விரைவான மின்கலமேற்றித் தொழில்நுட்பம் (fast charging) கடந்த பத்தாண்டுகளாக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. மேற்கத்திய நிறுவனங்களை விட சீன நிறுவன மின்சேமிப்புக் கலன்கள் இதில் முன்னணியில் உள்ளன. வாவேயின் சூப்பர் சார்ஜ் (SuperCharge) தொடங்கி, ஹைப்பர் சார்ஜ் (HyperCharge) வரையிலான தொழில்நுட்பங்கள் திறன்கருவிகளின் செயல்திறனை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. எனினும், இது மின்கலத்தில் ஆயுளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது

அதிக மின்னோட்டம் உடனடி மின்னேற்றத்தை வழங்கினாலும், திறன்பேசியின் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. அதிக வெப்பம் மற்றும் மின்னழுத்தக் கட்டுப்பாடு மின்கலத்தின் ஆயுளை குறைக்கலாம்.
மின்கலத்தின் ஆயுள் பற்றிய கவலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ஆப்பிள், கூகுள், போன்ற திறன்பேசி நிறுவனங்கள், இரவு நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மின்னேற்றம் (optimized overnight charging), மற்றும் மின்கலன் ஆரோக்கியக் கணிப்புகள் (battery health monitoring) ஆகிய அம்சங்களை வழங்கத் தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள், வேகமான மின்னேற்றத்தைப் பயனர் விரும்பினால் மட்டுமே செயல்படுத்துகின்றன.
தொலைப்பேசி மின்னேற்றத்தின் போது வெப்பநிலை 40°C வரை இருப்பது உகந்தது, அல்லது 35°C குறைவாக இருப்பது சிறந்தது. அதிக சக்தியுடன் குறைந்த வெப்பநிலையில் மின்னேற்றமாகும் திறன்பேசியாக ஒன்பிளஸ்13 இருக்கிறது. நீடித்த செயல் திறனும், வேகமான மின்னேற்றி திறனும் கொண்ட திறன்பேசியாக சாம்சங் கலக்சி எஸ் 25 அல்ட்ரா சுட்டப்படுகிறது. சமநிலையான மின்னேற்றும் திறனுடைய மின்கலம் கொண்ட ஆரோக்கியமான திறன்பேசியாக ஒப்போ பைன்டு ஏக்ஸ் 8 ப்ரோ உள்ளது. ஸியோமி 15 அல்ட்ரா மற்றும் ஹானர் மாஜிக் 7 ப்ரோ போன்றவை 40°C வரை சூடாகியதால், மினகலத்தின் ஆயுட்காலம் குறைவாகலாம். கூகிள் பிக்சல் 9 ப்ரோ மற்றும் எக்ஸ் எல் (XL) அதிக வெப்பத்துடன் செயல்பட்டு, மிகவும் மெதுவாக மின்னேற்றம் ஆகின்றன.
எனினும், வெப்பநிலை மட்டுமே மின்கலத்தின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்காது. மின்கலத்தின் உயர் மின்னோட்டம் கையாளும் திறனை குறிக்கும் அளவீடான சி- மதிப்பீடு (C-rating) மற்றும் சார்ஜிங் சுற்று கட்டமைப்பு (USB Charging Circuitry), ஆகிய காரணிகளையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. சில நிறுவனங்கள், சிலிக்கான் – கார்பன் லித்தியம் -அயன் மின்கலன்களை (silicon-carbon Li-ion batteries) பயன்படுத்துகின்றன. இது சிறப்பான வெப்பக் கட்டுப்பாட்டைக் கொடுக்கும்.
மின்கலத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பல நிறுவனங்கள், 80% மின்னேற்ற வரம்பு வைத்துள்ளன. அதோடு பயனர் கட்டுப்படுத்தும் வேகமான மின்னேற்றி அம்சத்தையும் வழங்குகின்றன.
- நவீனா
