்கோ அமைப்போடு இணைந்து செயற்கை நுண்ணறிவில் அதிகம் பயன்படுத்தப்படாத மொழிகளை மேம்படுத்தும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுள் மொழிபெயர்ப்பானில் நமக்குத் தேவையான ஒன்றை மொழிபெயர்த்துப் புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இந்த இயந்திர மொழியை நமக்கேற்ற நடையில் கொண்டுவர நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றன. தற்போது உள்ள ஜெமினி, கிளாட், சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற மொழிமாதிரிகளின் மொழிபெயர்ப்புச் சேவை, முந்தைய மொழிபெயர்ப்புத் தரத்தைவிடப் பல மடங்கு மேம்பட்டதாக உள்ளது. மெட்டாவின் அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி (FAIR) குழுவானது இயந்திர மொழிபெயர்ப்பை மெருகூட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இது மனிதப் பகுத்தறிவு சிந்தனையைப் பயன்படுத்தி, மொழிபெயர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், மெட்டா அறிமுகப்படுத்திய NLLB திட்டம், பல மொழிகளுக்கான உணர்வுப்பூர்வமான இயந்திர மொழிபெயர்ப்பு மாதிரியாக இருந்தது. இது மொழிபெயர்ப்பிற்கான எதிர்கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளத்தை உருவாக்கியது.
இந்த ஆராய்ச்சியை ஐநா அமைப்பின் யுனெஸ்கோ மற்றும் ஹக்கிங் ஃபேஸ் ஆகியவற்றோடு இணைந்து செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது மெட்டா. இப்போது பல்வேறு பேச்சுவழக்குகளைச் செயற்கை நுண்ணறிவில் இணைத்து அதனை மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக பணியாற்ற மொழி தொழில்நுட்ப கூட்டாளர் திட்டம் என்பதையும் தொடங்கியுள்ளது.
இது அதிகளவில் பயன்படுத்தப்படாத, மின்னணு வடிவம் பெறாத மொழிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மெட்டாவோடு இணைந்து பணியாற்ற விரும்பும் அமைப்புகளுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பத்துமணி நேரத்திற்கும் அதிகமான குரல் பதிவுகள் வைத்திருருந்தால் நீங்களும் இதில் பங்கேற்கலாம். அதோடு எண்ணற்ற எழுத்துப் பிரதிகளையும் எதிர்பார்க்கிறது மெட்டா.
இதில் இணைபவர்கள் கூகுளோடு இணைந்து பணியாற்ற முடியும். அதோடு மெட்டாவின் ஆராய்ச்சிக் குழுவால் நடத்தப்படும் தொழில்நுட்பப் பட்டறைகளுக்கான அனுமதியும் கிடைக்கும். அங்கு மொழித் தொழில்நுட்பங்களை உருவாக்கத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவமும் வழங்கப்பட்டுள்ளது.
இதோடு செயற்கை நுண்ணறிவுகளின் மொழிபெயர்ப்புத் தரத்தை அளவிடும் பெஞ்ச்மார்க் என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மொழியியல் வல்லுநர்களால் கவனமாக வடிவமைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. பெஞ்ச்மார்க்கைப் பற்றிய மேலதிகத் தகவல்களை ஹக்கிங் ஃபேஸ் தளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
- மு. இசக்கிமுத்து
